பொதுச்செயலாளரான பிறகு நடக்கவிருக்கும் முதல் மாநாட்டிற்கே எடப்பாடியார் தரப்பு திணறிக்கொண்டிருக்க, திருச்சி மாநில மாநாட்டைத் தொடர்ந்து சேலத்தில் மண்டல மாநாடு என ஓ.பி.எஸ். தரப்பு எகிறியடிப்பதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகக் கசியும் தகவல் அ.தி.மு.க.வினரை கொதிநிலையில் வைத்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் திருச்சியில் பிரம்மாண்டமான ‘மாநாடு’ நடத்தி முடித்தார் ஓ.பி.எஸ். ‘அது தானாகக் கூடிய கூட்டமும் இல்லை; ஓ.பி.எஸ்.சுக்கு அ.தி.மு.க.வில் இனி எந்த இடமும் இல்லை’ என எடப்பாடி பழனிச்சாமி காட்டமாகக் கூறினாலும், ஓ.பி.எஸ்.சையும் இணைத்துக்கொண்டு பயணித்தால்தான் இனிவரும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெறுமென்ற குரல்கள் கட்சிக்குள் எழத் தொடங்கியுள்ளன.
ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாட்டு அறிவிப்புக்குப் பிறகு அவசர அவசரமாக செயற்குழுவைக் கூட்டி, அ.தி.மு.க.வின் முதல் மாநில மாநாடு ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்கும் என அறிவித்தார் எடப்பாடி. இதற்கிடையே, தனது அணியின் மேற்கு மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முடித்த கையோடு, ஜூலை 1ஆம் தேதி தனது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி சேலத்தில் நடத்தவிருக்கும் கொங்கு மண்டல மாநாட்டு தேதியை அறிவிக்கவுள்ளார் ஓ.பி.எஸ். எடப்பாடியின் ஆமை வேகத்துக்கும், ஓ.பி.எஸ்.சின் முயல் வேகத்துக்குமான காரணம் குறித்து தென்மண்டல முக்கியப்புள்ளி ஒருவர் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.
"வானகரத்தில் பொதுக்குழு கூடுவதற்கு முன்பே, ‘ஓ.பி.எஸ்.சை கட்சியிலிருந்து நீக்கியே தீர வேண்டும். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று வீர வசனம் பேசி, ஓ.பி.எஸ். வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை தனதாக்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதற்கான பலனை இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டபோதே அதற்கான செலவினங்களை ஆர்.பி.உதயகுமார்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டார் ஆர்.பி.உதயகுமார்.
அடுத்த இரண்டே வாரங்களில், திருச்சி ஓ.பி.எஸ். மாநாட்டில் பெரிய அளவில் கூட்டம் கூட, அதைவிட 5 மடங்கு அளவுக்கு அதாவது, 40-50 லட்சம் தொண்டர்களை அழைத்து வந்து கின்னஸ் சாதனையே நிகழ்த்துவோமென அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலரும் கூற, அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கூட்டத்தை அழைத்து வரும் செலவையும் உதயகுமாரே பார்த்துக்கொள்ள வேண்டுமென பலரும் எடப்பாடியிடம் சொல்ல, ‘அதெல்லாம் அவர் பாத்துக்குவாரு, ஆளை மட்டும் நீங்க ஏற்பாடு பண்ணுங்க' எனக் கூறினார் எடப்பாடி. இந்நிலையில், ‘எப்படிப் பார்த்தாலும் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டை தாண்டும், நான் மட்டுமே செலவழிக்க முடியாது' என ஆர்.பி.உதயகுமார் பேக்கடிக்க, இதில் எடப்பாடியோடு மனஸ்தாபம் ஏற்பட, வளையங்குளத்தில் மாநாட்டு திடலுக்கு ஒப்பந்தம் போடுவது இழுத்துக்கொண்டே சென்றது.
தென் மண்டலத்தில் மாநாடு நடத்துவதால், ஆர்.பி.உதயகுமாரின் தனிப்பட்ட செல்வாக்குதான் உயருமே தவிர, தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்று முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கையை விரிக்க, செல்லூர் ராஜுவோ, ‘கட்சிக்காக நான் வீட்டை விற்காதது ஒண்ணுதான் பாக்கி..' எனக் கூறிப் புலம்பியிருக்கிறார். அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பேசினார் உதயகுமார். மணிகண்டனோ, ‘பொதுக்குழுவுக்கு என்னோட சொந்த செலவுல எல்லாரையும் கூட்டி வந்தேன். உங்க சொந்தக்காரரான முனியசாமி மாவட்டச் செயலாளரா இருந்தும் பைசா அவுக்கல. எடப்பாடியாரும் என்னை கண்டுக்கல. எங்கிட்ட காசு இல்ல' எனக் கூறி நழுவிவிட்டார். எனவே சங்கடத்தோடு தான் கஜானாவைத் திறந்திருக்கிறார் உதயகுமார். இதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன் கவர்னரை சந்திக்கச் சென்ற போது உதயகுமாரை அழைக்கவில்லை எடப்பாடி.
ஒரு காலத்தில் தென் மண்டலத்தையே கலக்கிய ராஜேந்திர பாலாஜிக்கும் கூட எடப்பாடி மீது வருத்தமிருப்பதால், மாநாட்டு வேலை குறித்து உதயகுமாரிடம் விசாரிக்கவே இல்லையாம். இதற்கிடையே, சேலம் மாநாட்டுக்கு ஓ.பி.எஸ். தயாராகும் சூழலில், ஓ.பி.எஸ்.சுக்கு இங்கிருந்தே சில எக்ஸ் எம்.எல்.ஏ.க்கள் சிக்னல் கொடுக்கிறார்களாம்'' என்று பூடகமாக முடித்தார்.
இதற்கிடையே, இணை பொதுச்செயலாளர் பதவி தரத் தயாராக இருப்பதாக போயஸ் கார்டனில் அம்மாவிற்கு ஆல்-இன்-ஆலாக இருந்தவர் மூலம் ஓ.பி.எஸ்.சுக்கு தகவல் போக, அவரோ, எப்பவும்போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே இருக்க வேண்டுமென்று சொல்லியனுப்பிவிட்டாராம். விரைவில், ‘தொண்டன்’ பெயரில் தொலைக் காட்சி, புதுக்கட்சி என்று பா.ஜ.க.வின் மறைமுக தயவில் பரபரப்பாக இருக்கும் ஓ.பி.எஸ்.ஸோடு, தென் மண்டல முக்கியப் புள்ளிகள் சிலர் சேலம் மாநாட்டின்போது சேரக்கூடுமென்று சத்தியம் செய்கிறார்கள் ஜெயபிரதீப்பிற்கு நெருக்கமான சிலர்.
இந்நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மதுரை மாநாட்டிற்கான லோகோவை அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வெளியிட்டுள்ளார்.