2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் திருவிழாவாகத் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் ரஜினியின் 'பேட்ட', இன்னொரு பக்கம் அஜித்தின் 'விஸ்வாசம்' என மல்டிபிளக்ஸ்களும் மற்ற திரையரங்குகளும் கொண்டாட்ட கோலம் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளிவருவதாகத் தகவல் வெளியான பொழுது இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தால் அது நல்லதல்ல என்றும் ஒரு படத்தின் வசூலை இன்னொரு படத்தின் வசூல் பாதிக்கும் என்றும் இரண்டு படங்களுக்குமே இது பாதிப்புதான் என்றும் பலரும் கூறினர். சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் அபிமான நடிகரின் படம் குறித்து பேசினர். ஒருகட்டத்தில் அது எல்லை மீறி இருதரப்பிற்கும் இடையே நாகரிகமற்ற சண்டையாகவும் சில தருணங்களில் நிகழ்ந்தது. ஆனால் இரண்டு படங்களும் கடந்த 10ஆம் தேதி வெளிவந்து அத்தனை பயத்தையும் அர்த்தமற்றதாக்கின. இரண்டு படங்களும் வெளிவந்த பத்தாம் தேதியில் இருந்து பொங்கல் தினத்தையும் கடந்து இன்னும் ஹவுஸ்ஃபுல்லாக வெற்றி நடை போடுகின்றன. இந்த நிலை, ரசிகர்கள் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இரண்டு படங்களில் 'பேட்ட' குறித்து விமர்சனங்களிலும் சரி ரசிகர்கள் தரப்பிலும் சரி முக்கியமாகக் கூறப்படுவது பழைய ரஜினி திரும்பி வந்துவிட்டார் என்பதே. ரசிகர்கள் காணவிரும்பிய ரஜினியை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாகத் திரையில் கொண்டு வந்தார் என்று ரஜினி ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு மிகப்பெரிய ரஜினி ரசிகர் என்பதே. சிறுவயதிலிருந்து தான் ரசித்த ரஜினியை, ரஜினியின் காட்சிகளை அப்படியே உள்வாங்கி அதைத் தன் படத்தில் புதிதாக உருவாக்கி எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் ரஜினியை திரையில் கொண்டு வந்துள்ளார். இடையில் சில படங்களில் ரஜினியின் பாத்திரங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உருவாக்கப்படவில்லை என்ற குறையை ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் போக்கி விட்டார் என்று ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் திரையரங்குகளிலும் பேசிக்கொள்கின்றனர்.
இப்போது ரஜினியை வைத்து ஒரு ரஜினி ரசிகர் கொடுத்துள்ள 'பேட்ட' போல 2006 ஆம் ஆண்டு கமலை வைத்து ஒரு கமல் ரசிகர், ரசிகர்கள் விரும்பிய கமல்ஹாசனை சிறப்பாகத் திரையில் காட்டி ஒரு படத்தை உருவாக்கி அது பெரிய வெற்றியையும் பெற்றது. அந்தப் படம்தான் 'வேட்டையாடு விளையாடு'. அப்போது இளம் இயக்குனராக, நியூ வேவ் டைரக்டராக இருந்த கௌதம் மேனன் தான் அந்த கமல் ரசிகர். மின்னலே, காக்க காக்க என இரண்டு பெரிய வெற்றிகளை அதற்கு முன்பு கொடுத்திருந்த கௌதம் மேனன் காதல் காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் பெயர் பெற்ற இயக்குனர். அப்பொழுதே சில பேட்டிகளில் தான் ஒரு கமல் ரசிகர் என்றும் தனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று 'சத்யா' என்றும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு கமல்ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு அமைந்த பொழுது அதற்கு முன்பு சில ஆண்டுகள் ரசிகர்கள் மிஸ் பண்ணிய ஸ்டைலிஷான கமல்ஹாசனை தன் படத்தில் காட்டினார். வேட்டையாடு விளையாடு படத்தின் ஓப்பனிங் சீன் இன்றளவிலும் கமல்ஹாசனின் படங்களில் மிகச்சிறந்த ஓபனிங் சீனாகக் கருதப்படுகிறது.
"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே.." என்று தொடங்கி "கேட்ட மூடுறா" என்று கோபத்துடன் கமல் சொல்ல அங்கு தொடங்கும் சண்டைக்காட்சி அப்படியே கற்க கற்க பாடலுடன் தொடர்ந்து அப்படியே ஓப்பனிங் பாடலாக அமைந்தது கமல்ஹாசனின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருந்தது. கமல் படங்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் சிறந்த ஓபனிங் சீன்களில் அதுவும் ஒன்று.
'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் கதாபாத்திரம் வீரமாகவும் அதேநேரம் பெண்களை மதிப்பதாகவும் ஸ்டைலான ஆங்கிலம் பேசுவதாகவும் என அனைத்து பரிமாணங்களிலும் ரசிக்கத்தக்கதாக செதுக்கப்பட்டிருக்கும். அந்தப் படத்தில் கமலின் உடைகள் ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. கமலின் மேனரிசங்கள் ஒவ்வொன்றும் ஒரு ரசிகனால் ரசித்து ரசித்து உருவாக்கப்பட்டது. உச்சக்கட்டமாக "சின்னப் பசங்களா யார்கிட்ட" என்று கமல் கேட்பது அப்போதைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடுவது போல ஒரு கமல் ரசிகனால் அனுபவித்து எழுதப்பட்டது. காதல் காட்சிகளும் பாடல்களும் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் என்றும் மறக்க முடியாதவை.
இப்படி ஒரு கமல் ரசிகராக கௌதம் மேனன் தன் அபிமான நடிகரை வைத்து உருவாக்கிய திரைப்படம் ரசிகர்கள் பார்க்க விரும்பிய கமல்ஹாசனை திரையில் கொண்டு வந்தது. இப்போது அதேபோல ஒரு ரஜினி ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'பேட்ட' ரஜினி ரசிகர்கள் காண விரும்பிய ரஜினியை ஒரு இடைவெளிக்குப் பிறகு திரையில் கொண்டு வந்துள்ளது. அதேநேரம் இப்படி ஒரு படத்தை எடுக்க ரசிகராக மட்டும் இருந்தால் போதாது என்பதற்கும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு.