மார்ச் 16 – மொழிவழி மாநிலம் உருவாக்கிய பொட்டி ஸ்ரீராமுலு பிறந்தார்
என் மொழிக்காரன் தான் என் மாநிலத்தை ஆள வேண்டும், என் மாநிலத்தில் உருவாகும் ஆற்று நீரை உனக்கேன் தர வேண்டும் என இன்று மொழியை வைத்தும், இனத்தை வைத்தும் சண்டைகள் வருகிறது. அந்த சண்டைகளுக்கு மூலக்காரணம் மொழிவழியாக மாநிலங்களை பிரித்தது தான். மொழிவழியாக மாநிலத்தை பிரிப்பதை ஆரம்பத்தில் பலரும் எதிர்த்தனர். ஆனால் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட பொட்டி ஸ்ரீராமுலு என்கிற சுதந்திர போராட்ட வீரர், மொழிவழி மாநிலம் வேண்டும்மென உண்ணாவிரதம்மிருந்து உயிர்விட்டதால் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தால் மொழிவழி மாநிலம் உருவாக்க உத்தரவிட்டார் பிரதமராக இருந்த நேரு.
யார் அந்த பொட்டி ஸ்ரீ ராமுலு?
ஆந்திராவில் குருவைய்யா – மகாலட்சமி என்கிற தம்பதியின் மகனாக 1901 மார்ச் 16ந்தேதி பிறந்தார் பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆந்திராவின் பெரும்பான்மை மாவட்டங்கள் இருந்தது. அப்போதைய நெல்லூர் மாவட்டமும், மாநில பிரிப்புக்கு பின் உருவான பிரகாசம் மாவட்டத்தில் தற்போது உள்ளது ராமுலுவின் சொந்த கிராமமான படமட்டிபள்ளி.
ராமுவுக்கு சிறுவயதாகும்போதே அவரது குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. சென்னையில் பள்ளிக்கல்வியை கற்றவர் மும்பைக்கு சென்று கல்லூரியில் சேர்ந்தார். விக்டோரிய ஜீப்ளி கல்வி நிறுவனத்தில் படித்தவர் மும்பை இரயில்வேயில் பணிக்கு சேர்ந்தார். பணியில் இருந்தபடி சுதந்திரபோராட்டங்களில் கலந்துக்கொண்டார். நான்கு ஆண்டுகள் ரயில்வேயில் மாதச்சம்பளம் 250 ரூபாய்க்கு பணியாற்றியபோது இவருக்கு திருமணம் நடைபெற்றது. சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அகிம்சை வழியை ஏற்றுக்கொண்ட ராமு சாத்வீக போராட்டங்களில் கலந்துக்கொண்டார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவரது மனைவி மற்றும் பிறந்த குழந்தை அடுத்தடுத்து இறந்துவிட வேலையை விட்டுவிட்டு வாழ்க்கையை வெறுத்து விட்டோந்தியாக இருந்தார். அதன்பின் நண்பர்களின் அறிவுறுத்தலால் முழு நேர ஊழியராக காந்தியின் சபர்மதி ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். உப்பு சத்தியாகிரக போராட்டம், வெள்ளையனே வெளியேறு போராட்டம், தனிநபர் சத்தியாகிரக போராட்டம் என காந்தி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்துக்கொண்டார். இதனால் மூன்று முறை சிறை தண்டனை பெற்று சிறையில் இருந்தார்.
சுதந்திரத்திற்க்கு இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் நெல்லூர் வந்து பணியாற்றினார் நேரு. தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்காத உயர் சாதியினர் எனச்சொல்பவர்களை எதிர்த்து பெரும் போராட்டங்களை நடத்தி தலித்கள் சில கோயிலுக்குள் செல்ல அவரால் அனுமதி வாங்க முடிந்தது. தலித் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்திய விடுதலைக்கு பிறகு தலித் மக்களை புறக்கணிக்ககூடாது, தலித் மக்களுக்கான உரிமைகளை வழங்கு என பொட்டி ஸ்ரீ ராமுலு எங்கு சென்றாலும், அக்கருத்தை முன்வைத்து பேசுவார், அதிகாரிகளிடம் வலியுறுத்துவார். தன் கையில் தலித்களுக்கு உரிமைகளை வழங்கு என அட்டை ஒன்றை கையில் வைத்திருப்பார். இதனால் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரோ என சந்தேகத்துடன் ஒதுங்கி செல்வார்கள்.
இந்தியாவை நிர்வாக வசதிக்காக மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது, அதனை பிரதமர் நேரு நிராகரித்தார். பெரிய மாகாணங்கள் மட்டும் பிரிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை மாகாணத்தை பிரித்து தெலுங்கு பேசும் மக்களுக்காக ஆந்திரா மாநிலம், சென்னையை தலைநகராக கொண்டு உருவாக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார் பொட்டி ஸ்ரீ ராமுலு. மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படாது என நேரு அறிவித்தார்.
இதனை கண்டித்து பொட்டி ஸ்ரீராமுலு, சென்னையில் இருந்த மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 1952 அக்டோபர் 19ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 82 நாள் உண்ணாவிரதத்துக்கு பின்பு 1952 டிசம்பர் 15ந்தேதி மறைந்தார். இதனால் தற்போது ஆந்திரா மாநிலத்தில் உள்ள கர்னூல், விசாகப்பட்டினம், விஜயவாடா உட்பட பல பகுதிகளில் மவுன ஊர்வலம் கலவரமானது. மூன்று நாட்கள் தொடர்ந்து அப்பகுதிகளில் கலவரம் நடைபெற்றது. இறுதியில் கலவரத்தை அடக்க போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 7 பேர் இறந்தனர். அதன்பின்பே கலவரம் கட்டுக்குள் வந்தது. இதனால் வேதனையடைந்த நேரு 3 நாட்களுக்கு பிறகு 1992 டிசம்பர் 19ந்தேதி ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.
அதேப்போல் சென்னை மாகாணத்துக்குள் இணைந்திருந்த கேரளாவின் ஒரு பகுதி, கர்நாடகாவின் ஒரு பகுதியும் பிரித்து தனித்தனி மாநிலமாக்கப்படும் என அறிவித்தார் நேரு. அதன்படி அந்தந்த மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதில் சென்னையை தெலுங்கர்களும், கன்னியாகுமரி, செங்கோட்டையை மலையாளிகளும், பெங்களுரூவை கன்னடர்களும் எங்கள் மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை தமிழ் அறிஞர்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கன்னியாகுமரி, செங்கோட்டை, சென்னை போன்றவை தக்கவைக்க முடிந்தன.
அவர் நினைவை போற்றும் வகையில் ஆந்திரா மக்கள் இன்றளவும் அவரை அமரஜீவி என கொண்டாடுகின்றனர். சென்னையில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்தை நினைவு சின்னமாக அரசின் சார்பில் பராமரிக்கப்படுகிறது.