மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள விக்கிரமங்கலம், மேலசௌரிக்கான்பட்டியில் ஒரு மாடுபிடி வீரருக்கு கோயில் கட்டி அப்பகுதி மக்கள் இன்று வரை வணங்கி வருகிறார்கள். இந்த விவரம் அறிந்து நாம் நேரடியாகக் களத்திற்குச் சென்று அந்தக் கோயில் எதற்காகக் கட்டப்பட்டது? அந்த மாடுபிடி வீரனின் வீரம் எத்தகையது? என்று விசாரித்தோம். அந்தக் கோயில் பூசாரி நமக்கு அந்தக் கதையை விளக்கினார்.
“இது ஐந்து தலைமுறைக்கு முன்பு நடந்த கதை. கருத்தமாயித்தேவரின் மகன் அழகத்தேவர். இந்த அழகத்தேவர்தான் முதல் ஜல்லிக்கட்டு வீரன். கருத்தமாயித்தேவர்தான் இந்த ஊர உருவாக்கினாரு. கருத்தமாயிக்கு நாலு ஆம்பள புள்ளைங்க. இதுல கடைசி ஆள்தான் அழகத்தேவன். மத்த மூணு பேரும் விவசாயம் பாத்துக்கிட்டு இருந்தாங்க. அழகத்தேவர் மாடு பிடிக்கிறதுல கில்லாடி. இன்னிக்கு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்னுலாம் சொல்றாங்க. ஆனா, அஞ்சு தலைமுறைக்கு முன்ன தமிழ்நாட்டுல ஜல்லிக்கட்டுக்கு பேர் போனது விக்கிரமங்கலம்.
அழகத்தேவன் எல்லா மாட்டையும் புடிக்க மாட்டாரு. பறசாட்றது; சாட்டிவிட்றது; காளைய அடக்குனா பரிசுத் தறேன்; புள்ளையக் கட்டித்தறேன்; சொத்து பங்கு போட்டுத்தறேனு சாட்டிவிட்றத மட்டும் புடிப்பாரு. இவருக்கு சமயன்னு ஒரு நண்பன். அவரு மாட்ட அடக்குனா இவரு வால புடிச்சு தப்படிப்பாரு.
எங்க விக்கிரமங்கலம் பக்கத்துல கீழக்குடி கிராமத்துல எங்களுக்கு நிகரா இருந்தவங்க, “அழகத்தேவன் இருந்தா நாம ஜெயிக்க முடியாது. அழகத்தேவன கொல்லணும்”னு கன்னுல இருந்தே ஒரு மாட்ட பழக்கியிருக்காங்க. ஜல்லிக்கட்டு மாடு வலதுபக்கம்தான் முட்டும். எந்த ஜல்லிக்கட்டு மாடும் இடதுபக்கம் முட்டாது. ஆனா, அந்த மாட்ட ரெண்டு பக்கமும் முட்ற மாரி தயார் பண்ணாங்க. அந்த மாடு பருவத்துக்கு வர நேரத்துல கீழக்குடியில பறசாட்டி ஜல்லிக்கட்டு நடத்தினாங்க. அழகத்தேவனும், சமயனும் போய் மாட்ட அடக்கிட்டாங்க. ஆனா, மாடு குத்தி அழகனுக்கு குடல் வெளிய தள்ளிடுச்சு. உடனே சமயன் துண்ட எடுத்து குடல உள்ள தள்ளிக் கட்டிட்டான்.
அப்புறம், அழகன தூக்கிக்கிட்டு சமயன் மேலக்குடிக்கு வந்துட்டு இருக்கும்போது அழகன் குடிக்க தண்ணி கேட்டிருக்காரு. சமயன் அவர கீழ இறக்கிட்டு பக்கத்துல இருந்த குளத்துல துண்ட நனைச்சுக் கொண்டு வந்து வாயில தண்ணி விட்டிருக்காரு. அவன இறக்கி வச்ச இடத்துல இன்னிக்கும் யார் போனாலும் ஒரு கல்ல எடுத்துப் போட்டுட்டுப் போறது வழக்கம். அப்புறம் ஊருக்கு வந்து பொழச்சிக்கிட்டான்.
இத தெரிஞ்சுக்கிட்ட அவங்க, “இவன் பொழச்சிக்கிட்டான். நாம சொன்ன மாரி அவனுக்கு பங்கு கட்டி விடணும்”னு பழைய ஆறாத புண்ணு, தீராத நோய் எல்லாம் சரி பண்ற மாரி ஒரு வைத்தியன செட் பண்ணி இங்க அனுப்புனாங்க. அந்த வைத்தியன் இங்க வந்தபோது கருத்தமாயி உழுதுக்கிட்டு இருந்திருக்காரு. அப்ப இந்த வைத்தியன பாத்துட்டு, “என் மகனுக்கு மாடு குத்தி ஒரு சின்ன காயம் இருக்கு”னு சொல்ல, அவரு பாத்துட்டு, “இப்ப ஒரு கட்டு கட்றேன். அடுத்த வாரம் வந்து ஒரு கட்டு கட்றேன். ரெண்டு கட்டுல புண்ணு ஆறிடும்”னு சொல்ல, இவங்க நம்பி கட்ட கட்டிட்டாங்க. ஆனா, அந்த கட்டுல கள்ளி கொழுந்த வச்சு கட்டிட்டாங்க. அதுல தான் அவர் இறந்தாரு.
அழகன் மாடு குத்தி ஜல்லிக்கட்டுல இறக்கல. ரொம்ப நாள் கழிச்சு இந்த வைத்திய சூழ்ச்சில இங்கத்தான் இறந்தாரு. எங்க வம்சத்த சேர்ந்தவங்க இதுவரைக்கும் அந்த ஊர்ல தண்ணிக்கூட குடிச்சதில்ல. சம்மந்தமும் பண்ணதில்ல. அது பண்ணினாலும் விளங்காது. அந்தக் குடும்பமும் நல்லாவும் இல்ல; வம்சமும் கெட்டுப்போச்சு.
அழகத்தேவர் சாவப்போறோம்னு தெரிஞ்சு, “நான் செத்தா சிலை அடிச்சு வைங்கப்பா”னு சொல்லிட்டு செத்தாரு. அந்த ஞாபகமா தான் நாங்க சிலை அடிச்சு சிவராத்திரி அன்னிக்கு திருவிழா கொண்டாடுவோம். சிவராத்திரிக்கு மூணு நாளு கெடா வெட்டி அன்னதானம் போட்டு விழா எடுப்போம். சுத்தி முப்பது மைல் தூரத்துல எங்க ஜல்லிக்கட்டு நடந்தாலும் மாடும் மாடுபிடி வீரர்களும் இங்க வந்து வணங்கிட்டு போவாங்க. அப்படிப் போனவங்க இதுவர தோத்ததே இல்ல” என்றார்.