“நல்ல காரியம்கூட அரசியல் கண்ணோட்டத்தில் கெட்டதாகவே பார்க்கப்படுகிறது. விருதுநகரிலுள்ள ஆளும்கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளே, இதற்கு உதாரணம்.” என்று விருதுநகரில் அதிமுக சீனியர் ஒருவர் நம்மிடம் புலம்பிய நேரத்தில், கணேஷ் கண்ணன் என்பவர் “நல்லவர்களுக்கு இதுதான் கதியா?” என்றும், “கட்சிக்குள் இவ்வளவு கடும் கோபம் எதற்கு? கட்சியை வளர்ப்பதற்கா? கட்சியை அழிப்பதற்கா? நமது கட்சியில் அரசியலை வைத்து சம்பாதித்தவர்களெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். இவரோ, வியாபாரத்தில் சம்பாதித்த பணத்தை ஏழைகளுக்காக செலவழிக்கிறார்.” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
யார் அந்த நல்லவர்? என்ன நல்ல காரியம் செய்தார்?
விருதுநகரில் பிறந்து கோவையில் தொழில் செய்துவரும் கோகுலம் தங்கராஜ் என்பவர், 2018-ல் விருதுநகரிலுள்ள நிறைவாழ்வு நகர் என்ற இடத்தில், தன் சொந்த செலவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பாலம் கட்டிக் கொடுத்தார். அப்போது, 'கட்சி சார்பற்ற இளைய தலைமுறை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை உருவாக்கி, பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
தற்போது, ‘விருதுநகர் முனிசிபாலிடி சேர்மன் சீட் உங்கள் மனைவி மாலா தங்கராஜுக்குத்தான்..’ என்று அதிமுக தரப்பில் உத்தரவாதம் அளித்திருக்கும் நிலையில், இந்த ஊரடங்கு நேரத்தில், விருதுநகரின் அத்தனை வார்டுகள் மீதும் கரிசனம் கொண்டு, நிவாரண உதவிகளை நேரடியாக வழங்க ஆரம்பித்தார் தங்கராஜ். இது, ‘அமைதிப்படை அமாவாசை’ ரேஞ்சுக்கு பேசப்படும் உள்ளூர் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு பிடிக்கவில்லை. ‘அடுத்த சேர்மன் தனது கைக்குள் அடங்கியவராக இருக்கவேண்டும்’ என்று ஒருவரது மனைவியை மனதுக்குள் தேர்வு செய்துவிட்டு, தங்கராஜுக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார்.
‘அமாவாசை’ தரப்பினர் தூண்டுதலின் பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம், கோகுலம் தங்கராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. ‘ஊரடங்கு விதிகளை மீறி விடுதி ஒன்றில் தங்கியபடி, அதிமுகவினரை வைத்து தங்கராஜ் கூட்டம் நடத்துகிறார். ஊருக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். திருப்பூருக்கும், விருதுநகருக்கும் அடிக்கடி தங்கராஜ் வந்து செல்வது எப்படி?’ என்று புகாரில் கேள்வி எழுப்ப, “சரி.. நீங்க கிளம்புங்க..” என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தங்கராஜுவை அறிவுறுத்தி அனுப்பியிருக்கிறது.
நாம் கோகுலம் தங்கராஜுவை தொடர்புகொண்டோம். “எதிர்கட்சியினர் என்றால் மோதிப்பார்க்கலாம். ஏழைகளுக்கு நல்லது செய்வதை சொந்த கட்சியிலேயே எதிர்க்கிறார்கள். என்ன செய்வது? அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. 2017-ல் இருந்தே, இங்கே விருதுநகரில் ஆர்.ஆர்.நகர், கல்போது, கன்னிசேரி புதூர் போன்ற பகுதிகளில், மக்கள் நலத்திட்டங்களை என்னால் முடிந்த அளவுக்கு செய்து வருகிறேன். என்னை வெளியூர்க்காரன் என்று யாரும் சொல்ல முடியாது. இங்குதான் பிறந்து வளர்ந்தேன். என்னை கட்சிக்கு கொண்டுவந்தது பிடிக்கவில்லை என்றால் அமைச்சரிடமே நேரடியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? மக்களுக்கு கொடுப்பதை தடுக்கும் அரசியலை ஏன் பண்ண வேண்டும்?” என்று வருத்தப்பட்டார்.
“துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர் தங்கராஜ். பந்தா பேர்வழி போல தெரிவார். விருதுநகர் நகராட்சிக்கான தேர்தலில், தன் சொந்தப்பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைத்து வெற்றி பெறக்கூடியவர் என்ற அடிப்படையில்தான், அவரது மனைவிக்கு சேர்மன் சீட் என்று சொல்லி களத்தில் இறக்கிவிட்டனர். தங்கராஜுவுக்கு எதிராக சிலர் கிளம்பியிருப்பதை, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அரசியலாகவே பார்க்க வேண்டியதிருக்கிறது. தென் மாவட்டத்தில் ஓ.பி.எஸ். கை ஓங்கிவிடக்கூடாது என்று முளையிலேயே கிள்ளி எறியப் பார்க்கின்றனர்.” என்றார் அந்த சீனியர்.
அரசியலில் எல்லாமே ஒரு கணக்கோடுதான் நடக்கிறது!