சமீபத்தில் இந்தி மொழி கட்டாயம் என்கிற விதிமுறை கொண்டு வந்தபோது உடனே அனைத்து தொழிற்சங்கத்தினரும் குறிப்பாகத் திமுகவினர் எதிர்ப்பு காரணமாக உடனே வாபஸ் வாங்கப்பட்டது.
சமீபத்தில் திருமங்கலத்தில் இரயில் விபத்து ஏற்பட்டதற்கு மொழி புரியாமல் இருந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்று கண்டறியப்பட்டது. காரணம் அந்த இடத்தில் பணிபுரிந்தவருக்கு இந்தியை தவிர தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியாதால்தான் இந்தப் பிரச்சனை என்கிறார்கள். இதற்கு இடையில் இந்த இந்தி பிரச்சனை குறித்துத் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் பிரச்சனை குறித்துத் தஷ்ணா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் பேசும்போது,
கேரளப்பகுதியில் 20 ஆயிரம் பேர், தமிழகப் பகுதிகளில் 62 ஆயிரம் பேர் எனத் தெற்கு ரயில்வேயில் 82 ஆயிரம் பேர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 20ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் 23 ஆயிரம் பேர் வட இந்தியர்கள். கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட்ட 1600 பேர் வட இந்தியர்கள் இன்னும் தெற்கு ரயில்வேயில் பணியில் சேரவில்லை. இவர்கள் தங்களின் தாய்மொழியான ஹிந்தியில் தேர்வு எழுதி எளிதாக வெற்றி பெற்று வருகிறார்கள்.
அதிகரித்து வரும் இவர்களால் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் மொழி புரிதல் இல்லாமல் அன்றாடம் குழப்பம் நிலவி வருகிறது. மதுரை கோட்டத்தில், திருமங்கலம் அருகே ஒரு ரயில் விபத்து ஏற்பட மொழி காரணம் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து ஊழியர்கள் வேலை செய்வதற்கான தொடர்பு மொழி பற்றி நிலைப்பாடு எடுப்பதில் நிர்வாகம் குழப்பிக்கொண்டது.
இதனால் பலமான எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைச் சந்தித்து மொழி கையாள போட்ட உத்தரவை திரும்பப்பெற நேர்ந்தது. வடமாநில ரயில்வே ஊழியர்களில் சுமார் 9ஆயிரம் ஊழியர்கள் சொந்த மாநிலங்களில் உள்ள ரயில்வேயில் பணியாற்ற விருப்பமாறுதலுக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
பணியில் சேர்ந்து 5 ஆண்டுகள் நிறைவு செய்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது ரயில்வே விதி. இதனால் கடந்த சில வருடங்களாகத் தமிழகப் பகுதியில் ரயில்வே பணிகளில் சேர்ந்து 9 ஆயிரம் வடமாநில ஊழியர்கள் இடமாறுதலுக்காகப் பதிவுசெய்யக் காத்து இருக்கிறார்கள்.
5 வருடங்கள் காக்க வேண்டும் என்பதால் சில ஆயிரம் வடமாநில ரயில்வே ஊழியர்கள் இடமாறுதலுக்குப் பதிவு செய்யாமல் வேறு வேலைக்கு இங்கிருந்தபடியே முயற்சி செய்து வருகிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் வடமாநிலங்களில் உள்ள அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கு ஆண்டுக்கு சுமார் ஆயிரம் வட இந்தியர்களுக்கு இங்கிருந்து இடமாறுதல் கிடைக்கிறது.
நிலைய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர்கள், என்ஜின் ஓட்டுனர்கள், கடை நிலை ஊழியர்கள் எனப் பல பிரிவுகளுக்குத் தொடர்ந்து இவர்கள் தேர்வாகி வருவதால் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் கூடி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இடமாறுதல் பதிவு செய்ய 5 ஆண்டுகள் பணிமுடித்து இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கவேண்டும். சிறப்பு விலக்கு வழங்கி இங்குள்ள 23 ஆயிரம் வடமாநிலத்தவர்களுக்கு விருப்ப இடமாறுதல் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு உடனே வழங்கவேண்டும்.
இதனால் உருவாகும் 23 ஆயிரம் பணி இடங்கள் உட்பட நடப்பில் உள்ள 20 ஆயிரம் பணியிடங்கள் சேர்த்து 43 ஆயிரம் தெற்கு ரயில்வே பணியிடங்களுக்குத் தமிழகம், கேரளா பகுதியில் உள்ளவர்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். வடமாநில ஊழியர்களுக்கு விருப்ப இடமாறுதல் தந்து 37ஆயிரம் தமிழக இளைஞர்களைத் தெற்கு ரயில்வே பணியமர்த்தவேண்டும் இதுவே மொழிப்பிரச்சனைக்குத் தீர்வாகும். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 37,000 இளைஞர்களை ரயில்வே துறை, தெற்கு ரயில்வேயில் பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.