நேற்று பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்த கருத்து.
நேற்று கமல்ஹாசன், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்திருக்கிறது, இது கார்ப்பரேட் அரசியலை கையிலெடுப்பது போன்று உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளதே...
இது அப்படியல்ல, அவுங்க ஜெகன்மோகனுக்கு பண்ணிருக்காங்க, மம்தா பானர்ஜி பேசியிருக்காங்க, தமிழ்நாட்டுலகூட திமுக, அதிமுக அவங்கள்ட்ட பேசிட்டு இருக்கிறதா தகவல் வருது. அவங்க அதை வெற்றிகரமாக பண்ணிட்டு இருக்குறதுனால அவங்கள நிறையபேர் அணுகுறாங்க, அவ்வளவுதான். இந்தத் தேர்தலை நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றும் தேர்தலாகத்தான் பார்கிறோம். அதற்காக கூட்டணி என்ற பெயரில் யாருடனும் சமரசம் செய்துகொள்ள விருப்பமில்லை.
நாம் களத்தில் பிரச்சாரம் செய்தாலும், இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சாரமும் தேவைப்படுகிறது. இது அனைத்து கட்சிகளிலும் உள்ளது. அவர்களே இதற்கென்று தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி செய்கின்றனர். இவர் பிரபலமானவர் என்பதால் வெளியில் தெரிகிறது. வேறெதுவும் இல்லை.
அண்மையில் ஹைட்ரோகார்பன் குறித்த வீடியோ வெளியானதே...
ஒரு விஷயத்தை நமக்கு ஆதரவான கட்சி கொண்டுவந்தால் ஆதரவோ, எதிர்ப்பான கட்சி கொண்டுவந்தால் எதிர்ப்போ தெரிவிக்கும் வழக்கம் இங்கு இல்லை. ஒரு விஷயம் நடந்தால் அதுகுறித்த அனைத்து தகவல்களையும், அதன் சாதக பாதகங்களையும் கமல்ஹாசன் கேட்பார். அதையெல்லாம் ஆராய்ந்தபின்தான் அதுகுறித்து பேசவேண்டும் என்பார். மொத்தத்தில் நமது பாராட்டும் சரியாக இருக்கவேண்டும், நமது குற்றச்சாட்டும் சரியாக இருக்கவேண்டும் எனக்கூறுவார்.
தற்போதுகூட நீரியல் மேலாண்மை குறித்து கனகராஜ் போன்ற நீரியல் மேலாண்மை நிபுணர்களுடன் பேசி வருகிறோம். ஆளுங்கட்சி வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அது நீர் பிரச்சனை தீரவேண்டும் என்பதற்காக இல்லை, இந்தப் பிரச்சனையிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். நீண்டகால திட்டங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை. அந்த வீடியோ ஹைட்ரோ வீடியோ மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான். ஹைட்ரோகார்பன் திட்டம் விளைநிலங்களில் வரக்கூடாது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.