2021- ஆம் ஆண்டு நகர்ந்து முடிந்து 2022 -ல் நாம் கால்பதிக்கும் இத்தருணத்தில், இந்தாண்டு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம்.
'மகா கும்ப மேளா'- உற்சாகமாக கொண்டாடிய சாதுக்கள்!
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1 அன்று தொடங்கி நடைபெற்றது. சுமார் 30 நாட்கள் நடைபெற்ற கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். குறிப்பாக, சாதுக்களின் கூட்டத்தால் உத்தரகாண்ட் மாநிலம், ஸ்தம்பித்தது. அத்துடன், கங்கை ஆறு ஓடும் உத்தரபிரதேசம் மாநிலத்திலும் ஆங்காங்கே மக்கள் புனித நீராடினர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மகா கும்ப மேளாவை முன்கூட்டியே முடித்துக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதையேற்று, 'மகா கும்பமேளா' இவ்வாண்டு முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்!
உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம் உள்ளிட்ட உலகின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமை பொறுப்பு வகித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பராக் அகர்வால், டிசம்பர் மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்த நிலையில், இந்தியரான பராக் அகர்வால் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவிப்பு!
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மாதக் கணக்கில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநில எல்லைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். கடும் குளிர், வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் பல்வேறு விவசாய சங்கங்களின் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 19- ஆம் தேதி அன்று காலை திடீரென தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதன்படி, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மூன்று வேளாண் சட்டங்களும் முழுவதுமாகத் திரும்பப் பெறப்பட்டது.
ஈ.ஓ.எஸ்.- 03 செயற்கைக் கோள் ஏவும் முயற்சி தோல்வி!
புவி கண்காணிப்புப் பணிகளுக்காக 2,268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.- 03 (EOS-03) என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி- எப்10 ராக்கெட் (GSLV- F10) மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்று வந்தன.
26 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் 12- ஆம் தேதி அன்று அதிகாலை 05.43 AM மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.- எப்10 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆனால் சற்று நேரத்தில் எதிர்பாராத விதமாக கியோஜெனிக் எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட்டின் பயணத் திட்டம் முழுமை பெறவில்லை. செயற்கைக்கோள் 18.39 நிமிடத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையையை அடையவில்லை என்பதால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.
வெற்றியுடன் வீடுகளுக்கு திரும்பிய விவசாயிகள்!
கடந்த நவம்பர் மாதம் 29- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
என்றாலும், குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) குறித்து உறுதியளிக்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக் களத்தில் இருந்த விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விவசாயிகள் சங்கங்களுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் பெற்றதை அடுத்து, டிசம்பர் 11- ஆம் தேதி அன்று போராட்டத்தை விவசாய சங்கங்கள் கைவிட்டன. ஏற்கனவே அறிவித்தபடி டெல்லி எல்லைப்பகுதியில் இருந்துஅவர்கள் வெளியேறினர். போராட்டக் களத்தில் இருந்த கூடாரங்களை அகற்றிய விவசாயிகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்கு வெற்றியுடன் சென்றனர். சுதந்திர இந்திய வரலாற்றில் இந்திய விவசாயிகளின் போராட்டம் ஒரு மைல்கல்!
டிராக்டர் பேரணியின் போது வன்முறை!
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் 2020 நவம்பர் மாதம் 26- ஆம் தேதியில் இருந்து பேராட்டம் நடத்தினர். குடியரசுத் தினமான ஜனவரி 26- ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்கு டெல்லி காவல்துறையினரும் அனுமதி அளித்தனர்.
மூன்று வழிகளில் பேரணி நடத்த டெல்லி காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளின் ஒரு குழுவினர் தடுப்புகளை அகற்றிவிட்டு டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயிகளும், காவல்துறையினரும் காயம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கோபுரத்தில் விவசாய கொடிகளை ஏற்றினர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தியும் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விவசாயிகளும் காயம் அடைந்தனர்.
அச்சுறுத்தும் 'ஒமிக்ரான்' வகை கரோனா
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' வகை கரோனா தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது.பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள நாடுகள், சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அந்த வகையில், தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளை அபாயம் உள்ள நாடுளின் பட்டியலில் இந்தியா வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு பிசிஆர் அல்லது ஏஆர்டி கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாயம் 10 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், அபாயம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 17- க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 'ஒமிக்ரான்' பரவியுள்ள நிலையில், 'ஒமிக்ரான்' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500- ஐக் கடந்துள்ளது. இதனால், கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஒடிஷா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர் மக்கள்.
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300- க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஃபர்மிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து இந்த ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்தன. இச்செய்தியை சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் வெளியிட்டன. இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாகலாந்தில் அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை!
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு வீரரும் பலியானார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அசாம் ரைபிள் முகாமிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
கடந்த ஜூலை மாதம் 7- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுக் கொண்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
லக்கிம்பூர் வன்முறை
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் மாதம் 3- ஆம் தேதி அன்று பா.ஜ.க.சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அப்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கு பேரணி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பா.ஜ.க.வினரின் கார் ஒன்று, விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து, அங்கு நடைபெற்ற மோதலில் 4 விவசாயிகள் 3 பா.ஜ.க. நிர்வாகிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஓட்டி வந்த காரே விவசாயிகள் மீது மோதியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு, கைது செய்தனர்.