எது பலமோ… சமயங்களில் அதுவே பலவீனமாகவும் அமைந்துவிடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல… ஜனநாயகத்துக்கும் இது பொருந்தும். வாக்கே ஜனநாயகத்தின் பலம்! ஆனால் மக்கள் அந்த வாக்கின் பலமறியாமல் அதை விலைபேசுவதுதான் ஜனநாயகத்தின் பலவீனம்!
வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் வாக்கை எப்படி பயன்படுத்த இருக்கிறார்கள் என்பதையறிய திண்டுக்கல் மாவட்டத்தின் பலதரப்பட்ட மக்களின் நாடிபிடித்துப் பார்த்தோம்.
பாலன்: (பெட்டிக்கடை, மேட்டுப்பட்டி)
ஊராட்சி அலுவலகத்திற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் போனால் எந்த ஒரு கையெழுத்துக்கும் நூறு ரூபாய் முதல் இருநூறு ரூபாய் வரை அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டுதான் கையெழுத்து போடுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தலில் அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதை எப்படிங்க வாங்காமல் இருக்கமுடியும்? அவங்க ஒண்ணும் உழைத்த பணத்தை கொடுக்கலையே. நாங்க ரெடியாத்தான் இருக்கிறோம்.
லட்சுமி: (குடும்பத் தலைவி, திண்டுக்கல்)
கவுன்சிலர் தேர்தலுக்கே அரசியல்வாதிகள் நூறு, இருநூறு கொடுப்பாங்க. எம்.பி. தேர்தலுக்கு ஐநூறு, ஆயிரம் கொடுப்பாங்கனு எதிர்பார்ப்பில் இருக்கிறோம். வீடுதேடி வந்து கொடுக்கிற பணத்தை எப்படிங்க வாங்காமல் இருக்கமுடியும்.
பாஸ்கரன்: (ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கொடைக்கானல்)
அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேலைநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே ஏற்றுக்கொள்ளும். வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்பதோடு நிறுத்திக்கொள்வர். அதுபோல் இங்கேயும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை ஆணையமே ஏற்று நடத்தினால்தான் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
ஜெயபாலன்: (கல்லூரி மாணவர், குழந்தைப்பட்டி)
அரசியல்வாதிகளிடம் பணம் வாங்காமல் இருந்தால்தான் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடமுடியும். பணம் வாங்கினால் அவர்களுக்கு நாம் அடிமையாகி விடுவோம். அதனால ஓட்டை விற்கக்கூடாது.
சின்னம்மாள்: (இல்லத்தரசி, என்.ஜி.ஓ. காலனி)
பொங்கலுக்கு ரேசன் கடையில் ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அதில் ஒருகிலோ கறி ஐநூறு ரூபாய்க்கு வாங்கிட்டு, மீதி உள்ள பணத்தை பைனான்ஸ் கட்டினேன். அதுபோல் தேர்தலுக்கு பணம் கொடுப்பாங்கனு எதிர்பார்த்துட்டிருக்கேன். கொடுக்கிற பணத்தை ஏன் வேண்டாம்னு சொல்லணும்.
சையது அலி: (வடை மாஸ்டர், நாகல் நகர்)
அரசியல்வாதிகளால் மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடையாது. சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்காமல் இருக்கமாட்டோம்.
பாண்டியம்மாள்: (கூலித்தொழிலாளி, கோட்டைப்பட்டி)
தேர்தல் அன்னைக்கு கூலி வேலைக்கு போனமாதிரி அரசியல்வாதிகள் கொடுக்கிற பணத்தை வாங்கிக்கொள்கிறோம். மற்றபடி யாருக்கு ஓட்டு போடவேண்டுமென தோன்றுகிறதோ அந்த சின்னத்திற்குத்தான் போடுவேன். அதுலயும் எம்.பி. தேர்தலோடு இடைத்தேர்தலும் எங்கள் பகுதியில் வரவிருப்பதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் மாதிரி பணம் கிடைக்கப்போகிறது.
பழனிச்சாமி: (செருப்புத் தைக்கும் தொழிலாளி, ஜம்புளியம்பட்டி)
பதினாறு தடவை ஓட்டு போட்டிருக்கிறேன். இதுவரை ஓட்டுக்கு பணம் வாங்கினதில்லை. தேர்தல் சமயத்தில் வீட்டுக்குவந்து பணம் கொடுத்தாலும், வேண்டாம்னு சொல்லிடுவேன். பணம் வாங்கிட்டா உதவியென போனால் எதுவும் செய்யமாட்டார்கள். ஓட்டு போடப் போகிறபோது நம்மை கண் பார்வையிலேயே மிரட்டி ஓட்டு போட சொல்வாங்க. அப்படி தன்மானத்தை விட்டு அந்த பணம் வாங்க மனசாட்சி ஒருபோதும் இடம்கொடுப்பதில்லை..
திவ்யபாரதி: (பட்டதாரி, தாடிக்கொம்பு)
ஓட்டை விற்கக்கூடாது. பணம் வாங்கும் மக்கள்மீது நடவடிக்கை பாயும் என்கிறது தேர்தல் கமிஷன். ஆனால் கொடுக்கும் அரசியல்வாதிகள் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. பணம் கொடுத்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டி போடமுடியாத அளவுக்கு சட்டதிருத்தம் கொண்டுவந்தால்தான் அரசியல்வாதிகள் பணம் கொடுக்கமாட்டார்கள்.
வீரன்: (விவசாயி, கோவிலூர்)
எங்க அப்பா காலத்தில் ஓட்டுக்கு பணமெல்லாம் கிடையாது. கடந்த இருபது வருடங்களாகத்தான் மக்களுக்கு இலவசம் கொடுத்து பிச்சைக்காரர்களாக ஆக்கி ஓட்டுக்கு பணம் கொடுத்துவருகிறார்கள். பணம் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலைக்கு மக்கள் மனதை மாற்றிவிட்டனர் அரசியல்வாதிகள்.
சந்திரன்: (கரி வியாபாரி, சென்னமநாயக்கன்பட்டி)
வரக்கூடிய தேர்தலுக்குத்தான் ஆளுங்கட்சி பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது. இப்ப ஏழைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன் என முதல்வர் அறிவித்திருக்கிறார். ஆளுங்கட்சியினரிடம் அதிகாரம் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் கமிசன் கண்டுகொள்ளப் போவதில்லை. அதனால் இப்பவே ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் என ஆளுங்கட்சி லிஸ்ட் எடுத்துவருகிறது. என்னைப்போல் சிலர்தான் ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்று நினைக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல- தமிழகம் முழுவதுமே பெரும்பாலான வாக்காளர்கள் எந்த கட்சி வேட்பாளர் எவ்வளவு பணம் கொடுப்பார் என்ற மனநிலையிலேயே இருந்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை! வாக்கின் அசல் வலிமை என்று அவர்களுக்குத் தெரியப்போகிறதோ?!
Published on 07/03/2019 | Edited on 07/03/2019