ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக காட்டியுள்ளதாக கூறி அந்த படத்திற்கு எதிராக சில அமைப்புக்கள் குரல் கொடுத்து வருகிறது. படத்தில் தங்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் இந்த படத்திற்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பாக பதிலளித்த நடிகர் சந்தானம் "ஒருவரை உயர்த்துவதர்காக மற்றவர்களை தாழ்த்தக்கூடாது" என்று கூறியிருந்தார். சந்தானத்தின் இந்த பதிலுக்கும் பலர் எதிர்ப்பது தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சந்தானத்தின் இந்த பேச்சுக்கு மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த புதுமடம் ஹலீம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,
மற்றவர்களை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை தாழ்த்தி பேசக்கூடாது என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
மற்றவர்களை உயர்த்த வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை தாழ்த்த கூடாது என்று சந்தானம் கூறியுள்ளார். அவரின் ஸ்டேட்மெண்ட் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். சொல்கிற அவர் சரியான ஆள் இல்லை. அவர் படங்களில் என்னென்ன கேலி கிண்டல்களை அவர் செய்துள்ளார் என்று நம் அனைவருக்கும் தெரியும். பெண்களை கொச்சைப்படுத்தி பேசுதல், பெண்களை ஆபாசமாக காட்டுதல் போன்ற பல்வேறு காட்சிகளை அவர் நடிக்கும் படத்தில் இருக்கும். அந்த ஸ்டேட்மெண்டை கூறுவதற்கு முற்றிலும் தகுதியில்லாதவர் சந்தானம். நல்ல கருத்தை அவர் தன்னுடைய படங்களில் கூறாத போது, பொதுவெளியில் தான் நல்லவனாக காட்டிக்கொள்ள முயல்கிறார். அந்த படத்தை எத்தனையோ பேர் பார்த்துள்ளா்கள், நானும் பார்த்தேன். யாருக்கும் எந்த தவறு தெரியவில்லை. அந்த காலண்டரில் படம் இருப்பது கூட நாம் யாரும் கவனித்திருக்க மாட்டோம். ஆனால் இவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு தேடிப்பார்த்து ஏதாவது ஒரு குற்றத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். தங்களுடைய முழு நேரத்தையும் அதற்காக இவர்கள் செலவிடுகிறார்கள்.
அந்த காலண்டர் விவகாரத்தில் கூட அந்த படம் நீக்கப்பட்டு வேறு படம் வைக்கப்பட்டது. அதற்கு சூர்யா தரப்பில் விளக்கமும் தரப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏர்றுக்கொள்ளாமல், அவரின் விளக்கம் திமிர் தனமாக இருப்பதாக சிலர் தவறாக செய்தி பரப்புகிறார்கள். ஒரு 25 ரூபாய் காலண்டருக்கு 5 கோடி இழப்பீடு கேட்கும் இந்த நேரத்தில் கடந்த காலத்தில் எந்தமாதிரியான படம் வெளியானது என்று பார்க்க வேண்டும். ருத்ர தாண்டவம் என்ற ஒரு படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விடுதலைச் சிறுதைகள் கட்சி தலைவர் திருமாவளவனை போன்று ஒரு கேரக்டரை உருவாக்கி அவரை அவமானப்படுத்தும் விதமாக காட்சிகளை வைத்திருந்தீர்களே, அது மட்டும் சரியா. ஒரு காலண்டருக்கு குதிக்கும் இவர்கள் ஒரு தலைவரை வேண்டும் என்றே அவமானப்படுத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ருத்ர தாண்டவம் படத்தில் வில்லன் கேரக்டருக்கு பின்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக போராடியவர்கள் புகைப்படங்கள் எல்லாம் இடம்பெற்றிருந்ததே, அதுகுறித்து யாராவது பேசினீர்களா? எனவே பரபரப்புக்காக இந்த மாதிரி பேசுவர்களின் பேச்சுக்களை நாம் புறம்தள்ள வேண்டும்.