யுத்த களத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், இவர்களை கொலை செய்தல், விளைநிலங்களைப் பாழாக்கல், பழ (தரும்)மரங்களை வெட்டல், மிருகங்களை கொல்லல், வீடுகளுக்கு நெருப்பிடல் முதலியவற்றைச் செய்யக்கூடாது. என்று நபி பெருமானார் கூறியுள்ளார்.
போரில் தோல்வியடைந்தோரிடமும் போர்க் கைதிகளிடமும் நபிகள் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார். அக்கால அரேபியர் போர்க் கைதிகளைக் கொன்று விடுவார்கள். ஆனால் நபிகள் காலத்தில் போர்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைவர் என்பவர் தமது சாதாரண சிப்பாய்களுடைய இன்ப, துன்பங்களில் கலந்து கொள்ள வேண்டும். அகழ் போரின் போதும் அகழ் தோண்டும் போதும் நபி பெருமானார் ஒரு சாதாரண சிப்பாய் போல மண் தோண்டினார். மண் சுமந்தார். எப்போதும் போர்க்களத்தில் முன்னேறிச் செல்வார் நபிகள் நாயகம். ஹஸ்ரத் அலி போன்ற பெரு வீரர்கள் பின்னால் நிற்பார்கள்.
அரேபியாவின் அரசராக அவர் இருந்தபொழுது எளிய வாழ்க்கை நடத்தி வந்தார். எல்லா வேலைகளையும் தமது கையாலேயே செய்வது வழக்கம். தாம் செய்யக்கூடிய வேலையைப் பிறர் செய்யும்படி அனுமதிப்பதே கிடையாது.
ஒரு நாள் ஒரு யூதர் விருந்தாளியாக வந்திருந்தார். நபிகள் பெருமான் அவருக்கு வயிறு நிறைய ஆகாரம் கொடுத்ததோடு அல்லாமல் அவர் தங்கி களைப்பாறும் பொட்டு தமது அறையையும் படுக்கை விரிப்பையும் கொடுத்து உதவினார்.
ஆனால் அந்த யூதன் அந்த இரவில் அந்த அறையில் மலம் கழித்து அசுத்தப்படுத்திவிட்டு அங்கிருந்து அதிகாலை ஓடிப்போனான். ஆனால் அவன் மறதியாக தனது வாளை அறையில் வைத்து விட்டான். எனவே அதை எடுப்பதற்காக மறுபடியும் வந்தான்.
அங்கே அவன் மலம் கழித்த அறையை, நபி பெருமானார் சுத்தம் செய்து கொண்டிருப்பதை கண்டு, தம் தவறுக்கு வருந்தினான். நபிகளிடம் மன்னிப்புக் கோரினான். நபி பெருமானார் அவனை மன்னித்து அனுப்பினார்.