ஆசாபாசங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுபட்டு அமைதியையும் ஞானோதயத்தையும் பெற்ற நிலையில், புத்த மதத்தின் சொல் வழக்கு பிரகாரம் கௌதமர் புத்தராகி நிர்வாணம் என்ற நிலையை அடைந்தார். ‘நிர்வாணம் என்ற பூரண நிலை ஞானோதயத்தையும் விடுதலையையும் குறிக்கிறது. எந்தக் கடவுளிடமிருந்தோ, புற சக்தியிடமிருந்தோ வருவதில்லை. மாறாக, நற்செயல்களிலும் நற்சிந்தனைகளிலும் ஒருவர் எடுக்கும் தனிப்பட்ட முயற்சியே இது’என்று கற்பிக்கிறார் புத்தர். ஆக, நிர்வாணம் என்பதே பேரின்ப நிலையாகக் கருதப்படுகிறது.
புத்தரின் போதனையை வைத்து நிர்வாணம் குறித்த அலசல் இங்கே எதற்கென்றால், நிர்வாண ஓவியங்களை நம்மில் பலரும் தப்பாகப் பார்ப்பதாலும், பேசுவதாலும்தான்!
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஓவியர் ரம்யா சதாசிவம். தான் வரைந்த ஓவியங்களுக்காக 2016-ல் பிரபுல்ல தணுக்கர் விருது பெற்றார். இவருக்கு ஸ்பந்தன் சிறந்த ஓவியக் கலைஞர் விருதும் கிடைத்தது. மாநில மற்றும் தேசிய விருதினை வென்ற இவர், 2006-லிருந்து வரைந்து வரும் சமகால யதார்த்தவாதி. இந்திய நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், கிராமத்து வாழ்க்கை முறைகள், உழைக்கும் மக்களின் அன்றாட அலுவல்கள், பெண்களின் பல்வேறு நிலைகள் என இவர் சித்தரித்துள்ள ஓவியங்கள் பற்பல. சென்னையில் நடக்கின்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் தவறாமல் இடம்பெறும். இவரே ஓவியக் கண்காட்சிகளை நடத்தியும் வருகிறார். ‘மனதுக்குத் திருப்தி அளிப்பதே கலை. அதேநேரத்தில், அதன் மூலம் வருமானமும் ஈட்ட வேண்டும்.’ எனச் சொல்லும் இவர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஓவியங்களை விற்பனை செய்தும் வருகிறார்.
இணையதளங்களில் தான் பகிர்ந்த நிர்வாண ஓவியங்களைப் பார்த்த பலரும் தன்னைப் பற்றி அசிங்கமாகப் பேசிவருவதாக வருத்தம்கொள்ளும் ரம்யா சதாசிவம் ”படைப்புகளில் உள்ள பல்வேறு வகைகளில் ஒன்றுதான் மனிதனின் அங்க அடையாளங்களை ஒவியமாக தத்ரூபமாக வரைவது. ஒரு பெண் இதுபோன்ற ஓவியக்கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு இங்கே யாருக்கும் உரிமையில்லை.” என்று குமுறவும் செய்கிறார். சமீபத்திய அவரது பேட்டி இதோ -
“நியூட் பெயின்டிங்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எல்லா சப்ஜெக்ட் மாதிரி அதுவும் ஒரு சப்ஜெக்ட். திராவிடியன் கலர் இன்டியன் ஸ்கின் கலர். என்னைவிட டார்க்கா இருக்கவங்க.. அந்த கலர் மேல லைட் விழும்போது லைட் ரெஃப்லக்ஷன் ஷேடோ, அதெல்லாம் கொண்டு வர்றது ரொம்ப கஷ்டமான விஷயம். எல்லா ஆர்டிஸ்டுக்கும் அதை ட்ரை பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கும் அந்த மாதிரி ஃபிகரேடிவ் ஒர்க் பண்றது ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்னா நான் எந்த தயக்கமும் இல்லாம ஃபேஸ்புக்ல போட்டு, இதை நான்தான் வரைஞ்சேன்னு சொல்லுவேன். என்னோட ஃபிகரேடிவ் பெயின்டிங்ஸ்.
அதான் நியூட் பெயிண்டிங்ஸ்னு அவங்க குறிப்பிடற அந்த விஷயம்.. அந்த பெயின்டிங்க நான் ஒரு 100 பேருக்கு காட்டினா.. 70 பேர் இன்பாக்ஸ்ல வந்து தொல்லை பண்றாங்க. தப்பாதான் பேசுறாங்க. ஒரு 20 மெம்பர்ஸ் ஒழுக்கம்.. கொள்கை.. கோட்பாடுன்னு அட்வைஸ் பண்றாங்க. 10 மெம்பர்ஸ் தான் அதை ஆர்ட் ஒர்க்கா பார்க்கிறாங்க. நான் வரைஞ்சி வரைஞ்சி போடுறப்ப.. இந்த நம்பர்ஸ் அப்படியே ரிவர்ஸ் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.”என்கிறார். நிர்வாணம் இயற்கையானது; இழிவானதல்ல!
சிற்பக் கலையோ, ஓவியக் கலையோ, எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது.