சுதந்திர தின உரையில் பிரதமர் மோடியின் புதிய அறிவிப்பு குடியரசு தலைவரின் அதிகாரத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கையா? என்கிற கேள்வி காங்கிரஸ் தலைவர்களிடம் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.
இந்தியாவின் 73-வது சுதந்திரதினம் நாடு முழுவதும் வியாழக்கிழமை ( ஆகஸ்ட்-15 ) கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ’’ ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்குமிடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும், அவைகளுக்கு ஆற்றல் மிகுந்த தலைமையை வழங்கவும் முப்படைத் தளபதி என்கிற பதவியை உருவாக்க அரசு முடிவு செய்திருக்கிறது. முப்படைகளும் ஒன்றாகப் பயணிக்க இது உதவும். மாறி வரும் உலகத்தன்மைக்கேற்ப இந்தியாவும் தயாராக வேண்டியதிருக்கிறது ‘’ என்றார்.
பிரதமரின் இந்த புதிய அறிவிப்பு, முப்படைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இந்த சூழலில், முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட , அவைகளுக்கு கட்டளையிட முப்படைகளுக்கும் ஒரே தளபது என்கிற பதவி ஆரோக்கியமானதுதான். ஆனால், இந்த புதிய அறிவிப்பு குடியரசு தலைவரின் அதிகாரத்தை பறிப்பதாக இருக்கிறது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி முப்படைகளின் தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கிறார். பிரதமரும் அவரது தலைமையிலான அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்துபவராகவே குடியரசு தலைவர் பதவி இருந்தாலும் கூட , அவருக்கான அதிகாரத்தை புறந்தள்ளிவிட முடியாது. முப்படைகளுக்குமான தலைமை தளபதியாக குடியரசு தலைவர் இருக்கும் நிலையில், அவர் மூலமாகவே முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட கட்டளைகள் பிறப்பிக்க முடியும். இந்த சூழலில், முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்கிற பதவி உருவாக்கம் தேவையற்றது. அதனை உருவாக்குவதன் மூலம் குடியரசு தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்கிறார்கள்
இதுகுறித்து முன்னாள் ராணுவத்தினர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘’ முப்படைகளுக்குமான ஒரே தளபதி என்பது சிறப்பானதுதான். ஆனால், அதில் சில குழப்பம் இருக்கிறது. அதாவது, தற்போது மூன்று படைகளுக்கும் தனித்தனி தலைமை தளபதிகள் இருக்கின்றனர். இந்த மூன்று தலைமை தளபதிகளின் பதவியை நீக்கி விட்டு, முப்படைகளுக்கும் ஒரே தளபதிதான் என்கிற நிலையை உருவாக்கப்போகிறார்களா ? அல்லது மூன்று தலைமை தளபதிகளின் பதவிகள் நீக்கப்படாமல் அந்த 3 தளபதிகளையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு கட்டளையிட ஒரு தலைமை தளபதியை உருவாக்கப் போகிறார்களா? என தெரியவில்லை ‘’ என்கிறார்கள்.