மீசை வைத்த மோனலிசா!

உலக புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஓவியத்தை ரசிக்காதவர் எவரும் இருக்க முடியாது. இந்த ஓவியம் லியனார்டோ டாவின்சி என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் வரையப்பட்டது. இன்று வரை மிகவும் புகழ்பெற்ற ஓவியமாக திகழ்ந்து வருகிறது. இதனை பல ஓவியர்களும் மறுஉருவாக்கம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட மோனலிசா ஓவியத்தை தன் பாணியில் நகைச்சுவையாக ஒரு ஓவியர் வரைந்திருக்கிறார். அதனை பத்திரமாக காத்து வந்த ஓவிய ஆர்வலர் ஒருவர் சமீபத்தில் அந்த ஓவியத்தை 750,000 டாலருக்கு (4 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கும் மேல்) விற்பனை செய்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஓவியக் கண்காட்சியில் தான் இந்த விற்பனை நடந்தது. ஆர்தர் ப்ராண்ட் என்ற அமெரிக்கர் தனது சேகரிப்பில் இருந்த இந்த ஓவியம் இவ்வளவு விலை போகுமென்று எதிர்பார்க்கவில்லையாம். 1964இல் 'மார்ஷல் ட்யூசாம்ப்' என்ற ஓவியர்தான் மோனலிசா ஓவியத்திற்கு தாடி , மீசை வைத்து அழகு பார்த்தவர். இப்பொழுது இது இணையத்தில் பரவி, அனைவரும் அதனை ரசித்து வருகின்றனர். இந்த ஓவியத்தின் புகழினால் மற்ற ஓவியங்களும் நல்ல விலைக்கு விற்றன. ஓவியர் 'மார்ஷல் ட்யூசாம்ப்', இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பாவில் இருந்த 'தாதாயிசம்' எனப்படும் கலை இயக்கத்தை சேர்ந்தவர். இந்த இயக்கம், கலைகளில் இருந்த பழைமை, இறுக்கம், ஒழுக்கமெல்லாவற்றையும் உடைத்து, ரகளையான பல புதிய விஷயங்களை செய்த இயக்கமாகும். இன்றிருக்கும் மீம்ஸ் கலாச்சாரத்தின் முன்னோடிகள் இவர்கள்தான் போல...
ஹரிஹரசுதன்