உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 350-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 12,000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
"இன்றைக்கு மிகவும் பதட்டமான மனநிலையில் நான் இருந்து கொண்டிருக்கிறேன். சில கருத்துகளை தற்போது நான் கூற விரும்புகிறேன். கரோனா காரணமாக அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். சாப்பாட்டுக்குக் கூட சில இடங்களில் சிரமமாக இருக்கும் தகவல்கள் வருகின்றது. இது ஒருபுறம் என்றால் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று கோவையில் இருந்து எனக்குத் தகவல் வந்துள்ளது. மருத்துவர்களுக்குத் தேவையான என்-95 மாஸ்க் இதுவரை அங்கே வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. 12 பேர் இருக்கும் ஒரு இடத்திற்கு நான்கு பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே அதிகாரிகள் வழங்குவதாகத் தகவல் வந்துள்ளது. இதற்காக என்னைக் கைது வேண்டுமானாலும் செய்யுங்கள், வழக்கு போடுங்கள்... அதைப் பற்றி கவலை இல்லை. அங்கே இருக்கும் மருத்துவர்கள் பலருக்குத் தற்போது கரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. அதனை அரசு மறைக்கின்றது. என்ன காரணத்திற்காக அரசு இதனை மறைத்து விளையாடுகிறது.
மத்திய அரசு ஒரு பக்கம் விளையாடுகிறது என்றால், மாநில அரசும் ஒருபக்கம் தன் பங்கிற்கு விளையாட்டை ஆரம்பித்துள்ளது. ஹெல்த் மினிஸ்டர், எல்லாரும் நல்லா ஆகிடுவாங்கனு சொல்கிறார். எல்லாரும் அதை நம்புறாங்க. விஜய பாஸ்கர் ஃபார் சிஎம் என்று சொல்கிறார்கள். இந்த அரசாங்கம் ஊழலில் ஊறிய அரசாங்கம் என்பது அனைவருக்கும் அறிந்ததே. 40 சதவீதம் நீங்க தின்னுங்க, இல்லை 50 சதவீதம் கூட கமிஷன் அடிங்க, மீதி 50 சதவீதம் பொருள் எங்கே இருக்கு. இதுவரை எத்தனை என்-95 மாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கொடுங்க. என்னுடைய முதல் கேள்வியே அதுதான். நாம கோவையை மட்டும் பேசுவோம்.
இங்குதான் தமிழ்நாட்டிலேயே இரண்டாவதாக அதிக தொற்று இருக்கிறது. போலீஸுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களுமே அரசு மருத்துவமனையை நம்பி இருக்கிறார்கள். ஆனால் அங்குப் பணியாற்றும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் நாம் எப்படி இந்த நோயில் இருந்து தாக்குப்பிடிக்க முடியும். என்னிடம் 100 சதவீதம் ஆதாரம் இருக்கிறது, நிறைய மருத்துவர்கள், ஊழியர்கள் கரோனா தொற்றால் கோவையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இல்லை என்றால் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்" என்றார்.