பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பல பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் பாராமுகமாக நடந்து கொண்டதாக பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் பிரேம்குமார் (32). கடந்த மார்ச் 1ம் தேதி நடக்க இருந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இயற்பியல் துறை பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள் பணியமர்த்தம் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஏற்கனவே இதே பல்கலைக்கழகத்தில் கல்வி ஆண்டுக்கு இடையே பணி நிறைவு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள் பணியமர்த்தம் வழங்கப்படாததையும், ஓய்வு பெற்ற ஒருவருக்கு மீள் பணியமர்த்தம் செய்யக்கூடாது என்று அரசாணை உள்ளதை சுட்டிக்காட்டியும் குமாரதாஸ் குறித்த பொருள்நிரலை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அரசுத்தரப்பு சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு பிரேம்குமார் கடிதம் எழுதியிருந்தார்.
சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்கு முன்பே இப்படியொரு தகவல் வெளியானதால், மார்ச் 1ல் நடக்க இருந்த கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மேலும் சிண்டிகேட் கூட்டத்தின் பொருள்நிரல் என்பது ரகசியமானது என்றும், அதை முன்கூட்டியே வெளியிட்டது பல்கலைக்கழக சாசன விதிகளுக்கு எதிரானது என்றும் கூறி பிரேம்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல்.
பிரேம்குமார் தரப்போ, ஓர் உதவி பேராசிரியராகவோ அல்லது சிண்டிகேட் உறுப்பினராகவோ அந்தக் கடிதத்தை எழுதவில்லை என்றும், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பின் அடிப்படையில்தான் குமாரதாஸ் மீள் பணியமர்த்தம் பொருள்நிரல் குறித்து கடிதம் எழுதியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை எல்லாம் பல்கலைக்கழக நிர்வாகம் கிஞ்சித்தும் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்கிறார்கள்.
சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து பிரேம்குமார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக உரிய பதில் அளிக்கும்படி பெரியார் பல்கலைக்கு உத்தரவிட்டது. இதனால் கொதிப்படைந்த பல்கலை நிர்வாகம், பிரேம்குமாரை வேறு புகார்களில் சிக்க வைக்க திட்டமிட்டு, அவருக்கு எதிராக ஒரு பட்டியலின மாணவியை தூண்டிவிட்டு பாலியல் புகார் கொடுக்க வைத்திருக்கிறது.
அதன்பேரில் சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் பிரேம்குமார் மீது பாலியல் சீண்டல், பெண்கள் வன்கொடுமை மற்றும் சாதி வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலை நிர்வாகம் தனக்கு எதிராக இப்படியொரு அஸ்திரத்தை ஏவும் என்பதை எதிர்பாராத பிரேம்குமார், திடீரென்று தலைமறைவானார். அவர் முன்ஜாமீன் பெறும் வேலைகளில் இறங்கியுள்ளார் எனத்தெரிகிறது.
இதையடுத்து ஏப். 4ம் தேதி, பிரேம்குமாரிடம் படித்து வரும் மாணவ, மாணவிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊடகத்தினரைச் சந்தித்து, தங்கள் துறை ஆசிரியர் மீது பல்கலை நிர்வாகம் பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தனர். ஆட்சியரிடமும் மனு அளித்தனர். ஆனால், ஊடகத்தினரிடமும், சமூக ஊடகங்களிலும் பல்கலையின் நடவடிக்கைகளை பதிவிட்டதாகக் கூறி வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகளை பல்கலை நிர்வாகம் உளவியல் ரீதியாக மிரட்டத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் நம்மிடம் பேசினர். ''உதவி பேராசிரியர் பிரேம்குமார், வகுப்பில் எல்லா மாணவர்களிடமும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். வகுப்பறைக்கு வெளியே ஒரு நண்பரை போல பழகுவார். அவர் மனைவி சமைத்து தரும் உணவை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். நாங்கள் கொண்டு வரும் உணவை அவரும் வாங்கிக் கொள்வார்.
அன்றாடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். எதிலும் மேலோட்டமாக இருந்தால் அவருக்கு பிடிக்காது. அவர் மீது புகார் அளித்த மாணவியிடமும் கூட அவர் கடுமையாக நடந்து கொண்டார். அந்த மாணவி சரியாக வகுப்புக்கு வர மாட்டார். கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார். இதனால் அவரை பிரேம்குமார் சார் அடிக்கடி கடிந்து கொள்வார். அதனால்தான் அந்த மாணவியை பல்கலை நிர்வாகம் பகடைக் காயாக பயன்படுத்தி, அவருக்கு எதிராக புகார் கொடுக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாக நாங்கள் பேட்டி அளித்ததால், பேராசிரியர் பூங்கொடி விஜயகுமார் தலைமையிலான கமிட்டி, எங்களை மிரட்டுகிறது. சிலர் ஏப். 5ம் தேதி விடுப்பு எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் விடுப்பு கடிதம் கேட்டு கட்டாயப் படுத்துகின்றனர்.
பல்கலைக்கு எதிராக ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளனர். இந்தப் பல்கலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் சாதிய பாகுபாடுடன்தான் நடந்து கொள்கின்றனர். பல்கலையே ஒரு ஆசிரியருக்கு எதிராக இருக்கும்போது நாங்கள் அவர்களிடமே எப்படி புகார் அளிக்க முடியும்?,'' என்கிறார்கள் வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள்.
இவர்களின் கருத்து இப்படி இருக்க, பல்கலை பேராசிரியர்கள் தரப்போ வேறு சில குற்றச்சாட்டுகளில் பல்கலை நிர்வாகம் ஒருசார்புடன் நடந்து கொண்டதாகவும் கூறுகின்றனர். “பெரியார் பல்கலையில் வேதியியல் துறை பேராசிரியர் கோபி, தன்னிடம் பி.ஹெச்டி., பயின்ற மாணவிகளை, தன் குழந்தையை பராமரிக்கும் பணிகளைச் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தினார் என்று ஒரு புகார் வந்தது. இப்போதைய வரலாற்றுத்துறைத் தலைவர் கிருஷ்ணகுமார், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீதும் பாலியல் புகார் எழுந்தது.
தாவரவியல் துறை பேராசிரியர் செல்வம், லிப்டில் தன்னுடன் வந்த ஒரு பி.ஹெச்டி. மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு வணிகவியல் பேராசிரியராக இருந்த இளங்கோவன், மாணவிகளை ஏற்காடுக்கு அழைத்துச் சென்றதாக புகார் கூறப்பட்டது. இந்த புகார்கள் குறித்து எல்லாம் அப்போது கமிட்டி போட்டு விசாரணையும் நடத்தினர். ஆனால் இவர்கள் யார் மீதும் சஸ்பெண்ட் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மிக அண்மையில் கூட பொருளாதார துறை இணை பேராசிரியர் ஜனகம், சரியாக வகுப்புகள் எடுப்பதில்லை என்று மாணவர்கள் எழுத்து மூலமாக துணைவேந்தரிடம் புகார் அளித்தனர். அந்தப் புகார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது மட்டும் இத்தனை வேகமாக சஸ்பெண்ட், பாலியல் புகார் என நடவடிக்கை எடுக்க காரணம் என்ன? ஓராண்டாக தன்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக இப்போது அவர் மீது புகார் கூறும் மாணவி, இவ்வளவு காலமாக என்ன செய்து கொண்டிருந்தார்?
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரேம்குமாரின் மனைவி உமா மகேஸ்வரி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். தனது துறையில் சரியாக பணியாற்றி வரும் ஒருவரை, பொய் புகார்களில் சிக்க வைக்க முனைவது தவறான முன்னுதாரணமாகி விடும். பிரேம்குமார் தற்போது தலைமறைவாக உள்ளதால் அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீதான புகாரை திரும்பப் பெற வேண்டும்'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.
பிரேம்குமார் மீதான நடவடிக்கை குறித்து சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமியிடம் கேட்டபோது, “மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீது பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். அதை பதிவாளர் எங்களுக்கு அனுப்பி வைத்தார். அதன்பேரில் பிரேம்குமார் மீது பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை, சாதி வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். இந்த வழக்கை உதவி கமிஷனர்தான் நேரடியா விசாரிக்கிறார். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.
பிரேம்குமார் விவகாரம், மற்ற ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவிகள் போர்க்கொடி உள்ளிட்டவை குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டோம், “பல்கலைக்கழகம் மீது ஏதேனும் புகார் என்றால் மாணவ, மாணவிகள் நிர்வாகத்திடம்தான் புகார் தர வேண்டும். அல்லது, போலீசாரிடம் புகார் அளித்திருக்கலாம். அதை விடுத்து ஊடகங்களில் பேட்டி கொடுப்பது தவறான செயல்.
அதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து நேரில் பேச அழைத்திருக்கிறோம். இங்குள்ள சீனியர்கள் சிலர்தான் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். மற்றபடி, பிரேம்குமார் மீதான நடவடிக்கை என்பது பல்கலைக்கழக சாசன விதிகளின்படிதான் எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார் துணைவேந்தர் ஜெகநாதன்.
துணைவேந்தரிடம், கடந்த காலங்களில் பாலியல் புகார்களில் சிக்கிய பேராசிரியர்கள் மீதும், பாடம் நடத்தாத இணை பேராசிரியர் ஜனகம் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றியும் கேட்டதற்கு, ''பெரியார் பல்கலை பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். பரவாயில்லை. இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு புதுசாக இருக்கிறது'' என்று சிரித்தபடியே மழுப்பலாக பதில் சொல்லி சமாளித்தார்.
ஒரே தன்மையான புகார்... ஆனால் ஆளுக்கு தகுந்தாற்போல் பாரபட்சமான நடவடிக்கைகளால் பெரியார் பல்கலையின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கத் தொடங்கியிருக்கிறது என கவலை தெவிரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.