நீண்ட நெடிய அனுபவம் கொண்ட செய்தி வாசிப்பாளர், ஊடகவியலாளர் நிஜந்தன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
1989 ஆம் ஆண்டு நான் என்னுடைய செய்தி வாசிப்பாளர் பணியைத் தொடங்கினேன். அப்போது பிரதமராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் பல எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஊடகங்கள் பெருகிவிட்டன. செய்திகள் மக்களை உடனுக்குடன் சென்றடைகின்றன. அந்தக் காலத்தில் குறைந்த செய்திகள் இருந்தாலும் அவற்றை உள்வாங்கும் தன்மை மக்களுக்கு இருந்தது. இன்று பல செய்திகள் காதில் விழுவதால் மக்களால் அவற்றை உள்வாங்க முடியவில்லை என்று நினைக்கிறேன்.
ராஜீவ் காந்தி படுகொலையின்போது செய்தியாளர்களின் பணி கடுமையாக இருந்தது. சுனாமி போன்ற பேரிடர் யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இவை அனைத்துமே சவாலான அனுபவங்கள் தான். என்னுடைய கடுமையான பணிகளை வீட்டிலும் புரிந்து கொண்டார்கள். அனைத்து காலகட்டங்களிலுமே செய்தியாளர்களுடைய பணி என்பது கடுமையான ஒன்றுதான். செய்தியாளர்கள் தங்களுடைய பணியை முழுமையான புரிதலுடன் செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
மக்களை எது அதிகம் கவர்கிறதோ அதை இன்னும் அழகுபடுத்தி செய்தியாக மக்களிடம் வழங்க வேண்டும் என்பதே அனைத்து காலங்களிலும் செய்தி நிறுவனங்களின் மனநிலையாக இருந்து வருகிறது. என்னுடைய பெற்றோர் மரணத்தின்போது கூட ஒருநாள் விடுப்பு எடுத்துவிட்டு என்னுடைய பணியைத் தொடர்ந்தேன். எழுத்தின் மீது எப்போதுமே எனக்கு ஆர்வம் இருந்தது. இதுவரை நான் 11 நாவல்களும் ஒரு கவிதைத் தொகுப்பும் எழுதியிருக்கிறேன். நாடகங்களிலும் நான் நடித்திருக்கிறேன். செய்தி வாசிப்பிற்கே சில முகபாவனைகள் நமக்குத் தேவை. ஒவ்வொரு செய்தியையும் அதன் தன்மைக்கேற்ப சொல்ல வேண்டும்.
கல்வி தொடர்பாக சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறேன். அண்ணா பல்கலைக்கழகத்திற்காக நான் செய்த குறும்படம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது. தங்கர் பச்சான் சாருடைய இயக்கத்தில் ஒரு சிறு வேடத்தில் சினிமாவிலும் நடித்திருக்கிறேன். இந்தப் பயணம் சவால் நிறைந்தது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தினமும் சில விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்கிற மனநிறைவு இருக்கிறது.