Skip to main content

நான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு செல்வேன்... பிரியங்கா மரணத்தில் வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணை ஓடுகின்ற பேருந்தில் வைத்து பாலியல் கொடுமைக்குள்ளாக்கி குற்றுயிரும் குலையுயிருமாக தூக்கி எறிந்தார்கள். அந்தப் பெண்ணின் அங்கங்களில் காமக் கொடூரன்கள் செய்த செயல்களை கண்டு ஒட்டுமொத்த இந்திய சமூகமே அலறியது. நிர்பயாவுக்கு நடந்தது போல இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என "நிர்பயா நிதி' என ஒரு பெரிய நிதியையே உருவாக்கியது மத்திய அரசு. நிர்பயாவாவது குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார். நிர்பயா வழக்கில் அவரை பாலியல் கொடுமைக்குள்ளாக்கியவர்கள் மாட்டிக் கொண்டார்கள். அதுபோல எந்தத் துப்பும் கிடைக்கக்கூடாது என தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொடூரமாக துன்புறுத்தியதோடு அவரை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

 

priyanka



ஹைதராபாத் நகருக்கான விமான நிலையம் அமைந்துள்ள பகுதியின் பெயர் ஷம்சாபாத். அந்த ஏர்போர்ட்டில் பொறியாளராக வேலை பார்ப்பவர் ஸ்ரீதர் ரெட்டி. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஸ்ரீதருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் பிரியங்கா, இன்னொருவர் பாவ்யா. இந்த பாவ்யா அதிகாலை 3 மணிக்கு ஷம்சாபாத் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கிறார். "கடந்த 27-ம் தேதி எனது அக்கா பிரியங்கா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாலை ஐந்தரை மணிக்கு கார்ச்சி ஹெதி பகுதியிலுள்ள ஆலிவ் கிளினிக்கிற்கு சிகிச்சை அளிக்க சென்றாள். 9.22 மணிக்கு அவள் எனக்கு போன் செய்தாள். "நான் ஷம்சாபாத்தில் மிகவும் வெளிச்சம் நிறைந்த சுங்கச் சாவடியில் நிற்கிறேன். எனது ஸ்கூட்டியில் பஞ்சர் ஏற்பட்டுள்ளது. அதை ரிப்பேர் செய்து தருகிறேன்' என யாரோ சிலர் கொண்டு போனார்கள். அவர்கள் "பஞ்சர் கடை மூடியிருக்கிறது' என ஸ்கூட்டியை திருப்பிக் கொண்டு வந்து விட்டார்கள். பக்கத்தில் வேறு கடை பார்க்கிறேன் என என் ஸ்கூட்டியை கொண்டு சென்று விட்டார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. இங்கு லாரிகளும் லாரி டிரைவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஸ்கூட்டியை கொண்டு சென்றுள்ளார்' என்றாள். நான் மறுபடியும் 9.44 மணிக்கு அவளுக்கு போன் செய்தேன். அவளது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இரவு பத்தரை மணி வரை பார்த்தேன். அவள் வரவில்லை. நான் போலீசை தொடர்பு கொண்டு புகார் சொன்னேன். அவர்கள் அதிகாலை 3 மணிக்கு எனது புகாரை ஏற்றார்கள்'' என்கிறார் பாவ்யா.

 

incident



27-ம் தேதி காணாமல் போன பிரியங்கா பற்றி 28-ம் தேதி காலை 9 மணிக்கு ஷாத்நகர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்தது. அதை தந்தவர் ஒரு விவசாயி. "நான் தினமும் காலை 5 மணிக்கு பாலை எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வது வழக்கம். சட்டன்பள்ளி கிராமத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை என்.எச்.44-ல் அமைந்துள்ள பாலத்தருகே ஏதோ ஒன்று எரிந்து கொண்டிருந்தது. முதலில் அது குளிருக்காக யாரோ கொளுத்திய நெருப்பு என நான் கடந்து சென்று விட்டேன். மறுபடியும் காலை 7.30 மணிக்கு திரும்ப வந்து பார்த்தபோது 22-25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் அங்கு கிடந்தது'' என்கிறார்.

 

incident



ஷம்சாபாத் காவல் நிலையத்தில் பிரியங்கா என்கிற பெண் காணாமல் போன புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிரியங்காவின் உறவினர்கள் எரிந்து கிடந்தது பிரியங்காதான் என உறுதி செய்தார்கள். உடனே போலீசார் சி.சி.டி.வி. பதிவுகள், பார்த்த சாட்சியங்கள் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்தார்கள். அங்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் குற்றவாளிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் முகம்மது அரிப் (எ) அரிப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன், சிந்த குண்டா சென்ன கேசவலு (எ) சென்னா ஆகியோரை கைது செய்தோம். இவர்கள் அனைவரும் நாராயணபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஆரிபும், சென்னாவும் லாரி டிரைவர்கள் மற்ற இருவரும் லாரி கிளீனர்கள்.

 

incident



26-ஆம் தேதி ஆரிபும் கிளீனர் ஜொள்ளு சிவாவும் ஒரு லாரியை கொண்டு வந்து பிரியங்கா கடந்து போன சுங்கச்சாவடி அருகே நிறுத்தியுள்ளார்கள். அவர்கள் லாரியில் கொண்டு வந்த பொருட்களை வாங்க வராததால் அந்த லாரியில் அவர்களுடன் வந்த ஜொள்ளு நவீன், சென்னா ஆகியோருடன் 27-ம் தேதி மாலை வரை காத்திருந்தார்கள். 27-ம் தேதி மாலை 6 மணிக்கு சுங்கச் சாவடியில் பிரியங்கா தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டுச் சென்றார். நால்வரும் அங்கே அமர்ந்து மது அருந்தியபோது பிரியங்காவை பாலியல் கொடுமை செய்ய, திட்டமிட்டார்கள். ஜொள்ளு நவீன் பிரியங்காவின் ஸ்கூட்டியில் இருந்த காற்றை பிடுங்கினான். தனது வேலையை முடித்து விட்டு பிரியங்கா இரவுப் பேருந்தில் வந்திறங்கினார். ஸ்கூட்டியில் காற்று இல்லாததால் தள்ளிக் கொண்டு வந்த பிரியங்காவிடம் "உங்கள் ஸ்கூட்டியின் டயர் பஞ்சராகி விட்டது. அதை லாரியின் கிளீனர் ஜொள்ளு சிவா பழுது நீக்கி கொண்டு வருவார்' என பேசினார். பிரியங்கா அதற்கு ஒத்துக் கொண்டார். உடனே தனது தங்கையை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி "எனக்கு பயமாயிருக்கிறது' என சொன்னார். அவரது தங்கை, பிரியங்காவை நல்ல வெளிச்சமுள்ள சுங்கச் சாவடிக்கு வந்து நிற்குமாறு கூறினார். ஸ்கூட்டியை பழுது நீக்க கொண்டு சென்ற ஜொள்ளு சிவா ஒரு கட்டிடத்தின் அருகே ஸ்கூட்டியை நிறுத்தி "பழுது பார்க்கும் கடை மூடிவிட்டது' என்று சொன்னார். அதையும் தனது தங்கையிடம் பிரியங்கா தெரிவித்தார். அதன்பிறகு நால்வரும் சேர்ந்து பிரியங்காவை கட்டிடத்திற்குள் வாயை மூடி தூக்கிச் சென்றார்கள். நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக பிரியங்காவை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். கடைசியில் ஆரிப், பிரியங்காவின் மூக்கையும் வாயையும் மூடினார். அந்த மூச்சுத் திணறலில் பிரியங்கா இறந்து போனார். ஆரிபும் சென்னாவும் பிரியங்காவின் உடலை லாரி கேபினில் கொண்டு போய் வைத்தார்கள். ஜொள்ளு சிவாவும், ஜொள்ளு நவீனும் ஸ்கூட்டிக்கு காற்று நிரப்பிக் கொண்டு அதில் பயணம் செய்தார்கள். பிரியங்காவின் உடலுடன் லாரியை ஆரிப் ஓட்டினான். ஸ்கூட்டியில் சென்றவர்கள் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கி வந்தார்கள்.

சட்டன் பள்ளி கிராமத்துக்கு அருகேயுள்ள பாலத்தின் கீழ் பிரியங்காவின் உடலை போட்டு பெட்ரோல் மற்றும் லாரியில் இருந்த டீசலை ஊற்றி எரித்தார்கள். உடல் நன்றாக எரிந்து விட்டதா என வேடிக்கை பார்த்துவிட்டு ஸ்கூட்டியின் நம்பர் பிளேட்டுகளை கழட்டினார்கள். அதை பிணம் எரிந்து கிடந்ததற்கு சிறிது தூரத்தில் வைத்து விட்டு தங்களது லாரியை எடுத்துக் கொண்டு அதில் இருந்த சரக்கை டெலிவரி செய்ய சென்றார்கள் என்கின்றன போலீஸ் ஆவணங்கள்.

பிரியங்கா காணாமல் போய்விட்டார் என தெரிந்ததும் அவரது சகோதரி பாவ்யா காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், காவல் நிலையத்திற்கும் புகார் செய்தார். அவரது புகாரை ஏற்று உடனடியாக போலீசார் செயல்படவில்லை. "உங்க அக்கா எவனோடயாவது ஓடிப் போயிருக்கும்' என அலட்சியமாக பதில் சொல்லியிருக்கிறார்கள். "சம்பவம் நடந்த சுங்கச்சாவடி என் லிமிட்டில் வரவில்லை' என்கிற எல்லைச் சண்டையெல்லாம் முடிந்து அதிகாலை 3 மணிக்கு புகாரை போலீசார் வாங்கினார்கள் என போலீசார் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.


"பாலியல் குற்றங்களை பொறுத்தவரை தெலங்கானா மாநிலத்தில் மிகக் குறைவான புகார்களே பதிவாகியிருக்கின்றன. உ.பி., மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இதில் முதல் இரண்டு இடத்தில் இன்றளவும் இருக்கின்றன. இன்றும் இந்தியா முழுவதும் பெண்கள் தொடர்பான விவகாரங்களில் போதிய அக்கறை காட்டுவதில்லை. இதுதான் நிர்பயா சம்பவத்திற்குப் பிறகும் அதை விட மோசமான சம்பவம் நடக்க காரணமாகிவிட்டது'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


ஐதராபாத் மக்களும் ஒட்டுமொத்த தெலங்கானா, ஆந்திர மக்களும் பொங்கியெழுந்து விட்டார்கள். குற்றவாளிகளை அடைத்து வைத்த போலீஸ் நிலையத்தை ஆயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு அவர்களைக் கொல்ல முயன்றார்கள். உடனடியாக தண்டனை தரும் வகையில் இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றத்தை அமைத்துள்ளார் முதல்வர் சந்திர சேகரராவ். என்ன பயன்? ஏழு வருடத்திற்கு முன்பு நடந்த நிர்பயா வழக்கு குற்றவாளிகளே இன்னமும் தூக்கில் போடப்படாமல் இருக்கிறார்களே? என கொந்தளிக்கிறார்கள் பொதுமக்கள்.