இந்த ஆண்டு தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா தீர்மானம் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும் தற்போது வரை தமிழக ஆளுநர் இந்த மசோதாவின் மீது முடிவு எடுக்கப்படாத நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர் விரைவாக மசோதாவின் மீது முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இதனால் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை கவுன்சிலிங் தாமதமாகும் என கல்வியாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஆளுநரின் இந்த தாமதப்படுத்தும் செயல்பாட்டிற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா பற்றி முடிவெடுக்க மூன்றிலிருந்து நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என ஏற்கனவே அமைச்சர்களிடம் நான் தெரிவித்திருந்தேன். நீட் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு மசோதா பற்றி அனைத்து கோணங்களிலும் ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.