Skip to main content

கரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்... தயார் நிலையில் ரயில்வே துறை...!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

கொலைகார கரோனாவின் சங்கிலித் தொடரை துண்டிக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவதை போல், சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் போன்ற நாடுகள் நோய் பாதித்தோர் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.

 

 Railways set to become Corona treatment wards ...


இந்த நிமிடம் கூட இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் தான் இருக்கின்றன. இந்த நிலை நீடித்தால், அடுத்த 10 நாளில் இந்தியாவில் அனைத்து மருத்துவ மனைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பிவிடும் என்ற எச்சரிக்கைகள் பகீரூட்டுகின்றன. இதை உண்மை என்றும் ஒத்துக்கொள்ளும் வகையில், ரயில் பெட்டிகளை எல்லாம் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகிறது ரயில்வே துறை. நோயாளிகள் வார்டு, மருத்துவர்கள் வார்டு, கழிவறை என 3 பிரிவுகளாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

நோயாளிகள் பிரிவில் மத்தியில் இருக்கும் படுக்கையும், எதிரே இருக்கும் 3 படுக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல், மேல் படுக்கைக்கு ஏறிச் செல்லும் ஏணிகளும் அப்புறப் படுத்தபட்டுள்ளன. அந்த பிரிவில் 230 வோல்ட் மின்சார வசதி கொண்ட பிளக் பாய்ன்ட் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுக்கும் பிரிவில், மத்தியில் இருக்கும் படுக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது பாதுகாப்பு உடைகளை தொங்க விடுவதற்கு கொக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. பொருட்கள், மருந்துகள் வைப்பதற்காக அலமாரி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மடக்கும் வகையிலான டேபிள் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

நோயாளிகள் பிரிவையும், மருத்துவர்கள் பிரிவையும் பிரிக்கும் வகையில், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி பிளாஸ்டிக் திரைச்சீலைகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. கழிவறையில் வாஸ்பேசின் வசதியோடு, தண்ணீர் பைப்பின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கு வசதியாக கைப்பிடியுடன் கூடிய ஷவர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.