பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக புதுமடம் ஹலீமிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தற்போது பொருளாதார ரீதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் காலங்காலமாக இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்ததாகவே இன்றளவும் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது இதுவரை இருந்ததில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் இவை. இதில் தற்போது சூழ்ச்சி செய்யப் பார்க்கிறார்கள். விளிம்பு நிலை மக்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் தற்போது பொருளாதாரத்தின் அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அடிநாதமே சிதைந்துவிடும்.
இந்தியாவிலேயே இட ஒதுக்கீடு என்பது மற்ற எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கும் இட ஒதுக்கீடு. எந்த மாநிலத்திலும் இதை இன்றளவும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இந்த இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்தாலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தமிழகம் எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு என்பது எந்த வகையில் சரியான ஒன்று என்றே கேட்கிறோம். இது மிகத் தவறான உதாரணமாக இருக்கப்போகிறது என்ற அடிப்படையில் அதனை எதிர்க்கிறோம்.
வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டிற்குக் காங்கிரஸ் பாஜக இரண்டு பேருமே ஆதரிக்கிறார்கள். வட இந்தியாவில் அவர்கள் இந்த இட ஒதுக்கீட்டிற்காக யாரும் போராடப் போவதில்லை. அங்கே குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர் சாதியினர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் குறி வைத்தே இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி சார்ந்தே இருந்து வந்துள்ளது. பொருளாதார அளவீடுகள் என்பதே நம்மிடம் இட ஒதுக்கீட்டில் இதுவரை இருந்ததில்லை. அதனால் இந்தப் பிரச்சனை தமிழகம் இதுவரை பார்த்திராத புதிய பிரச்சனையை மத்திய அரசு இதன் மூலம் கொண்டு வந்துள்ளது.
இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தைக் கொண்டு வந்தால் சமூகநீதி கோட்பாடே சிதைந்து போய்விடும். தற்போது தமிழகத்தில் இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளார்கள். ஏற்கனவே உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று தமிழக அரசு தெளிவாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் தேசிய அளவில் ஆதரிக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கிறதே என்ற கேள்வி கூட வருகிறது. மாநிலங்களுக்கு மாநிலம் இது வேறுபடுகிறது. கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிரணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒன்றாக இருக்கிறார்கள். இதை வட மாநிலத்தில் எதிர்த்தால் வாக்கு பாதிக்கப்படுமென நினைக்கிறார்கள்.
இந்த இட ஒதுக்கீடு விவகாரத்தில் கூட ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் 77 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிகரித்து அதில் 10 சதவீதம் தருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். பாஜகவின் நோக்கம் இதுதான். நீங்கள் எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளுங்கள்; ஆனால் சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை நீக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்கள். இவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இதை நீதிமன்றம் வரைக் கொண்டு சென்று அனுமதி வாங்கி இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்தாலே அவர்களின் அரசியல் நமக்குத் தெரிய வரும்.