கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டையில் தொடர்ந்து நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டத்தின் 26-வது நாளில் வங்கிகளில் பணம் எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் அனைத்து ஜமாஅத் இஸ்லாமிய பொதுமக்களும் லால்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. வங்கி திறந்ததும் உள்ளே சென்று எங்கள் அனைவருக்கும் நாங்கள் வைத்துள்ள வங்கி கணக்கில் இருந்து அனைத்து பணத்தை எடுத்துக் கொள்கிறோம் என்று வங்கி மேலாளரிடம் கூறினார்கள். வங்கி மேலாளர் அவ்வளவு பணம் வங்கியில் இருப்பு இல்லை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதனால் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு, பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். அப்போது வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எங்களுடைய பணம் முழுமையாக கிடைக்க வேண்டும். மத்திய மோடி அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் பல கட்டமாக தொடரும் என்று கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து வங்கியில் இருப்பு இருக்கும் வரை ஒருவருக்கு ரூபாய் 49 ஆயிரத்து 900 என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனை அனைவருக்கும் கொடுக்க முடியாததால் வங்கியில் பணம் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினமும் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.