புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனைக் களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் இருமொழிக்கொள்கையே தொடரும் எனச் சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தமிழ் படிக்கக் கூடாது. இந்தி படிக்க வேண்டும் என்று சொன்னார்களா? தி.மு.க.வின் விஷயங்களை அ.தி.மு.க. ஏன் தூக்கிச் சுமக்கிறது? எனப் புரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி ஏதாவது வந்துவிட்டதா? பி.ஜே.பி. கூட இனி அ.தி.மு.க. இருக்கும் என்கிற எண்ணமே எனக்குக் கிடையாது. ஏனென்றால் சமீப காலமாக முருகருடைய கந்த கஷ்டியில் இருந்து எடுத்துப் பார்த்தால் அவ்வளவு பிரஷர் கொடுத்தப் பிறகுதான் இரண்டு பேர் மீது ஃஎப்.ஐ.ஆர். போட்டார்கள்.
காவி டிரஸ்ஸப் போட்டா காவி களங்கம் என்கிறார். தேசியக் கொடி களங்கமா? காவியைக் கட் பண்ணிவிட்டு, வெள்ளையும், பச்சையும் கிருத்துவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் வேண்டாம் என்கிற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் எது அறிவாலயமா? அல்லது எந்த இடம் என்று நீங்கள்தான் சொல்லணும்.
அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள். அட்லீஸ்ட் திரும்ப நீங்க வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லன்னா கிடைக்கவே கிடைக்காது. ஏனென்றால் எல்லாம் பார்த்தாச்சி. எல்லாமே நீங்க தி.மு.க. ஸ்டாண்டத்தான் எடுக்குறீங்க. பிராமணர்களுக்கு எதிரான நிலைப்பாடு. EWS பத்து பர்சன்ட் கொடுக்க மாட்டேன் எனச் சொல்வது, அதற்கு சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன் எனச் சொல்வது. என்ன எனக்குப் புரியல. நீங்க என்ன அம்மா ஆட்சி நடத்துறீங்கன்னு சொல்றீங்க'' எனப் பதிவிட்டுள்ளார்.