மக்கள் கரோனாவை எதிர்த்து போராட, அரசியல் கட்சிகளோ கரோனாவோடு விளையாடுகின்றன. கரோனா உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிலிருந்து தப்பிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மக்களே தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு, பாதுகாப்போடு இருந்து கொள்ள வேண்டும். இதுதான் தற்போதைய நிலை.
இந்த நோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு, இந்திய சுகாதார அமைப்பு, மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு முறைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. இதனை பலதரப்பட்ட மக்கள் கேட்க மாட்டேன் என்கிறார்கள். கடைப்பிடிக்கவும் மறுக்கிறார்கள்.
இதைக் கருத்தில் கொண்டுதான் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. அதையும் மீறுகிறார்கள். அதற்காக காவல்துறை, ஊர் காவல்படை எனப் பலதுறையைச் சேர்ந்தவர்கள் இரவு பகல் பாராமல் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி கும்பல் கூடுவதைத் தடுப்பதற்குப் படாதபாடு படுகிறார்கள்.
அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நோயின் தீவிரத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் ஊர் சுற்றும் இளைஞர்கள் இதற்காகப் போடப்பட்ட 144 தடை உத்தரவை மீறியதாகத் தமிழக அளவில் இரண்டரை லட்சம் பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்தி 39 ஆயிரத்து 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதத் தொகையாக ஒரு கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்து 394 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது 19.4.2020 தேதி வரை.
இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறி கடைகள் மளிகைக் கடைகள் என பல்வேறு இடங்களில் நெருக்கியடித்து மூச்சுத் திணறும் அளவுக்கு நிற்கிறார்கள். இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய்ப் பரவும் என்பதைப் பற்றி கொஞ்சம் கூட உணராமல்.
இதுமட்டுமா? மக்களுக்கு நிவாரணம் வழங்குவது என அரசியல் கட்சிகள், பல்வேறு நலஅமைப்புகள் நீதிமன்றவழிகாட்டு முறைகளைப் பின்பற்றாமல் அதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஊரைக்கூட்டி நிவாரணம் வழங்குகிறார்கள். இது நோயை வருந்தி அழைக்கும் செயலாக உள்ளது. இப்படிப்பட்டவர்களின் செயல்களைக் கண்டு வேதனைப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இதுபற்றி பொதுமக்களில் ஒருவராகிய சமூக ஆர்வலர் மோகன் நம்மிடம், 'கூட்டம் சேர்வதைத் தவிர்க்கச் சொன்னால் கூட்டம் கூட்டமாகத் தான் போவோம் என்று மக்கள் பிடிவாதமாக உள்ளனர். எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை. காவல்துறை கையெடுத்து கும்பிட்டும் கேட்கத்தால் கழி (தடி)கொண்டு அடித்துத் துரத்தியும் இவர்களின் போக்கு மாறவில்லை. பல நாடுகளில் இந்த நோய்த் தாக்குதலால் கொத்துக்கொத்தாக மக்களின் மரணங்கள் நிகழுகிறது. அதைப் பார்க்கும் நமது நெஞ்சம் வெடித்து சிதறுகிறது. பதறுகிறது.
இதையெல்லாம் ஊடகங்கள் மூலம் மக்கள் பார்க்கவே செய்கிறார்கள். அப்படி இருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மறுக்கிறார்கள். தங்கள் உயிர் முக்கியம், அதேபோல் அவரவர் மனைவி, குடும்பம், உறவினர்கள் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதன் மூலம் சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்க வேண்டும். தற்போதைக்கு இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். மக்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.
மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கூடுவதைத் தடுக்க வேண்டும். அதற்காக அரசு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். உதாரணமாக காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். தங்களுக்குத் தேவையானது வீடு தேடி வந்து விட்டால் மக்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அதை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களைப் போலீஸ் கைது செய்யலாம். அவர்கள் வாகனங்களைப் பறிமுதல் செய்யலாம். நோய்ப் பரவாமல் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் மக்கள் சிரமமில்லாமல் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அரசு, அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒரு குழு மூலம் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டுபோய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்கிறார் ஊ.செல்லூர் செந்தில்.
இப்போது உலக அளவில் மக்கள் மூன்றாம் உலகப்போரைச் சந்தித்து வருகிறார்கள். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பல நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்து எதிர்த்தன. நாடு பிடிக்கும் சண்டையில் பல லட்சம் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் இறந்தனர். இப்போது நடக்கும் போர் கரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத கிருமி என்ற போர். வீரர்களோடு மக்கள் யுத்தம் நடத்தி வருகிறார்கள். எதிரிகளிடம் போரிடும் போது அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் கையில் உள்ள ஆயுதங்களைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு நாமும் ஆயுதங்களோடு போரிட்டு வெல்லலாம். ஆனால் இந்தக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமி, ஆயுதமின்றி நம் உடலின் உள்ளே புகுந்து நம் உயிரைக் குடிக்கத் துடிக்கிறது. அந்தக் கிருமியிடம் நாம் எந்த ஆயுதத்தைக் கொண்டு எதிர்த்துப் போரிட முடியும்? அதனால் அதனிடமிருந்து நாம் தப்பிக்க நம்மைத் தனிமைப்படுத்தி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போதுள்ள நிலை. எனவே நோயிலிருந்து தப்பிக்க மிகச் சிறந்த வழி நம்மை நாம் ஒவ்வொருவரும் தனிமைப் படுத்திக் கொண்டு அந்தக் கரோனா கிருமியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்கள் அந்த நோயின் தீவிரத் தன்மையை உணர வேண்டும் என்கிறார் செங்கை ராஜேந்திரன்.
இந்த இக்கட்டான நேரத்தில் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டுக்குச் சிரமப்படுகிறார்கள். அவர்களின் பசி போக்க உதவிட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. அதே நேரத்தில் பாதுகாப்பு மிக மிக முக்கியம். டீ வாங்கிக் கொடுப்பதை, முகக் கவசம் கொடுப்பதைக் கூட கும்பலாக நின்று படம் எடுத்து விளம்பரப்படுத்துகிறார்கள். இரண்டு வாழைப்பழங்களைக் கொடுத்துவிட்டு அதைப் படம் எடுத்து வெளியிட்டு அதை விளம்பரப்படுத்தியதைப் பார்த்த ஒரிசா அரசு மக்களுக்கு செய்த உதவியைப் படம் எடுத்து வெளியிடுவதைத் தடை செய்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் மிகுந்த பாதுகாப்போடு குறைந்த நபர்களைக் கொண்டு அந்த உதவிகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். மக்களை ஒரே இடத்தில் கும்பலாகக் கூட்டி நிவாரணம் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி மக்களைக் கூட்டி நிவாரணம் அளிப்பதில் காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மக்களுடன் நின்று போஸ் கொடுப்பது அதைப் படமெடுப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
பொறுப்புள்ள அதிகாரிகள் இப்படிச் செய்தால் மற்றவர்கள் எப்படிச் செய்வார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். ஏனென்றால் பல நாடுகளில் முகக் கவசம், உடல் முழுவதும் பாதுகாப்பு உடை இவைகளையெல்லாம் உடுத்திக்கொண்டு மருத்துவம் பார்த்த டாக்டர்கள், செவிலியர்கள் உடலில் நோய் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். தமிழகத்தில் இரண்டு டாக்டர்கள் இறந்துள்ளதை இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அரசு நோய்ப் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்கிறார் விருத்தாசலம் கண் மருத்துவர் வள்ளுவன்.
உதவி செய்யுங்கள். ஆனால் அதை வைத்து விளம்பரங்கள் தேடாமல் இருங்கள். ஏனெனில் இங்கு உள்ள மக்கள் பெரும்பாலும் பசியை விட தன்மானம் முக்கியம் என்று வாழ்பவர்கள் தான் அதிகம். உதவி செய்யுங்கள், ஆனால் உதவி செய்பவர் படம் மட்டுமே பதிவிடுங்கள். உதவி பெறும் மக்களைப் படம் பிடிக்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் பிள்ளைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். நம் முன்னோர்கள் எவ்வளவோ தான தர்மங்கள், சேவைகள் செய்தனர். ஆனால் அன்று யாரும் அதைப்பற்றி வெளியில் வந்து சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் செய்தது சேவைகள். விளம்பரம் இல்லை. இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஏனெனில் சென்னையில் ஒரு சில நபர்கள் உதவி செய்து விட்டு விளம்பரம் செய்ய படம் பிடித்த போது பலர் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆந்திர டாக்டருக்கு அண்மையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். தற்போது டாக்டர் சைமன் என்பவரும் இறந்து போனார் அவர்களின் உடலைத் தகனம் செய்வதற்காக அம்பத்தூர் மின் மயானத்திற்குக் கொண்டு சென்றபோது உள்ளூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தகுந்த பாதுகாப்புடன் உடலை எரிப்பதால் அறிவியல் பூர்வமாக எந்தவிதமான தொற்றும் பரவாது என அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிரயோஜனமில்லை. நன்றாக யோசித்துப் பாருங்கள். இதே மக்கள்தான் கரோனாவுக்கு உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்து சில நாள்களுக்கு முன்பு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கைதட்டினார்கள். இன்று அதே மக்கள் தான் ஒரு மருத்துவரின் இறுதிப் பயணத்தைக் கவுரவமாக அடக்கம் செய்யவிடாமல் அவமானப்படுத்தி அலங்கோலப் படுத்துகின்றனர்.
மருத்துவரின் சடலம் எரிக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் என்று அச்சப்படும் இதே மக்கள்தான், சமூக இடைவெளி என்ற அடிப்படை அறிவே இல்லாமல் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் முன்பு ஒருவர் மேல் ஒருவர் ஏறி கொண்டு நிற்கின்றனர். மனிதனின் கேடுகெட்ட சுயநலம் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் தி.இளமங்கலம் ராமசாமி.
நெருப்பை நாம் தொட்டால் சுடும் என்பதால் அதை நெருங்காமல் ஒதுங்கிப் போகிறோம். கரோனா கிருமியும் கண்ணுக்குத் தெரியாத நெருப்பு போன்றதுதான். அதை நெருங்காமல் ஒதுங்கிப் போக வேண்டும். அப்போதுதான் நாம் தப்பிக்க முடியும். இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். தேவையின்றி டூவீலர்களில் ஊரைச் சுற்றும் இளைஞர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வந்தபின் அவஸ்தைப் படுவதை விட கரோனா வருமுன் காப்பதே மேல்.