சிவப்பு மண்டலங்களில் ஒன்றான சென்னையில் ஜூலை 6ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெருமளவு தளர்வால், அனைத்து சாலைகளும் வாகன நெரிசலில் திணற ஆரம்பித்துவிட்டன. சென்னையில் கரோனா குறைந்துவிட்டது என்று அவிழ்த்துவிடப்படும் பொய்களை மக்கள் நம்பத் தொடங்கியதால், அவர்களும் சகஜமாக எந்தக் கவலையும் இல்லாமல் குடும்பம் குடும்பமாக நடமாடத் தொடங்கிவிட்டார்கள். கடை கண்ணிகளிலும் கூட்டம் மொய்க்கிறது. பார்க் பீச் என்றும் பலரும் போகத் தொடங்கிவிட்டார்கள். முகக்கவசமோ, சமூக இடைவெளியோ கூட பெரிதாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. காரணம் சென்னையில் கரோனா குறைந்துவிட்டது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது. ’மக்களின் வாழ்வாதாரம் கருதியே பெரும் தளர்வு ஏற்படுத்தபடுகிறது. எனினும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும்’ என்று முதல்வர் அறிவித்ததன் பின்னணியில், கரோனா பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதே நேரம் நீங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு அரசிடம் நிவாரண உதவிகளைக் கேட்காதீர்கள். ஊரடங்கைத் தளர்த்துகிறோம். நீங்கள் உங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொண்டு, உங்களைக் காப்பாற்றிக்கொளுங்கள் என்கிற கருத்துதான் தொக்கி நிற்கிறது.
ஆனால், மக்களோ முதல்வரின் அறிவிப்பில் இருந்து, கரோனா குறைகிறது என்ற ஆறுதலுக்காகச் சொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தங்கள் கட்டுக்களை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். கவனமாக இருக்கவேண்டும் என்று அவர் சொன்னதில் எவரும் கவனம் வைக்கவில்லை.
கரோனா குறைகிறது என்று முதல்வரே அறிவித்துவிட்டதால், அவரது வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது சுகாதாரத்துறை. அன்றாடத் தொற்றின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டாதபடி கணக்கைக் கவனமாக அது பராமரிக்கிறது. கரோனா கட்டுப்படவில்லை என்று நாம் கூடச் சொல்லவில்லை. அன்றாடம் வருகிற இறப்புக்கணக்கே அந்தப் பயங்கரத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது.
தவறான செய்திகளைப் பரப்பியும், தவறான நம்பிக்கையைப் பரப்பியும் ஊரடங்கைத் தளர்த்திகொண்டேஇருப்பது, நிலைமையை மோசமாக்கி வருகிறது. இவை, சென்னையை மறுபடியும் ஆபத்தான படுகுழியில் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
படிப்படியாக சென்னையில் கரோனா குறைவதாக மேலாண்மைத் திறனோடு கணக்கைக் காட்டினாலும், அதுவும் கூட நிலையான எண்ணிக்கையாக இல்லை. உதாரணமாக சென்னையில் 11-ஆம் தேதி 1,205 பேரும், 12-ஆம் தேதி 1,221 பேரும், 13-ஆம் தேதி 1,168 பேரும் தொற்றுப் பாதிப்புக்கு ஆளானதாக மேலாண்மைத் திறனோடு கணக்கைச் சொல்லிவந்த நிலையில், அவர்களின் புள்ளிவிபரமே, 14- ஆம் தேதி 1,291 பேரும், 15-ஆம் தேதி அது மேலும் அதிகமாகி 1,311 பேரும் பாதிக்கப்பட்டதாக ஏறு வரிசையில் காட்டப்படுகிறது.
எனவே, கரோனா குறைவதாகச் சொல்லும் அரசின் அறிவிப்பிலும் புள்ளிவிபரக் கணக்கிலும் மயங்காமல், கரோனாவின் தீவிர நிலையை உணர்ந்து, பொதுமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நம்மைப் பாதுகாக்க யாருமில்லை என்பதைப் புரிந்துகொண்டு உயிரைப் பாதுகாத்துக்கொள்வதில் அதி தீவிர கவனம் செலுத்தவேண்டும். கரோனா தடுப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவானதாகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் கரோனா பரவலின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. இறப்பும் 2,200-ஐ நெருங்கிவிட்டது. அவர்களுக்கு நோய்த் தொற்று என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி. நமக்கோ, அது உயிர்ப்போராட்டம்.