Skip to main content

கலவரத்தை தடுக்கத்தான் காவிரி நீர் குறைப்பா? பா.ம.க. பாலு பேட்டி!

Published on 16/02/2018 | Edited on 16/02/2018

காவிரியில் தமிழகத்திற்கு 264 டி.எம்.சி. நீர் கேட்ட நிலையில் 177.25 டி.எம்.சி. நீர் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக 14.75 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு குறைவாக கிடைக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
 

pmk baalu


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பாமக செய்தித்தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு கூறியது:-
 

125 வருட பிரச்சனை காவிரி நீர் உரிமை தொடர்பானது. 1892ல் முதல் ஒப்பந்தம். 1924ல் போட்ட ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. 2007ல் நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. இது போதுமானது அல்ல என்று 72 டி.எம்.சி. நீர் கூடுதலாக வேண்டும் என்று மேல்முறையீடு செய்தது தமிழகம்.
 

அதுபோல கர்நாடக அரசு 132 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்த வழக்கு ஏறக்குறைய 10 ஆண்டுகள் நடந்து வந்தது. செப்டம்பர் மாதம் வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கர்நாடக அரசு கேட்டதைவிட கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் குறைகிறது. இது தமிழகத்தை பொறுத்தவரையில் ஏமாற்றம்தான். 1924ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் 400 டி.எம்.சி.க்கும் அதிகமான நீரை கொடுக்க வேண்டும்.

2007ல் நடுவர் மன்றம் 192 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தபோது கர்நாடகம் பற்றி எரிந்தது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக நிறுவனங்கள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. மிகப்பெரிய வன்முறை அங்கே உருவானது. இதற்கு பிறகு இந்த தீர்ப்பில் 192 டி.எம்.சி. நீருக்கு மேலாக ஒரு டி.எம்.சி. கூடுதலாக கொடுத்திருந்தால் கூட கர்நாடகம் இதனை மிகக் கடுமையாக எதிர்க்கும். இந்த பிரச்சனையை ஒரு சுமூகமாக கொண்டுவருவது எப்படி என்று உச்சநீதிமன்றம் பார்க்கிறது.
 

நடுவர் மன்றத் தீர்ப்பை கடந்த காலங்களில் கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. மிக முக்கியமான ஜீலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட தண்ணீரை திறந்துவிடாமல் தமிழகத்தை வஞ்சித்திருக்கிறது கர்நாடகா. இந்த சூழ்நிலையில் 177.25 டி.எம்.சி. தண்ணிரை முறையாக கொடுக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது வரவேற்பு அளிக்கக்கூடியது.
 

இந்த தீர்ப்பின் அடிப்படையில் 177.25 டி.எம்.சி. தண்ணிரை முறையாக தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை என்ன. மீண்டும் பல்வேறு காரணங்களை சொல்லி கர்நாடக அரசு தண்ணிர் தர மறுத்தால் என்ன செய்வது. காவிரி நதிநீர் பிரச்சனையில் மாநிலங்கள் உரிமைக்கொண்டாட முடியாது என்று சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. அப்படிப் பார்க்கிறபோது காவிரி நீர் திறந்துவிடும் அதிகாரமும், அதனை நடைமுறைப்படுத்துவதும், செயல்படுத்துவதும், கண்காணிப்பதும் காவிரி நடுவர் மன்றத்தின் கையில் வரவேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. மாநில அரசின் தலையீடு இருக்கக் கூடாது. நீர் குறைவு, அதிகம் என்ற பேச்சு இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 177.25 டி.எம்.சி. தண்ணீர் என்பதை சுட்டிக்காட்டுகிற மாதங்கள் அடிப்படையில் திறந்துவிடுவதற்கான, இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வேண்டும்.
 

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். கேரளாவுக்கு நீர் குறைக்கப்படவில்லை. புதுச்சேரிக்கும் குறைக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. 192 டி.எம்.சி. நீர் அல்லது 192 டி.எம்.சி.க்கு மேல் ஒரு டி.எம்.சி. என வழங்க உத்தரவிட்டிருந்தால் தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கலாம்.
 

இந்த தீர்ப்பை எடுத்த மாத்திரத்தில் கர்நாடக முதல் அமைச்சர், கர்நாடக வழக்கறிஞர்கள் வரவேற்கிறார்கள். இதனை அரசியல் ரீதியாகவும், நடுவர் மன்ற தீர்ப்பைவிட 14.75 டி.எம்.சி. நீர் குறைவாக தீர்ப்பு வந்திருப்பதாலும் அவர்கள் உடனடியாக வரவேற்கிறார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.