Skip to main content

நடுரோட்டில் முதல்வருக்கு அரசியல் பாடம் எடுத்த முதியவர்... வியந்து கேட்ட மு.க. ஸ்டாலின்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

dh

 

நடிகர் திலகம் சிவாஜி ஒரு படத்தில், ‘பிரிக்க முடியாதது, பிரிந்தே இருப்பது...’ என ஃபேமசான ஒரு வசனம் பேசியிருப்பார். சிவாஜியின் அசால்ட்டு வசனத்துக்கு இணையாக நடிகர் நாகேஷ் நடித்திருப்பார். அதைப் போல் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினையும் உடற்பயிற்சியையும் பிரிக்க முடியாதது என்றால் அது மிகையல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிகாலையில் ஏதாவது பூங்காவில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார். அந்த வகையில் தற்போதைய கடுமையான பணி சூழ்நிலைகளிலும் தினமும் நடைபயிற்சியை தொடர்ந்துவருகிறார். நடைபயிற்சி செய்யும்போது எதிரில் வரும் பொதுமக்களின் குறைகளை, அவர்களின் ஆலோசனைகளைப் பொறுமையாக கேட்கும் வீடியோக்களை நாம் அடிக்கடி இணையதளங்களில் பார்க்கலாம். 

 

அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிலர் முதல்வர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவரிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசினார்கள். அப்போது அப்போது எதிரில் வந்த பொதுமக்கள் அவருடன் பேச முயன்றனர். அவர்களுடன் சிறிது நேரம் முதல்வர் பேசி மகிழ்ந்தார். அப்போது பெண் ஒருவர், "எப்படி நீங்கள் இத்தனை வயதிலும் மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அதைக் கேட்டு சிரித்த முதல்வர், பதிலேதும் சொல்லவில்லை. மேலும் அங்கிருந்த மற்றவர்கள், அவர் மக்களுக்காக எல்லா திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்வதாக கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாக கேட்ட அவர், வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

 

இந்நிலையில் நேற்று (07.10.2021) காலை முதல்வர் வாக்கிங் செல்லும்போது அதைவிட சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது எதிரில் வந்த முதியவர் ஒருவர் அவரிடம் மிக உரிமையாக பேசினார். அப்போது அந்த முதியவர், "நீங்கள் நன்றாக ஆட்சி செய்கிறீர்கள். ஆட்சியில் கரப்ஷன் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழகத்தை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும். நல்ல ஆட்சியை தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்றார். இவ்வாறு பல கட்டளைகளை போகிறபோக்கில் முதல்வரிடம் சொல்ல, அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், “சரிங்க” என்று கூறிவிட்டு அவருக்கு வணக்கம் வைத்துச் சென்றார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.