மேற்குவங்க வரலாற்றை மாற்றியமைத்து வரலாற்றில் இடம் பெற்றவர் வரலாற்றின் மீது காதல் கொண்ட மம்தா.
1955 ஜனவரி 5ந்தேதி மேற்குவங்கத்தில் கல்கத்தா மாநகரின் ஒரு பகுதியான அஸ்ரா பகுதியில் பிறந்தார். அப்பா புரமல்லேஸ்வர் – அம்மா காயத்ரிதேவி. மேற்குவங்கத்தில் பரவலாகவுள்ள பிராமின் குடும்பத்தை சேர்ந்தவர் மம்தா. பானர்ஜி என்பது சாதிப்பெயர். பசந்திதேவி கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு எல்லாமே வரலாற்று பிரிவுகளாகவே தேர்வு செய்து படித்தார். அதற்கு காரணம் இளம் வயதிலேயே அவருக்குள் இருந்த அரசியல் ஆசை. 15 வயதிலேயே மாணவர் காங்கிரஸ்சில் சேர்ந்திருந்தார். பின்னர் சந்திரசௌதுரி சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். வழக்கறிஞராக கொல்கத்தா நீதிமன்றத்தில் பதிவு செய்துக்கொண்டார். அவர் படிக்கும்போது, இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த மம்தா, இந்திராவின் அவசரநிலையை ஆதரித்தார். இதனால் அப்போது மேற்கு வங்க முதல்வராக இருந்த சித்தார்த் சங்கர் ரேயின் ஆசிர்வாதம் அவருக்கு இருந்தது. மம்தாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரும் பலமாக இருந்தவர் சித்தார்த் சங்கர் ரே தான்.
1976 முதல் 1980 வரை மேற்குவங்க காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி செயலாளராக இருந்தார். 1984ல் ஜாதவ்பூர் நாடாளமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேற்குவங்கம் மட்டும்மல்ல இந்தியா முழுமைக்கும் பரிச்சயமான மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான சோம்நாத் சட்டர்ஜிக்கு எதிராக களத்தில் நின்றார். தேர்தலில் மம்தா வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ந்தது, ஒரு சின்னப்பெண்ணிடம் தோற்றுப்போனோமே என்று. அந்த சின்னப்பெண்தான் பெரும் வரலாற்றை இந்திய மண்ணில் உடைக்கப்போகிறார் என அன்று அதிகாரத்தில் இருந்த இடதுசாரிகளுக்கு தெரியவில்லை. அப்போது மம்தாவின் வயது 29 தான்.
1989ல் அதே பாராளமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் அவரை குறிவைத்து தேர்தல் வேலை செய்தனர் மார்க்சிஸ்ட்கள். அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த மம்தா, அடுத்த இரண்டு ஆண்களில் மீண்டும் வெற்றி பெற்றார். அதன்பின் வெற்றி, வெற்றிகள் தான். நம்மவூர் பக்கம் சொல்வதை போல "தொட்டதெல்லாம் துலங்கும் மகராசி" என்பது போல் தான்.
1991ல் மம்தாவுக்கு மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக பொறுப்பு தந்தனர். காங்கிரஸ் கட்சி தலைமையோடு மோதல் வந்தது மம்தாவுக்கு. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 1997ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்கிற தனிக்கட்சி தொடங்கினார். இனி மம்தா அவ்வளவு தான் என்றன ஊடகங்கள். எதற்கும் அசைந்துவிடவில்லை மம்தா. குறுகிய காலத்திலேயே மாநிலத்தில் பெரும் வளர்ச்சி பெற்றது அக்கட்சி. 1998, 1999, 2004, 2009, 2014 நாடாளமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக அவரும் வெற்றி பெற்றார், தன் கட்சியையும் மத்தியில் பதவிக்கு வரும் அளவுக்கு வெற்றி பெறவைத்தார். சட்டமன்ற தேர்தலில் மட்டும் கணிசமான எம்.எல்.ஏக்களை பெற்றது அவரது கட்சி. ஆட்சிக்கு வரும் அளவுக்கு வெற்றி பெற முடியாமலே இருந்தது.
1999ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தார் மத்திய மந்திரி சபையில் இரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தார் மம்தா. மக்கள் மனம் மாறியதும் அதற்கு தகுந்தார்போல் பாஜக கூட்டணியில் இருந்து விலகி 2004ல் காங்கிரஸ்சுடன் கூட்டணி வைத்தார், வெற்றி பெற்றார், மத்திய எரிசக்திதுறை அமைச்சரானார். 2009ல் மீண்டும் இரயில்வே துறை அமைச்சர் என டெல்லியில் வலம் வந்தவரின் கவனமெல்லாம் மேங்குவங்க முதல்வர் நாற்காலி மீதேயிருந்தது.
அது அத்தனை இலகுவாக பிடிக்க முடியாத பதவி என்பதை அறிந்தேயிருந்தார் மம்தா. அதற்கு காரணம், ஆட்சிக்கு வந்ததும் நில சீர்த்திருத்தம் என்கிற பெயரில் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு விவசாய நிலங்களை பகிர்ந்தளித்து அனைவரையும் விவசாயிகளாக்கியது கம்யூனிஸ்ட் அரசாங்கம். சுதந்திரத்துக்கு பின்பு காந்தியின் சீடர் வினோபாவின் பூமிதான இயக்கம் செயல்பட்டது, அது தோல்வியில் முடிந்தது, மேற்குவங்கத்தில் பெரும் தோல்வி. இதனை கையில் எடுத்த கம்யூனிஸ்ட்கள், ஆட்சிக்கு வந்தால் நில சீர்த்திருத்தம் என்றனர். ஆட்சிக்கு வந்ததும் அதை செய்தனர். நில உரிமை சீர்த்திருத்தம் மேற்குவங்கத்தில் பெரும் வெற்றி பெற்றது. சுமார் 6 லட்சம் விவசாய நிலங்களை நிலமற்ற விவசாய கூலி மக்களுக்கு பகிர்ந்தளித்தது.
இதனால் கம்யூனிஸ்ட்களுக்கு மேற்குவங்கத்தில் பெரும் ஆதரவு இருந்தது, அதனால் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மாநில ஆட்சியில் கோலோச்சிக்கொண்டு இருந்தனர். மேற்குவங்கத்தில் முதல்வராக 22 ஆண்டுகள் பதவி வகித்த ஜோதிபாசு, வயதாகிவிட்டதால் அந்த பதவியில் இருந்து விலகி வழிவிட்டார். அவரது ஆதரவாளர் புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுகளும் மாறின. எந்த விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என வாக்குறுதி தந்து இயக்கம் ஆரம்பித்து காங்கிரஸ்சிடம்மிருந்து மாநில ஆட்சியை கைப்பற்றினார்களோ, அதே விவசாயிகளுக்கு எதிராக தங்களது ஆட்சியில் நடவடிக்கைகள் எடுத்தார்கள்.
கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நந்திகிராம் என்கிற பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்கள் 40 கி.மீ தூரத்துக்கு கையகப்படுத்தியது புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் இயங்கிய இடதுசாரிகள் அரசாங்கம். இதனால் விவசாயிகளிடம் இடதுசாரிகள் மீது அதிருப்தி உண்டானது. இதனை மம்தா உணர்ந்தார். கடந்த காலத்தில் காங்கிரஸ்க்கு எதிராக இடதுசாரிகள் பயன்படுத்திய அதே அரசியல் தந்திரத்தை இந்தமுறை மம்தா பயன்படுத்தினார்.
விவசாயிகளின் தோழனாக அவதாரமெடுத்தார், போராடினார். கிராமங்களை குறிவைத்து விவசாயிகளின் மத்தியில் பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். அதை கண்டுகொள்ளவில்லை இடதுசாரிகள். எந்த விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என வாக்குறுதி தந்து இயக்கம் ஆரம்பித்து காங்கிரஸ்சிடம்மிருந்து மாநில ஆட்சியை கைப்பற்றிய இடதுசாரிகள் அதே விவசாயிகளுக்கு எதிராக திரும்ப கிளர்ச்சி உண்டானது.
அதேபோல் சிங்கூரில், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பறித்து டாடாவின் நானோ தொழிற்சாலைக்கு வழங்க முடிவுசெய்து நிலங்களை கையகப்படுத்தியது மேற்குவங்கத்தின் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசாங்கம். இதனை எதிர்த்து கலரவங்கள் உருவாகின. துப்பாக்கி சூட்டில் விவசாய மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர். தன்னெழுச்சியாக போராடிய விவசாயிகளை நக்சலைட்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள், மம்தாவுக்கு அவர்கள் துணை போகிறார்கள் என அலறியது புத்ததேவ் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம். நீங்கள் காங்கிரஸ்க்கு எதிராக போராடியபோது, உங்களுக்கு ஆதரவாக நக்சலைட்கள் இருந்தார்களா எனக்கேட்க வாயை மூடிக்கொண்டது.
மேற்குவங்கத்தில் 2011 சட்டசபை தேர்தல் வந்தது. அங்கு 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிவைத்து தேர்தலை சந்தித்தது திரிணாமுல் காங்கிரஸ். 227 தொகுதிகளில் மம்தா கட்சியும், 65 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் தொகுதிகளை பிரித்துக்கொண்டு ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. போட்டியின் இறுதியில் 227 இடங்களை திரிணாமுல் – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதில் மம்தா கட்சி மட்டும் 184 இடங்களை பிடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார்.
ஜாதவ்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரிகளின் முதல்வராக இருந்த புத்ததேவ் பட்டாச்சார்யா தோல்வியை சந்தித்தார். இந்த சட்டமன்றத்தை உள்ளடக்கிய இதே பெயரை கொண்ட நாடாளமன்ற தொகுதி வாக்காளர்கள்தான் 1984ல் மம்தாவுக்கு வெற்றியை தந்து நாடாளமன்றத்துக்கு அனுப்பிவைத்தார்கள். 1977 முதல் 2011 வரை என 34 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேற்குவங்கத்தை ஆண்ட இடதுசாரிகளின் கோட்டை உடைத்த வரலாற்றை படைத்து "பெங்கால் லேடி டைகர்" என புகழ்பெற்றார் மம்தா. சிறந்த ஓவியம் மற்றும் கவிதை எழுதும் திறன் கொண்ட மம்தா தன் அரசியல் மற்றும் போராட்ட வாழ்வு பற்றி மாற்றம் என்கிற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ்க்கும் – மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு கூட்டணி உடைந்தது. கூட்டணியில்லாமல் தனித்தே திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்கியது. இடதுசாரிகள் குதித்தார்கள், காங்கிரஸ் முயன்று பார்ப்போமே என நினைத்தது. மக்கள் தெளிவாக இருந்தனர். மம்தா கட்சியை 211 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து இரண்டாவது முறையாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளனர் மக்கள்.
மேற்குவங்கத்தில் தீதி என அழைக்கப்படும் மம்தா, விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் பக்குவமற்றவர் என்கிற குரல் பலமாகவே கேட்கின்றன. விவசாயிகளுக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி முதல்வரிடம் கேள்வி எழுப்பிய விவசாயியையும், முதல்வர் மம்தா பற்றி விமர்சன ஓவியம் ( கார்டூன் ) வெளியிட்ட பத்திரிக்கைக்கு நெருக்கடி, அதை சமூக வளைத்தளத்தில் பகிர்ந்துக்கொண்ட பேராசிரியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இதனைதான் இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். நீங்கள் யோக்கியம்மா என பதில் கேள்வி எழுப்புகிறது திரிணாமுல் காங்கிரஸ்.
தற்போது அவருக்கு கம்யூனிஸ்ட்கள் எதிராளியல்ல. எனது எதிரிகள் காவிகள்தான் என்கிறார். காங்கிரஸ் வரலாற்றை கம்யூனிஸ்ட்கள் உடைத்தார்கள், கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை உடைத்து பதவிக்கு வந்த மம்தாவின் வரலாற்றை உடைத்து பதவிக்கு வரத்துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இதை உணர்ந்தே தடுப்பாட்டம் ஆடுகிறார் மம்தா. பல மாநில முதலமைச்சர்கள் பாஜகவை கண்டும், மோடியை கண்டு நடுங்கும் நேரத்தில், மக்களை பாதிக்கும் கட்டாய ஆதார், பணமதிப்பிழப்பு, பெட்ரோல் விலையேற்றம், நீட் உட்பட அனைத்திற்கும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். இந்திய அளவில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை அமைக்க முயல்கிறார்.
அடுத்து வரும் நாடாளமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்து இறக்கி மோடியின் கனவை தகர்த்தால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பின்பு பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மம்தா இடம்பிடிப்பார். அதற்கு அவரின் எளிமையும், அவரின் போர்குணமும், தந்திரமும் கைக்கொடுக்கும்.