"தலைமறைவு குற்றவாளியாகிவிட்டார் நித்தியானந்தா. "கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி, ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்த நித்தியானந்தா, தற்பொழுது எங்கே இருக்கிறார் என தெரியவில்லை' என்கின்றன உலக நாடுகள். "பருத்தி வீரன்' படத்தில் டீ கடையில் வேலை செய்யும் கஞ்சாகருப்புவை அந்தக் கடையின் ஓனர் எனச் சொல்லிவிட்டு, கடைசியில் "அவன் ஓனர் இல்லையா... பயபுள்ள பொய் சொல்லிட்டான்' என கார்த்தியும் சரவணனும் கலாய்ப்பார்கள். அதேபோல் இணைய மொழிகளில் உண்மையைப் போன்ற ஒரு வடிவம் என்கிற சொற்றொடர் வரும்... அதுதான் நித்தியின் கைலாசா நாட்டு அறிவிப்பிலும் வந்திருக்கிறது என்கிறார்கள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
நித்தி மீது லெனின்கருப்பன் 2010-ஆம் ஆண்டு கொடுத்த கற்பழிப்பு புகார், வழக்காக மாறி முழு விசாரணைக்கு வந்துள்ளது. ஆர்த்தி ராவ், வினய் பரத்வாஜ் ஆகியோர் அசைத்துப் பார்க்க முடியாத சாட்சிகளாக உள்ள இந்த வழக்கில் லெனின் கருப்பன் தனது சாட்சியங்களை பதிவுசெய்து வருகிறார். பொதுவாக புகார் சொன்னவர், சாட்சியமளிக்கும்போது குற்றம்சாட்டப்பட்டவர் கோர்ட்டில் இருக்கவேண்டும். ஆனால் அந்த வழக்கு "பொது விசாரணை' எனப்படும் ட்ரையலுக்கு வந்து 43 விசாரணை நாட்கள் கடந்துவிட்டன. பொது விசாரணைக்கு வரவே ஒன்பது வருடங்கள், பல வழக்குகள் என போட்டு இழுத்தடித்த நித்தி... இந்த வழக்கு ட்ரையலுக்கு வந்தவுடன் தலைமறைவாகி விட்டார்.
ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்தப் பாலியல் குற்ற வழக்கில் "43 முறையும் நித்தி ஆஜராகாமல் இருக்க மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார். அதில் ஒருமுறை கூட "நான் ஈக்வடார் நாட்டுக்கு பக்கத்தில் உள்ள கைலாசா எனப்படும் தீவில் இருக்கிறேன்' என கோர்ட்டில் சொல்லவில்லை. மாறாக "இமயமலையில் இருக்கிறேன், வரமுடியவில்லை' என்றே குறிப்பிட்டிருந்தார். தற்பொழுது "கைலாசா என்கிற நாட்டை உருவாக்கிவிட்டேன்' என அறிவித்துள்ள நித்தி, இனி இமயமலை முகவரியை இருப்பிட முகவரியாக குறிப்பிட முடியாது. எனவே அவர் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொள்வார்'' என்கிறார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே குஜராத் மாநில உயர்நீதிமன்றம், "சிறுமி கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட நித்தியின் சிஷ்யைகளை ஜாமீனில் விடமுடியாது' என அறிவித்துள்ளது. "முக்கிய குற்றவாளியான நித்தியே கைதாகவில்லை. நித்தி வராமல் சிஷ்யைகளை சிறையிலிருந்து அனுப்ப முடியாது' என தெள்ளத் தெளிவாக அறிவித்துவிட்டது. "நித்தியின் பிடியிலிருக்கும் தனது பெண்களை மீட்டுத்தாருங்கள் என தொடரப்பட்ட வழக்கில், அவரது மகள்களை கோர்ட்டுக்கு கொண்டு வாருங்கள்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நித்தி எங்கிருக்கிறார் என கண்டுபிடித்து ஜனார்த்தன சர்மாவின் மகள்களை மீட்டுவாருங்கள் என ஏற்கனவே கடுமையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை ஏற்ற குஜராத் போலீஸ் பெங்களூரு பிடதியிலுள்ள ஆசிரமத்தை ரெய்டு செய்தது.
"நித்தி எங்கிருக்கிறார் என குஜராத் போலீஸ் நிச்சயம் கோர்ட்டில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. "நித்தி கைலாசாவில் இருக்கிறார்' என கோர்ட்டில் குஜராத் போலீஸ் சொன்னால், "அவரை இழுத்து வாருங்கள்' என கோர்ட் உத்தரவிடும். இரண்டாவது முறை போடப்படும் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குஜராத் போலீஸ் அனுப்பி வைக்கும். உலகத்தின் எந்த மூலையில் நித்தி இருந்தாலும், அவரைப் பிடிக்க வேண்டும் என சிவப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பிக்கும். உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு கோரும்'' என்கிறது குஜராத் மாநில காவல்துறை வட்டாரம்.
"இந்தியாவில் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நித்தி, எங்கள் நாட்டிற்கு வந்தார்' என ஈக்வடார் நாடு அறிவித்துள்ளது. "அவர் பாஸ்போர்ட் இல்லாமல் வந்தார். அகதியாக தங்க அனுமதி கேட்டார். நாங்கள் அனுமதிக்க மறுத்துவிட்டோம். அவர் சென்றுவிட்டார். ஈக்வடார் நாட்டில் தீவு உட்பட எதையும் அவர் வாங்கவில்லை. ஈக்வடார் நாட்டில் ஒரு தீவு வாங்கி கைலாசா என்கிற நாட்டை நித்தி உருவாக்கியதாக இணையதளங்களில் வரும் செய்தி பொய்' என அறிவித்துள்ளது ஈக்வடார் அரசு.
கெட்டிக்காரன் பொய் எட்டுநாளில் வெளிவந்துவிட்டது. இப்போது நித்தி, தனது கைலாசா நாடு என்கிற தீவு ஈக்வடாருக்கும் பிரேசிலுக்கும் சொந்தமானது என புதிதாக பிரேசிலை இணைத்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து பிரேசிலிடம் "நித்தி அங்கிருக்கிறாரா?' என இந்திய அரசு கேட்டுள்ளது. "நித்தி ஒரு தீவு வாங்கியுள்ளார் என்பது உண்மை. அதை வைத்து ஐ.நா. சபையிடம் இந்தியாவுக்கு எதிராக கோரிக்கை வைத்ததும் உண்மை. அதை ஒரு நாடாக அறிவித்துக்கொண்டது நித்தி சொன்ன பச்சைப் பொய். அப்படி ஒரு நாடு இல்லவே இல்லை; இருக்கவும் முடியாது. நாடு என நித்தி அறிவிப்பதும் அதை அவரது தரப்பினர் நம்புவதும் வடிகட்டிய முட்டாள்தனம்' என்கிறார்கள் வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் தனக்கு எதிராக சதி செய்வதாக நித்தி குற்றஞ்சாட்டுவதும், தன்னைத்தானே "பரமசிவன்' எனக் கூறிக்கொள்வதும் பா.ஜ.க. மேலிடத்திற்கு கொதிப்பை உண்டாக்கியுள்ளது. இதனிடையே, கர்நாடக பா.ஜ.க. அரசு நித்தி மீதான வழக்குகளை விரைவுபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. "சட்டரீதியாக நித்தியை அம்பலப்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு கொடுத்த பிரஷரால்தான் கர்நாடக அரசு வேகம் காட்டுகிறது'' என்கிறார்கள் உள்துறை வட்டாரத்தினர்.
இந்நிலையில்... லெனின்கருப்பன் தாக்கல் செய்த வழக்கில், வருகிற 12-ஆம் தேதிக்குள் நித்தி எங்கே என கண்டுபிடித்துச் சொல்லுமாறு ஏற்கனவே குஜராத் கோர்ட் உத்தரவிட்டதைப் போல, கர்நாடக அரசின் அனைத்து துறைகளுக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. "அடிமேல் அடிவாங்கி இறுதிக்கட்டமாக சிறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் மகா டுபாக்கூரான நித்தி' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.