மோடியா, லேடியா என்று கேட்ட ஜெ. வழியில் நடப்போம்: சி.ஆர்.சரஸ்வதி

மோடியா, லேடியா என்று கேட்ட ஜெயலலிதா வழியில் நடப்போம் என கூறியுள்ளார் சி.ஆர்.சரஸ்வதி.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து நம்மிடம் பேசிய டிடிவி தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி:-
ஆர்.கே.நகரில் ஆளும் கட்சி எட்டிக்கூட பார்க்கவில்லை. ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் கட்சியினர் நிறைவேற்றவில்லை. ரேசனில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கையை வைக்கமாட்டார்கள். ஆனால் இன்று உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சர்க்கரை விலை ஏற்றப்பட்டுள்ளது. அடிதட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவுக்கு ஆதரவாக இந்த அரசு நடக்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. தற்போது உள்ள ஆளுநரின் செயல்பாடுகளும் பாஜக அரசுதான் நடக்கிறது என்று மக்களும் புரிந்து கொண்டனர்.
122 பேர் ஆதரவு என கடிதம் கொடுத்தபோது இரட்டை இலையை கொடுக்காமல், 111 பேருக்கு உடனே கொடுத்தார்கள். அதேபோல் சசிகலா முதல் அமைச்சராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கையெழுத்துப்போட்டு கொடுத்தபோது 25 நாள் காக்க வைத்தார்கள். பின்னர் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். ஆகியோரை இணைக்க வைத்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். 6 மாதத்தில் டிடிவி தினகரன் மீது எத்தனை வழக்குகள். ஆட்சியில் அமர வைத்த சசிகலாவையும், தினகரனையும் விலக்கினார்கள். இதனையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் ஆர்.கே.நகர் மக்கள் தினகரனை தேர்வு செய்துள்ளனர்.
தற்போது நீங்கள் எடுத்துள்ள பாஜக எதிர்ப்பு நிலை தொடருமா?
கண்டிப்பாக. மோடியா, லேடியா என்று கேட்ட ஜெயலலிதா வழியில் நடப்போம்.
மூன்று மாதத்தில் ஆட்சி கலையும் என்கிறாரே தினகரன்?
இது மக்களுடைய விருப்பம். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் தேர்வு செய்துள்ளனர்.
தினகரன் வெற்றி பெற்றது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவுக்கு எதிரான ஓட்டுகள் என்று சொல்ல முடியாது. கடந்த தேர்தலில் தினகரனுக்கும் நாங்கள் ஓட்டு கேட்டோம். உங்களுக்குள் சண்டை வேண்டாம். ஒற்றுமையாக இருங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள் என்கிறாரே..? அந்த அணியில் இருந்து வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
கடந்த ஏப்ரல் மாத தேர்தலிலும், இந்த தேர்தலிலும் யார் இந்த தினகரன், சசிகலா என்று கேட்டவர்கள் அவர்கள். இப்போது இப்படி பேசுகிறார்கள். அந்த அணியில் இருந்து வருபவர்களை இணைப்பது குறித்து பொதுச்செயலாளரும், துணைப்பொதுச்செயலாளரும் முடிவு எடுப்பார்கள்.
-வே.ராஜவேல்