தமிழகத்தின் பெண் எழுத்தாளர், முதல் துப்பறியும் நாவல் எழுதிய பெண் எழுத்தாளர். பத்திரிகையாளர், விடுதலைப்போராட்ட வீரர் என சமூகத்தின் முக்கியமான பெண்ணியவாதி ஆண்டாள் என குடும்பத்தாரால் அழைக்கப்பட்ட கோதை.
தமிழகத்தில் செங்கல்பட்டை அடுத்த நீர்வளுர் என்கிற கிராமத்தில் 1901 டிசம்பர் 1ந்தேதி வெங்கடாச்சாரி – பட்டம்மாள் தம்பதியரின் மகளாக பிறந்தார் ஆண்டாள் என்கிற கோதை. இவர் பிறந்த சில மாதங்களில் இவரது தாயார் இறந்ததால் இவரை நெருங்கிய உறவினர்கள் தான் வளர்த்தனர்.
இவரது சித்தப்பா ராகவாச்சாரி தமிழில் புலமை பெற்றிருந்தார். அவர் தேவாரம், நாலடியார், திருவாசகம், கம்பராமாயணம் உட்பட பழங்கால தமிழ் இலக்கியங்களை கற்றார்.
1907ல் சென்னையில் புகழ்பெற்ற சீனுவாசய்யங்காரின் மூன்றாவது மகனான பார்த்தசாரதிக்கு திருமணம் செய்து வைத்தனர். வைத்தமாநிதி முடும்பை குடும்பம் என்பது சீனுவாசய்யங்காரின் குடும்ப பெயர். அதை சுருக்கி தங்களது பெயருக்கு முன்னால் வை.மு என வைத்துக்கொள்வார்கள். அந்த வழக்கப்படி கோதையின் பெயருக்கு முன்னால் வை.மு என்பது ஒட்டிக்கொண்டது.
பள்ளிக்கே அனுப்பவில்லை கோதையை. அவரது கணவர் வீட்டிலே அவருக்கு தமிழ் கற்று தந்தார். அவரது மாமியார் தெலுங்கு கற்று தந்தார். இந்த கற்பித்தலே அவரை எழுத்துலகில் முடிசூடா ராணியாக வலம் வரவைத்தது.
இந்திரமோகனா என்கிற நாடகத்தை 1924ல் தனது நாடக நூலை வெளியிட்டார். பெண்கள் முன்னேற்றம் அதில் முக்கியத்துவம் பெற்றதால், அதுவும் ஒரு புது பெண் படைப்பாளி என்பதால் சுதேசமித்திரன், இந்து நாளிதழ்கள் அதற்கு முக்கியத்துவம் தந்தன. அந்த நாடக நூலை பலரும் வாங்கி நாடகமாக்கினார்கள்.
இரண்டாவதாக வைதேகி என்கிற தலைப்பில் ஒரு தொடர்கதை எழுதினார். அது மனோரஞ்ஜனி என்கிற இதழில் அதன் ஆசிரியர் வடுவூர் துரைசாமி வெளியிட்டார். அப்போது ஜகன்மோகினி என்கிற இதழ் வெளிவராமல் நின்றுப்போனது. அதனை வாங்கி நடத்துங்கள் எனச்சொல்ல அந்த இதழை வாங்கி 1925 ஆம் ஆண்டு முதல் நடத்த தொடங்கியது கோதை குடும்பம். அதோடு, வைதேகி தொடர் ஜகன்மோகினியில் வெளிவந்தது. இதில் துரைசாமிக்கும் – கோதை குடும்பத்தாருக்கும் இடையே மோதல் வந்து இருதரப்பும்மே தங்களது பத்திரிகைகளில் அந்த தொடர்கதையை வெளியிட்டனர்.
அக்கால காங்கிரஸ் தலைவர்களான ராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, காமராசர் போன்றவர்களுடன் காங்கிரஸ் மேடைகளில் ஏறி தன் கருத்துக்களை எடுத்துவைத்த விடுதலை போராட்ட வீரராக இருந்தார் கோதை. 1925ல் சீனுவாச அய்யங்கார் வீட்டிற்கு காந்தி வந்தபோது அவரை சந்தித்தார் கோதை. கர்நாடகா இசை கற்றுயிருந்த கோதை, காந்திக்காக சில பாடல்களை பாட மெய்மறந்து கேட்டு பாராட்டினார் காந்தி. 1931ல் காந்தி அறிவித்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்கிற போராட்டத்தில் வெளிநாட்டு துணிகளை எரிக்க கைது செய்யப்பட்ட கோதை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரின்போது கோதையின் குடும்பம், பத்திரிகை அலுவலகம் அனைத்தும் செங்கல்பட்டுக்கு இடம் பெயர்ந்து, வாழ்ந்தது. இனி சென்னை தாக்கப்படாது என்கிற பயம் போன பின்பே மீண்டும் சென்னைக்கு வந்தார்கள். சுதந்திரத்துக்கு பின் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டதற்காக 10 ஏக்கர் நிலத்தினை காங்கிரஸ் அரசாங்கம் கோதைக்கு வழங்கியது. நிலமில்லாத ஏழை மக்களுக்கு பெரும் நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களை பெற்று ஏழைகளுக்கு வழங்கிய பூமிதான இயக்கத்துக்கு நன்கொடையாக அளித்தார் கோதை.
அருணோதசயம், வத்சகுமார், தயாநிதி போன்ற என 115 புதினங்களை எழுதி வெளியிட்டு சாதனை படைத்தார் கோதை. அதுவும் துப்பரியும் நாவல் எழுதிய முதல் தமிழ் பெண் எழுத்தாளர் கோதை என்பது குறிப்பிடதக்கது.
திரைப்பட தணிக்கை துறையின் உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது நாவல்கள் பல பின்னர் சித்தி, ராஜமோகன், தியாகக்கொடி போன்ற பெயர்களில் திரைப்படங்களாக வெளிவந்தன என்பது குறிப்பிடதக்கது
1956 கோதை – பார்த்தசாரதி தம்பதியின் ஒரே மகனாக சீனுவாசன் திடீரென இறந்துவிட்டார். இந்த இறப்பை தாங்க முடியாமல் நோய்வாய்ப்பட்டார் கோதை. ஏற்கனவே இருந்த காசநோய் முற்றி அதற்கான மருத்துவம் பார்த்தும் காப்பாற்ற முடியாமல் 1960 பிப்ரவரி 20ந்தேதி மறைந்தார்.