மத்திய அரசில் தனது மகனுக்கு கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை வைத்தியலிங்கத்தைத் தூண்டிவிட்டு தடுத்துவிட்டதாக எடப்பாடி மீது ஏகத்துக்கும் கோபத்தில் இருந்தார் ஓ.பி.எஸ். இதுகுறித்து எடப்பாடியிடமே தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்திய போது, "தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வாரணாசியில் அமித்ஷாவை சந்தித்து அமைச்சரவையில் இடம்கேட்டு கோரிக்கை வைத்தீர்கள். ஆனால், பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வந்ததற்குப் பிறகு, "கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு அமைச்சர் பதவி தான்' என உறுதி தந்த பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க. வுக்கு அந்த வாய்ப்பையும் கூட தரவில்லை. உங்கள் மகனின் வாய்ப்பை நான் தடுத்துவிட்டேன் என சொல்வது அபாண்டம்'’ என ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தினார் எடப்பாடி. அவரது பேச்சை ஓ.பி.எஸ். நம்பவில்லை. இருவருக்குமிடையே நீறுபூத்த நெருப்பாக பூசல் கனன்று கொண்டிருக்கிறது'' என்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
இதற்கிடையே, பல் வலிக் காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய எடப்பாடியை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் கே.சி. வீரமணி, உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அங்கிருந்திருக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது வீரமணியும் உதயகுமாரும் எடப்பாடியிடம் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. மேல்மட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படும் நிலையில்... இது குறித்து விசாரித்தபோது, ""தன்னை சந்தித்த அமைச்சர்களிடம் இயல்பாக பேசிய எடப்பாடி ஒரு கட்டத்தில், "ஆட்சியையும் கட்சியையும் நான் மட்டுமே காப்பாத்த வேண்டியதிருக்கிறது. தேர்தலில் அமைச்சர்கள் யாருமே ஒழுங்கா வேலை பார்க்கலை. ஒவ்வொரு மாவட்டத்துலயும் என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியும்' என வீரமணியையும் உதயகுமாரையும் பார்த்தவாறே கடிந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி.
அவரது பேச்சை ரசிக்காத வீரமணி, "தேனி தொகுதியில் கட்சியை ஓ.பி.எஸ். ஜெயிக்கவெச்ச நிலையில் சேலத்துல ஏன் உங்க ளால ஜெயிக்க வைக்க முடியல? ஏகப்பட்ட கோடிகளை கொட்டியும் உங்க சொந்த ஊரிலே யே தி.மு.க. அதிக வாக்கு வாங்கியிருக்கு. ஆனா உங்க அளவுக்கு நாங்களும் செலவு செஞ்சிருந்தா, நாங்க ஜெயிச்சிக் காட்டியிருப்போம்' என எகிற, "எவ்வளவு செலவு செய்யணும்னு லிஸ்ட் கொடுத்தோமே' என எடப்பாடி சொல்ல, "பணம் கொட்டுற இலாகாக் களை நீங்களே வெச்சிருக்கீங்க. இலாகாவை மாத்தி கொடுங்க. கட்சியையும் ஆட்சியையும் நாங்க காப்பாத்துறோம்' என கடுமையாக எகிறியிருக்கிறார் வீரமணி. இடையிடையே உதயகுமாரும் எடப்பாடியிடம் கோபம் காட்டியிருக்கிறார். ஆனால் எடப்பாடியால் எந்த பதிலையும் பேசமுடியவில்லை'' என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள். கட்சியும் ஆட்சியும் கல கலத்துப் போயிருப்பதால் கவலையில் வீழ்ந்திருக்கிறார் எடப்பாடி.