பிப். 3, 1969ஆம் ஆண்டு திமுக தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய இழப்பு ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதுவரை கட்சியை வழிநடத்திய பொதுச்செயலாளரும், 1967ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை வழிநடத்திவந்த தமிழக முதல்வருமான அண்ணா மறைந்தார். அன்றைய ஆளுநர் உஜ்ஜல்சிங், திமுக மூத்த தலைவர் நெடுஞ்செழியனை தற்காலிக முதல்வராக நியமனம் செய்தார். அதேவேளையில், முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள் என அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் நெடுஞ்செழியன். அரசினர் தோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடியது. அமைச்சர் கே.ஏ. மதியழகன் கலைஞரை முதல்வராக முன்மொழிந்தார். அப்போது எஸ்.ஜே. ராமசாமி, நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தார். இதனால், முதல்வர் பதவிக்கான வாக்கெடுப்புக்குப் போகவேண்டிய சூழ்நிலை உருவானது. அதே கனம் நெடுஞ்செழியன், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் முதல்வராக தயார்; இல்லை என்றால் எனக்கு அந்தப் பதவி வேண்டாம் என்று மறுத்தார்.
பெரும் புயலுக்குப்பின் அமைதியாக கலைஞர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பதவியேற்புக்கு முன்னதாக கலைஞர், முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறிவந்தார். அமைச்சர்கள் மதியழகன், சத்யவாணி முத்து, சாதிக்பாட்சா எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர், “நீங்க தான் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கலைஞரை சமாதானம் செய்தனர். அதனைத் தொடர்ந்துதான் கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கே வந்ததாக, கலைஞர் தனது 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். ஏகமனதாக முதல்வரானாலும், 1971ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக தேர்தலை சந்திக்கிறது. 67-ல் வெற்றிபெற்ற திமுகவின் ஆட்சிக் காலம் 72-ல் முடியவேண்டியது. ஆனால், ஆட்சி முடிய ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்டார் கலைஞர். மக்கள் மத்தியில் முதல் முறையாக முதல்வர் வேட்பாளராகக் கலைஞர் களமிறங்குகிறார். திமுக கூட்டணி 205 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிகண்டது. இதில், திமுக மட்டும் 184 தொகுதிகளை வென்றது. இந்தத் தேர்தலில், தேசிய காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைத்திருந்தது.
1971-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞருக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்தது. இதற்கு, மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. அதனைச் சமாளித்து கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அன்றே சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர். அதனைத் தொடர்ந்து மறுநாள் உடல் மற்றும் முகம் வீங்கிய நிலையில் ஒரு மாணவனின் சடலம் கல்லூரி அருகே இருந்த குளத்தில் மிதந்தது. அதே கலவரத்தில் உதயகுமார் எனும் மாணவன் மாயமானார். குளத்தில் இருந்த சடலம் மாணவர் உதயகுமார் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். மாணவர்களின் எழுச்சி, மாணவர்களின் போராட்டம், மாணவர்களின் ஆதரவு என ஆட்சிக்குவந்தது திமுக. ஆனால், அதே திமுக ஆட்சியில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பெரும் கரும்புள்ளியாக விழுந்தது.
அதற்கடுத்து மதுவிலக்கு பிரச்சனை; கடந்த 2016 தேர்தலில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை முக்கியத்துவப்படுத்தினர். இந்தத் தேர்தலில் மது ஆலைகள் யாருடையது, யார் தமிழகத்தில் மது விலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது என விவாதங்கள் அனல் பறந்தது. '1971 ஆட்சியில் கலைஞர் தலைமையிலான அரசு மதுவிலக்கு தளர்வுகளைக் கொண்டுவந்தது அதனால்தான், தமிழகத்தில் மது ஆறு ஓடுகிறது' எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 1971 திமுக ஆட்சியில் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டதே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த மதுவிலக்கு தளர்வுகள் எவ்வளவு காலம் நீடித்தது?
1937ஆம் ஆண்டு ராஜாஜி முதல்வராக இருந்தபோது சென்னை மாகாணத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால், நிதி நெருக்கடியைக் காரணம்காட்டி 1971ல் தமிழகத்தில் மது விலக்கிற்கு தளர்வைக் கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் கலைஞர். பெரும் இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் மதுவிலக்கில் தளர்வு ஏற்பட்டது. உண்மையில், 1971ல் மதுவிலக்கு தளர்வு கொண்டுவந்த திமுக, அதே ஆட்சிக் காலத்தில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியது. அதன்பின், 1977ல் அமைந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1981ஆம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு தளர்வு கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், 1983 ஆம் ஆண்டு மதுபானங்களை மொத்த வியாபாரம் செய்யும் வகையில், 'டாஸ்மாக்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு தமிழகம் முழுவதும் சில்லறை வணிகம் செய்யும் உரிமையை 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வழங்கியது. ஆனாலும் திமுகவின் மதுவிலக்கு தளர்வு இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
1972ஆம் ஆண்டு கட்சியின் சொத்துவிவரங்களைக் கேட்டு பொதுவெளியில் எம்.ஜி.ஆர். பேசினார். அதனைத் தொடர்ந்து அவர் முதலில் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டார். 14 அக்டோபர் 1972 அன்று, எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு, அக்டோபர் 17 ஆம் தேதி, எம்.ஜி.ஆர்., 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் புதிய கட்சியைத் துவங்கினார். அதன்பிறகு, கலைஞர் உள்ளிட்ட அமைச்சரவை மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் கொண்ட பட்டியலை அன்றைய ஆளுநர் கே.கே.ஷாவிடம் கொடுத்தார். ஆனால், 'அது எப்படியும் முதல்வர் பார்வைக்குச் சென்றுதான் குடியரசுத் தலைவருக்குச் செல்லும்' எனும் விவரம் அறிந்ததும் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். பின்னர், சிறிது காலம் கழித்து நேரடியாக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் கொடுத்தார். அதன்மூலம், பிரதமர் இந்திராவிடம் சென்ற அந்தப் புகார்ப் பட்டியல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஓரங்கட்டி வைக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு மத்திய அரசின் அதிகாரத்திற்கும் மாநில அரசின் உரிமைக்கும் நடந்தபோரில், மத்திய அரசின் அதிகார பலம் மாநில அரசின் உரிமையை நசுக்கி கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.
கச்சத்தீவு விவகாரம் கலைஞரையும், திமுகவையும் கலங்கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்திய அரசையே கலைக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆம், 1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதி வெற்றி செல்லாது என தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்ததும், இந்தியாவில் பத்திரிகைகளுக்குக் கடிவாளம் கட்டப்பட்டது. மத்திய அரசை விமர்சித்தாலோ, கண்டனங்கள் தெரிவித்தாலோ, போராட்டங்கள் நடத்தினாலோ சிறை! ஓர் இந்தியரின் தலைமையில் ஆங்கிலேயரின் ஆட்சி மீண்டும் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. இந்தியா முழுக்க நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேரு கொண்டுவந்த பிரிவினை தடுப்புச் சட்டத்தின்போது அண்ணா மாற்றிக்கொண்டது திராவிட நாடு கொள்கையை மட்டுமே. ஆனால், 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்பதில் விடாப்பிடியாகவே இருந்தார் அண்ணா. அவர் வழி வந்த கலைஞரும் அதையே முழங்கினார்.
அதனால், நெருக்கடி நிலையில் மத்திய அரசின் கை ஓங்கியபோது, அதனைத் தன் பேனாவினாலும், போராட்டத்தினாலும் அடக்க முயன்றார் கலைஞர். விளைவு, தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு, கலைஞர் மீதும் திமுக ஆட்சியின் மீதும் எம்.ஜி.ஆர்., கொடுத்த ஊழல் புகார் தூசி தட்டி எடுக்கப்பட்டு சர்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் நீட்சியாக இந்த ஆட்சிக் கலைப்பு அரங்கேற்றப்பட்டது.
இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்ததால், மாநிலக் கட்சிகளை மத்திய அரசு தடைசெய்ய திட்டம் தீட்டி வருகிறது என செய்தி வெளியானது. மாநிலக் கட்சிகளுக்குத் தானே தடை என்று எம்.ஜி.ஆர்., மாநில சுயாட்சியை உயிர்மூச்சாக முழங்கிய அண்ணாவின் பெயரில், தொடங்கிய அதிமுகவை, அ.இ.அ.தி.மு.க. எனப் பெயர் மாற்றம் செய்தார். அதனைத் தொடர்ந்து நடந்த 1977 சட்டசபைத் தேர்தலில் அதிமுக இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மதுவிலக்கு, அதிமுக உருவாக்கம், எம்.ஜி.ஆர். கொடுத்த ஊழல் புகார், அதன் மீது இந்திரா தொடுத்த 'சர்காரியா கமிஷன்' என எல்லாம் திமுகவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு சாதகமாகவும் அமைந்தன.
1969-ல் மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத கலைஞர், 1971 தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கி 184 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற வைத்து முதல்வரானார். மக்களால் முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படாத எடப்பாடி, மக்கள் மத்தியில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் காலத்தைப் போலவே மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால், கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக 1969ல் இருந்து 1971 வரை கலைஞர் செய்ததும், 2017ல் இருந்து 2021 வரை பழனிசாமி செய்ததும் ஒரே மாதிரியான ஆட்சியா என மக்கள் முடிவு செய்வார்கள்.
திமுக ஆட்சியைப் பிடிக்க மொழி மட்டும்தான் காரணமா? அரசியல் மாற்றம்.. ஆட்சி மாற்றம்.. #2
தேர்தலில் எம்.ஜி.ஆரின் அதிமுக சந்தித்த படுதோல்வி..! | ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம் | #4