
சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் 4 ஆண்டுகால சிறைத்தண்டனை முடித்த சசிகலாவுக்கான விடுதலை உத்தரவு அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மருத்துவ மனைக்கே வந்தது. ஜனவரி 27 அன்று காலை 10 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் கேசவமூர்த்தி, சிறை சூப்பிரெண்டு லதா மற்றும் அரசு வழக்கறிஞர் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி ஆகியோர் விக்டோரியா மருத்துவமனையின் டீன் ஜெயந்தியை சந்தித்தார்கள். கொரேனா தடுப்பு உடைகளுடன் 12 மணி வாக்கில் அவர்கள் சசிகலாவை சந்தித்து விடுதலை பத்திரத்தை வழங்கினார்கள். அதில் கையொப்பமிட்டார் சசிகலா.
ஆக்ஸிஜன் உதவியில்லாமலும், அறிகுறியில்லாத கொரோனா நோயாளியாகவும் சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற மருத்துவ சான்றிதழை சிறை நிர்வாகத்திற்கு டீன் ஜெயந்தி அளித்தார். அந்த நேரத்தில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பரபரப்பாக மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிற்கு ஒரு சம்மனை கொடுத்தார்கள். அத்துடன் 17 கிலோ எடை உள்ள ஆவணங்களையும் அளித்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா பினாமிகள் மூலமாக, போயஸ் கார்டனில் கட்டி வரும் புது பங்களா உள்பட 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. அதற்கான விளக்கத்தை தருமாறு சசிகலா இருந்த பரப்பான அக்ரஹாரா சிறைக்கு மத்திய அமலாக்கத்துறையினர் கடிதம் அனுப்பியிருந்தார்கள். சசிகலா வாங்காத நிலையில், விடுதலையானவுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு அளித்து அடுத்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியிடம் சொல்லிவிட்டு சென்றார்கள். மருத்துவமனையில் நார்மல் ட்ரீட்மெண்ட் என்றாலும், பாஜக அரசு கொடுத்தது ஷாக் ட்ரீட்மெண்ட்.
ஏற்கனவே 20ஆம் தேதி இதே தகவலை வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி, சசிகலாவை கொரோனா தடுப்பு உடையுடன் சந்தித்து எடுத்துச் சொன்னார். அதை எந்த ரியாக்ஷனும் இல்லாமல் கேட்டுக்கொண்ட சசிகலாவிடம் மருத்துவர்கள், ""கர்நாடகா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை சட்டங்களின்படி தீவிரமாக கொரோனா பாதித்த ஒருவர் 10 நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும், அதில் மூன்று நாட்கள் அவர் செயற்கை சுவாசம் இல்லாமல் இயற்கையாக சுவாசிக்க வேண்டும், 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படும், அதில் நெகட்டிவ் என்று வந்தால்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரமுடியும்'' என விளக்கினார்கள்.

தனியார் மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதை டாக்டர்கள் தெரிவித்தபோதும், தன்னை கொரோனாவிலிருந்து காப்பாற்றிய இங்கேயே சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகிறேன் என சொல்லிவிட்டார் சசி.
விடுதலையாகும் சசிகலாவை வரவேற்க தினகரன், விவேக், டாக்டர் வெங்கடேஷ் போன்ற சொந்த பந்தங்களும், அமமுக தொண்டர்களும் இவர்களைத்தாண்டி அதிமுகவினரும் வந்திருந்தனர். ஏ-2 சசிகலாவுக்கு சிறை திறந்த நாளன்று சென் னையில் ஏ-1 ஜெ.வின் சமாதி, நினைவு இல்லம், சிலை ஆகியவை திறக்கப்பட்டன. அதற்கு முதல் நாள் இந்தியாவின் குடியரசு தினம். கொரோனா தொற்றைக் காரணம் காட்டி, சென்னை கடற்கரையில் நடைபெறும் அணிவகுப்பை பார்வையிடும் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், மறுநாள் (ஜனவரி 27) அன்று ஜெ சமாதி திறப்புக்காக தமிழகம் முழுவதும் இருந்தும் 2300 பேருந்துகளை ஏற்பாடு செய்து லட்சக்கணக்கில் ஆட்களை குவித்தது ஆளுங்கட்சி. முதல் நாள் அச்சுறுத்திய கொரோனா அடுத்தநாள் லீவு போட்டு ஓய்வெடுத்துவிட்டதா என்ற விமர்சனத்திற்கு அரசுத் தரப்பில் பதில் இல்லை. வழக்கமாக, ஆளுங்கட்சிக்காக 1000 பேர் கூடினால் லட்சங்களில் கணக்கு காட்டும் உளவுத்துறையோ, லட்சக்கணக்கில் திரட்டி வரப் பட்டவர்களின் எண்ணிக்கையை 50ஆயிரம் என சுருக்கியது.

ஏ-1 சிலை திறப்பும், ஏ-2 சிறை திறப்பும் நல்ல நிகழ்வுகளே என பாசிட்டிவ்வாக பதில் சொன்ன டிடிவி தினகரன், பெங்களூருவில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போய் பிப்ரவரி 3ஆம் தேதி சசிகலா வெளியே வரும் நாளன்று அளிக்கப்பட வேண்டிய வரவேற்புகளுக்கான ஏற்பாடுகள் பற்றி சொந்தபந்தங்களுடன் விவா திக்க ஆரம்பித்தார்.
சசிகலாவுக்கு கொரோனா வந்தவுடன் அவரது சொந்தபந்தங்களெல்லாம் தங்களது முன்விரோதத்தை மறந்து ஒற்றுமையை உருவாக்கியுள்ளனர். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது திவாகரனின் சம்பந்தி உளவுத்துறையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதை தினகரன் எதிர்த்தார். தினகரனின் எதிர்ப்பின் காரணமாக அவரை அந்தப் பதவியில் இருந்து மாற்றினார் எடப்பாடி. இது தினகரனுக்கும் திவாகரனுக்குமான மோதலாக வெடித்தது. சசிகலாவின் உறவினரான மகாதேவன் மரண சடங்கின்போது திவாகரனுக்கு நெருக்கமாக இருந்த எடப்பாடி உள்பட அனைத்து தமிழக அமைச்சர்களையும் தினகரனை எதிர்க்குமாறு அறிவுரை சொன்னார் திவாகரன். அது இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்தின் மனைவியும், தினகரனின் சகோதரரான பாஸ்கரனின் மகளுமான ஜெயஸ்ரீயின் வளைகாப்பு நடந்தது. விரோதம் காரணமாக ஜெய்ஆனந்தின் திருமணத்திற்கு அழைக்கப்படாத தினகரன் தனது மனைவியுடன் இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். திவாகரனிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினார். இதைப் பார்த்த சசிகலாவின் உறவினர்கள் இந்த ஒற்றுமை முன்பே வந்திருந்தால் எடப்பாடி இன்று சசிகலாவை எதிர்க்கும் அளவிற்கு நிலைமைகள் வந்திருக்காது எனப் பேசிக் கொண்டனர்.
சசிகலா வெளியே வந்தாலும் அவர் பழைய பலத்துடன் இல்லை. ஜெ. இருந்த காலத்தில் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அனுபவம் மிக்க சசிகலாவின் உத்தரவுகளை நிறைவேற்ற அவரது உறவினர் படை ஒன்று 24 மணி நேரமும் இயங்கியது. அத்துடன் அவருக்கு தேவையான அரசியல் வேலைகளை திரைமறைவில் செய்து முடிக்க நடராஜனும் உயிருடன் இருந்தார். இன்று சசிகலாவிடம் பணம் இருக்கிறது, ஆனால் அதை வெளிக்கொண்டு வந்து சுதாகரனுக்கு பத்து கோடி ரூபாய் அபராதம் கட்ட சசிகலாவால் முடியவில்லை. நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகளை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்தநிலையில் சசிகலா வெளியே வந்தாலும் இன்று அவரை எதிர்க்கும் எடப்பாடிக்கு எதிராக வேகமாக பாய்வாரா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும் சசிகலா என்கிற ஆளுமையை குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்கான படை பலம் என்பது அவரது உறவினர்கள் மட்டுமல்ல, அதைத்தாண்டி ஏராளமான நலன்விரும்பிகள் அவருக்காக பணியாற்றக் காத்திருக்கிறார்கள்.
""கடந்த ஒரு வருடமாக, கொரோனா ஊரடங்கு சிறைவிதிகளால் சசிகலா தனது சொந்த பந்தங்கள் உள்பட யாரையும் சிறையில் சசிகலா சந்திக்கவில்லை. தனக்கு எதிராக எடப்பாடி டெல்லியில் ஓப்பனாகப் பேசிய நாட்களிலிருந்து அவருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென சசிகலா இந்நேரம் தீர்மானித்து அதற்காக களப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார். அவரது விடுதலை அவரது பணியை எளிதாக்கிவிட்டது. மருத்துவமனையில் இருந்தபடியே தொலைபேசி மூலம் சசிகலா பேச ஆரம்பித்துவிட்டார். அந்தத் தகவல்கள் எடப்பாடியை சென்றடைந்துக்கொண்டிருந்தது. அதனால்தான் ஜெ.வின் நினைவு இல்ல திறப்பு விழாவில் பேசிய எடப்பாடியின் முகத்தில் வாட்டம் தெரிந்தது'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.
சசிகலாவை வரவேற்று நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க நிர்வாகி ஒட்டிய போஸ்டர் என்பது ஒரு பானை சோற்றுக்கான பதம்தான். சசிகலா வெளிப்படையாக அரசியல் வேலைகளைத் தொடங்கும்போது அமைச்சர்கள் உள்பட பலரும் இந்தப் பக்கம் வருவார்கள் என்கிறது அவரது சொந்தபந்தம்.
படங்கள் : ஸ்டாலின், அசோக், குமரேஷ்