சேலம் மாவட்டம், வாழப்பாடியில் பாரதீய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தொடங்கி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அமைப்பா?, அணியா? ஒரு பிரிவா? என அவர்களுக்கே ஒரு குழப்பம் இருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்தவித தாக்கத்தையும் தமிழக அரசியலில் ஏற்படுத்தப்போவதில்லை. ஏற்கனவே அவர்கள் இருந்த கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த இந்த அமைப்பின் பெயரை பயன்படுத்தி கொள்வார்கள்.
டி.டி.வி.தினகரன் தொடங்கிய புதிய அமைப்பு தமிழக மக்களின் நலனுக்காக இல்லை. ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற போது இந்த அரசை கவிழ்ப்பேன் என்று சொன்னாரே தவிர ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொல்லவில்லை. இருக்கும் பணத்தை வைத்து ஒரு கலாட்டாவை காண்பிப்பாரே தவிர வேறு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் உண்மை.
3 நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி அடைந்தவுடன் பா.ஜனதாவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்துள்ளது என்று கூறுபவர்களுக்கு ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். பா.ஜனதா கட்சி ஜெயிக்கும் போது வாக்கு எந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்கு ஓட்டு விழுகிறது என்று எங்களது உழைப்பை கொச்சைப்படுத்தியது இந்த நேரத்தில் நினைத்து பாருங்கள்.
ஊழலுக்காகத்தான் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை பா.ஜனதா கட்சியால் மட்டுமே வழங்க முடியும். மாநில அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். மலைவாழ் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி செம்மரக்கடத்தலுக்காக அழைத்துச்செல்லும் இடைத்தரகர்களை தமிழக அரசு கூடுதல் அக்கறை கொண்டு கவனிக்கவேண்டும்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாதான் காவிரி நீரை தரமாட்டேன் என கூறி வருகிறார். தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக பா.ஜனதா கண்டிப்பாக குரல் கொடுக்கும். இவ்வாறு கூறினார்.