Skip to main content

தமிழ் பக்தி இலக்கியங்களைப் படித்து வியந்துபோன ஜி.யு. போப்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Nanjil Sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், தமிழ் இலக்கியங்களையும் சமயத்தையும் ஏன் பிரிக்க முடியாது என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சமயத்தைத் தவிர்த்துவிட்டு தமிழ் குறித்துப் பேச முடியாது. காலத்தால் மூத்த மொழி தமிழை, எங்கு பிறந்தவள் என்று உணராதவள் என்று கூறி பெருமைபடுத்தலாம். தென்றலில் ஒலி வாங்கிய தமிழ்; தேனாற்றில் உயிர் வாங்கிய தமிழ்; நின்று செல்லும் காவிரியில் நெடிய உடல் வாங்கிய தமிழ்; கற்றோர் அவையில் கவியான தமிழ்; பெற்றோர் இல்லாமல் பிறந்த பெரும்பொருளான தமிழ் என தமிழின் பெருமைகளைக் கூறிக்கொண்டே செல்லலாம். செம்மொழி தகுதிக்காக ஒரு மொழிக்கு வகுக்கப்பட்ட 11 இலக்கணத் தகுதியும் உடைய மொழி நம் தமிழ் மொழி. உலகத்தின் கிளாசிக்கல் மொழிகள் என்று சொல்லப்படுகிற பல மொழிகள் காலத்தால் இன்று களைத்துப்போய்விட்டன. சில மொழிகள் காணாமலும் போய்விட்டன. எத்தனையோ படையெடுப்புகள் மற்றும் ஊடுருவலைத் தாண்டி தமிழின் கொடி இன்றைக்கும் உயரப் பறந்துகொண்டிருக்கிறது. 

 

தமிழின் முதல் இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தின் தொன்மை என்னவென்று ஆய்வுசெய்தால் ஐந்தாயிரம் ஆண்டு பழமையானது என்று தெரியவருகிறது. அந்த தொல்காப்பியத்தைப் படிக்கும்போது அகத்தியம் இங்கு இருந்தது என்ற செய்தி தெரியவருகிறது. இந்தத் தமிழை அகத்தியர், தொல்காப்பியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் எனப் பலர் வளர்த்தனர். அதன்பிறகு, சங்க இலக்கியங்கள் என்று வரும்போது அதனை அக இலக்கியங்கள், புற இலக்கியங்கள் என்று இரண்டாக வகுத்தார்கள். அக இலக்கியங்கள் காதல் இலக்கியங்களாகவும் புற இலக்கியங்கள் வீர இலக்கியங்களாவும் திகழ்கின்றன. சாகாவரம் பெற்ற சங்க இலக்கியங்கள், தமிழர்களின் நாகரிகத்திற்கும் நயத்தக்க பண்பாட்டிற்கும் அடையாளமாக இருக்கின்றன. காப்பியக்காலம் என்று வரும்போது முதல் தமிழ்த்தேசிய காப்பியமாக சிலப்பதிகாரத்தைக் கூறலாம். இயல், இசை, நாடகம் என மூன்று தமிழையும் ஒரே காப்பியத்தில் பார்க்க வேண்டுமென்றால் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில்தான் பார்க்க முடியும். சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி என்று காப்பியங்கள் வந்த பிறகு, கம்பர் வருகிறார். தென்தமிழில் கம்பர் எழுதிய ராமகாதை, உலக இலக்கிய வரிசையில் முதல் இடத்தில் இருக்கிற மகத்தான படைப்பு. கம்பனைத் தொடர்ந்து வில்லிபுத்தூரார், மகாபாரதத்தை தமிழில் தந்தார். இவை இரண்டும் வேறுமொழியில் எழுதியவற்றை தழுவி எழுதப்பட்டவை. தமிழுக்கென்று ஒரு காப்பியம் இருக்குமேயானால், அது சேக்கிழார் எழுதிய பெரியபுராணம். 63 நாயன்மார்களின் வரலாற்றைக் காப்பியப்போக்கில் அற்புதமாக பதிவுசெய்தவர் சேக்கிழார். நெற்றி நிறைய திருநீறு பூசியவனுக்கான காப்பியம் பெரியபுராணம். நெற்றியில் நாமம் பூசியவனுக்கு ஒரு காப்பியம் இருக்குமேயானால், அது கம்பன் எழுதிய ராமகாதைதான். 

 

‘இஸ்லாம் எங்கள் வழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி’ என்று இங்கு வாழ்கிற இஸ்லாமியர்களுக்கு நாங்களும் தமிழர்கள்தான் என்று நிமிர்ந்து நடைபோடுவதற்கு ஒரு காப்பியம் தேவைப்பட்டபோது, எட்டயபுரத்தில் பிறந்த உமறுப்புலவர், நபிகள் நாயகத்தின் வரலாற்றை நயம்பட தொகுத்து சீறாப்புராணம் உருவாக்கினார். பாவப்பட்ட மக்களுக்காக பாரச்சிலுவை சுமந்த இயேசுவை இறைவனாகக் கருதி இந்த மண்ணில் வாழக்கூடிய கிறிஸ்தவர்கள், நாங்களும் தமிழர்கள்கள்தான் என்று நிமிர்ந்துநிற்க எங்களுக்கு ஒரு காப்பியம் வேண்டாமா என்று கேட்டபோது, இத்தாலி தேசத்திலிருந்து விவிலியத்தைப் பரப்புவதற்காக இன்பத்தமிழகத்தின் வீதிக்கு வந்த ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி, தமிழ்ப் படித்து தன்னுடைய பெயரை வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார். பின், தேன் சொட்டும் தேம்பாவணி என்ற காப்பியத்தைப் படைத்தார். 

 

சமயமும் தமிழும் என்று பார்த்தால் சைவம் தமிழை வளர்த்தது; வைணவம் தமிழை வளர்த்தது. இஸ்லாம், பவுத்தம், சமணம் என எல்லா மதங்களும் தமிழை வளர்த்தன. ஆழ்வார்களின் நாலாயிர திவ்யபிரபந்தம், ஆழமான கருத்துச் செறிவும் வளமும் மிகுந்தது. அதன்பிறகு, சைவ இலக்கியங்களைப் பன்னிரு திருமுறைகளாகத் தொகுத்தார்கள். திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் பாடிய பாடல்களில் தேன் சொட்டும்; தீந்தமிழ் மணக்கும். 18ஆம் நூற்றாண்டுவரைக்கும் சிற்றிலக்கியங்களிலும் சமயத்திற்கு இடமிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் வருகிறார். அவருடைய பாடல்கள் திருவருட்பா என அழைக்கப்படுகிறது. உள்ளம் உருகக்கூடிய அளவிற்கு வள்ளலாருடைய பாடல்கள் உள்ளன. 6ஆம் நூற்றாண்டு தொடங்கி 19ஆம் நூற்றாண்டுவரை சமயங்கள்தான் தமிழை வளர்த்தன. இது, புதுக்கவிதைகளின் காலம். சமய இலக்கியங்களைப் படிக்காமல் நீங்கள் கவிதை எழுத ஆரம்பித்தால் உங்கள் கவிதைகளில் சொல்லும் அழகும் இருக்காது. கண்ணதாசனிடமும் வாலியிடமும் சமயத்தமிழின் தாக்கம் அதிகம் இருந்தது. சமயம் குறித்து சிந்தித்தவர்களின் எழுத்துகள் தமிழுக்கு உரமூட்டின; தமிழின் பெருமையை உலகறியச் செய்தன. 

 

விவிலியத்தை பரப்புவதற்காக லண்டனில் இருந்து ஜி.யு.போப் தமிழகம் வந்தார். ஆங்கிலமறியாத் தமிழ்நாட்டு மக்களிடம் எப்படி நான் விவிலியத்தைப் பரப்ப முடியும் என்று நினைத்து, விவிலியத்தைப் பரப்புவதற்காக தமிழ்ப் படிக்க ஆரம்பித்தார். தமிழ் இலக்கியங்களையெல்லாம் படித்த பிறகு, பக்தி இலக்கியங்கள் லத்தீனில் மட்டுமே இருக்கிறது என்று உலகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. தமிழில் இருப்பதைப்போன்ற பக்தி இலக்கியங்கள் உலகின் எந்த மொழியிலும் இல்லை. திருவாசகம் எலும்பை உருக்குகிற பாடல்களாக உள்ளன. நாளைக்கே நான் இறக்க நேர்ந்தால் என் கல்லறையில் ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று எழுதுங்கள் என ஜி.யு.போப் கூறினார். தமிழுக்கு உலக செம்மொழி என்ற அந்தஸ்தை வாங்கித் தந்ததில் பக்தி இலக்கியங்களின் பங்கும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பக்தி என்ற அடிப்படையில் மட்டுமே இவற்றைப் படிக்காமல், இவை இன்பத்தமிழ் இலக்கியங்கள், உலகிலுள்ள எந்த இலக்கியங்களும் இவற்றிற்கு ஈடாகாது என்று எண்ணிக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தால், பக்தி இலக்கியங்களின் சுவையை முழுமையாக நாம் அறியலாம். அதில் உள்ள நேர்த்தி, தமிழின் கீர்த்தியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது. சாகா வரம்பெற்ற சங்க இலக்கியங்களைத் தமிழகத்தின் எட்டு திசைகளிலும் பதினாறு கோணங்களிலும் கால் வலிக்க நடந்து தேடி, பதிப்பித்து தந்த உ.வே. சாமிநாத ஐயரின் சாதனைக்கு ஈடுமில்லை, இணையுமில்லை. அவருடைய குருநாதராகக் கருதப்படும் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தமிழ்க் கடலாக இருந்தார். இவற்றையெல்லாம் தாண்டி, தமிழகத்திலுள்ள திருத்தலங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட திருத்தல வரலாறு மிகப்பெரிய அத்தியாயத்தை தமிழுக்குத் தந்தது. காஞ்சி புராணம், திருவண்ணாமலை புராணம், திருநெல்வேலி புராணம் என ஒவ்வொரு ஊரைக் குறித்த புராணங்களிலும் தமிழின் அழகு ஊர்வலம் வந்தது. புராணங்களைப் புளுகு என்று கூறினாலும், நம்புவதற்கு உகந்தது இல்லை என்று கூறினாலும் அதிலும் தமிழின் கொடி உயரப் பறந்தது என்பதை நாம் மறுப்பதற்குமில்லை, மறப்பதற்குமில்லை. எனவே, தமிழின் இலக்கியப் பரப்பில் சமயம் சாதித்ததைப்போல வேறெதுவும் சாதிக்கவில்லை என்று கூறுவது மிகப்பொருத்தமாக இருக்கும்.