Skip to main content

“எனக்கு இன்ஸ்பிரேஷன் என்னுடைய அப்பாதான்” - சிங்கப்பெண் ராஜேஸ்வரி நெகிழ்ச்சி!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

hjk

 

சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் ஒரு காட்சி மிக வைரலானது. காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுந்துகிடந்த ஒருவரை தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு ஆட்டோவில் ஏற்றிவிட்ட காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. கீழ்ப்பாக்கம் பகுதி காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரிதான் அந்த வைரல் வீடியோவில் இருந்தவர். இதுதொடர்பாக முதல்வர் அவரை கூப்பிட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் நாம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

அந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நீங்கள் கொண்டாடப்படுகிறீர்கள். இளைஞர்கள் பலரும் ‘சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் ஒலிக்க நீங்கள் அவரை தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகளைப் பயன்படுத்திவருகிறார்கள். இதை எப்படி உணர்கிறீர்கள். சந்தோஷமாக இருக்கிறதா? 

 

சிங்கப்பெண் என்று சொல்வது உற்சாகமாக இருக்கிறது, பெருமையாகவும் கருதுகிறேன். சந்தோஷமாகத்தான் இருக்கிறது. 

 

பெரும்பாலும் ஆய்வாளர்கள் தனக்கு கீழே இருப்பவர்களை இந்த மாதிரியான வேலை செய்யச் சொல்வார்கள். ஆனால் நீங்களே களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்?

 

அனைத்து அதிகாரிகளும் தற்போது களத்தில் இறங்கி அவர்களே நேரில் ஆய்வு செய்கிறார்கள். எங்களைவிட மேலதிகாரிகள் எங்களுக்கு முன் உதாரணமாக செயல்படுகிறார்கள். எனவே இதுபோன்ற இடர்பாடுகளில் நாமே மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த சம்பவம் நடைபெற்றது.  

 

இந்த மாதிரியான துணிச்சலான சம்பவம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன் உதாரணம் என்று யாராவது இருக்க வேண்டும். உங்களுக்கு யார் இந்த மாதிரியான செய்கைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்? 

 

எனக்கு எப்போதும் என்னுடைய தந்தைதான் இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார். 

 

மற்ற காவல் நிலையங்களில் ஆய்வாளர் அறை என்பது இரண்டு மூன்று அறைகளைத் தாண்டி இருக்கும். ஆனால் நீங்கள் ஆய்வாளராக இருக்கும் இந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் அறை என்பது உள்ளே நுழைந்த உடனே இருக்கிறது. இது தங்களின் முயற்சியால் நடந்ததா? 

 

பொதுமக்கள் அனைவரும் காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் நேரடியாக பேச வேண்டும், எவ்வித பயமும் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த முறையில் காவல் நிலைய அறை மாற்றப்பட்டது. பொதுமக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோம். எனவே அவர்கள் காவல் நிலையம் வருவதற்கு எவ்வித பிரச்சனையும் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

 

இந்த சம்பவத்துக்குப் பிறகு உங்களை யாரெல்லாம் தொடர்புகொண்டு பாராட்டினார்கள், அதை எப்படி உணர்கிறீர்கள்? 

 

நிறைய பேர் தொலைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்கள். டிஜிபி சார், சென்னை கமிஷனர் சார் , டி.சி சார் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் என பலரும் பாராட்டினார்கள். அவர்களின் பாராட்டு பெரிதும் ஊக்கமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது.