இரண்டாவது முறையாக இந்திய அரசின் பிரதமராக மோடி பதவியேற்று மே மாதம் 30-ஆம் தேதியோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. பொதுவாக, தன்னை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்வுகளைப் பிரமாண்டமான நிகழ்வாக மாற்றி அதனை விமர்சையாகக் கொண்டாட நினைப்பது பிரதமர் மோடியின் இயல்பான பாணி.
அந்த வகையில், மே 30-ஆம் தேதியைப் பிரமாண்டப்படுத்த மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா விவகாரம் அதனைப் பதம் பார்த்துள்ளது. இந்த நிலையில், பாஜக ஆட்சியிலுள்ள மாநில பாஜக தலைவர்கள் பலரும், ஓராண்டு நிறைவை விமர்சையாகக் கொண்டாடலாம்; அதற்கான ஒரு ஸ்லோகத்தை வரையறை செய்யலாம் என பா.ஜ.க. தலைவர் நட்டாவிற்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனை மோடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் நட்டா. ஆனால், மோடி இதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். கரோனா விவகாரத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நேரத்தில், கொண்டாட்டங்கள் வைப்பது தேவையற்ற விமர்சனங்களை எதிரொலிக்கச் செய்யும் எனத் தெரிவித்து விட்டாராம் மோடி.
இதனை அனைத்து மாநில பாஜக தலைவர்களுக்கும் தெரிவித்திருக்கிறார் நட்டா. கொண்டாட்டங்களுக்குத் தடை விழுந்திருந்தாலும், ஓராண்டு நிறைவை, சமூக இடைவெளியுடன் விமர்சையாகக் கொண்டாடுவது குறித்து திட்டமிடுகின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.