சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், திராவிட இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் சுந்தரவள்ளி இந்த சர்ச்சை தொடர்பாக விரிவாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஐயப்பன் கோயில்கள் இருக்கின்றன. அதில் அனைத்திலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் சாமி கும்பிடுகிறார்கள். கேரளாவில் பத்து விதமான ஐயப்பன் கோயில்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மேலும், ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒரு சிறப்பு அம்சத்தை கூறுகிறார்கள். வீரத்தை கொடுக்கின்ற ஐயப்பன், செல்வத்தை கொடுக்கின்ற ஐய்யப்பன் என்று பல வகையான ஐயப்பன்கள் உள்ளதாக கூறுகிறார்கள். இது அனைத்தையும் விட சகல வளத்தையும் கொடுக்கின்ற சபரிமலை ஐயப்பன். இங்கே ஆரம்பித்து அங்கே முடிகின்றது. ஐயப்பன் கோயில் அருகிலேயே மாளிகைபுரத்து அம்மன் என்ற கோயில் இருக்கிறது. அந்த அம்மன் யார் என்றால் ஐயப்பனை விரும்பியர். ஐயப்பனை திருமணம் செய்ய முடிவு செய்து அவரின் சம்மதத்தையும் பெற்றவர். இதையெல்லாம் மேலோட்டமாகவாது நாம் படிக்க வேண்டும். இப்போது ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்கிறார்கள். ஏன் என்றால் ஆகமம் ஒத்துக்கொள்ளாது என்கிறார். எங்கே இருக்கிறது ஆகமம்? அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு தெரிந்தால்தானே சொல்வார்கள். அவனுக்கே தெரியாதபோது எதை சொல்வது.
தான் வாழ்கின்ற இடத்தில் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்று அங்கு வாழ்கிறவன்தான் தீர்மானிப்பான். சென்ட்ரலில் இருந்து வரும்போது பாடிகாட் முனீஸ்வரன் என்ற சாமி இருக்கும். எங்கள் ஊருக்கு அருகில் ஐகோர்ட் பேச்சினு ஒரு சாமி இருக்கு. அதாவது ஐகோர்ட்டுக்கு போகும்போது இந்த சாமியை கும்பிட்டு போனால் எல்லாம் சக்சஸ் ஆகிடுமாம், அப்படி ஒரு நம்பிக்கை இருக்கும் அந்த மக்களுக்கு. எங்க ஊரில் ஐயர்-னே பேரு இருக்கு. சிவப்பா பொறந்தா பெண்களுக்கு பாப்பாத்தி என்றும், ஆண்களுக்கு ஐயர்னு பேரு வைக்கிறது வழக்கமா இருந்தது. இது பின்னாடி எல்லாம் பெரிய அரசியல் இருக்கு. அதாவது ஊர் முக்குல ஒரு பிள்ளையார் வைத்தார்கள் என்றால் அவர் முச்சந்தி பிள்ளையார், அரிசி சிறிது தூவி பிள்ளையார் வைத்தால் அதற்கு வேறு பெயர் வைப்பது என்று தான் உருவாக்கும் கடவுளை தன் இடத்திற்கு தகுந்தவாறு அப்போது தீர்மானித்தார்கள். அரச மரத்தடியால் பிள்ளையார் வைத்தால் அரசமரத்தடி பிள்ளையார் என்று அழைத்தார்கள். அது அவர்களின் உரிமையின்பால் இருந்தது. இன்று பெண்களை சமரிமலைக்கு செல்ல கூடாது என்கிறார்கள்.
முற்போக்கு இயக்களில் உள்ளவர்கள் மற்றும் அத்தகைய கருத்துக்களை பேசுபவர்களை பார்த்து கடவுளை வணங்குபவர்கள், சாதாரண மனிதர்கள் கேட்கின்ற முதல் கேள்வி நீங்கள்தான் கோயிலுக்கு செல்வதற்கு எதிரானவர்கள் தானே, அப்புறம் எதற்கு இதை பற்றி பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் பெண்களுக்கு எதிராக உள்ள இந்த மதச்சடங்குகளை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். குறைந்த பட்சம் அதையாவது செய்வோமே என்றுதான் நாங்கள் இத்தகைய விஷயங்களில் போராடுகிறோம். அதை தவிர நாங்கள் கோயிலுக்கு சென்று 18 படி ஏறி இறங்க செல்லவில்லை. பெரியார் வைக்கத்தில் உள்ள கோயிலுக்கு சென்றார். எதற்காக சென்றார், கோயில் சென்று சாமி கும்பிடவா? மக்களில் ஒரு பிரிவினரை சாமி கும்பிட அனுமதி மறுத்தார்கள். அவர்களுக்கு உரிமையை பெற்று தரும் நோக்கில் கோயிலுக்கு சென்றார். இதனை அப்படிதான் பார்க்க வேண்டும். பெண்களுக்கான உரிமை மறுக்கப்படபோது அதற்கு எதிரான போராட்டம் களம் அமைத்தே ஆகவேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. அதற்கு நாங்கள் எப்போது தயாராக இருக்கிறோம்" என்றார்.