காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தாயை மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ஹயத் நகரில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவருடைய மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிக்கு கீர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் விசாகபட்டணத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். லாரி டிரைவரான சீனிவாஸ் வேலைக்கு சென்று விட்டு நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் கீர்த்தியிடம் ரஞ்சிதா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி நான் கல்லூரிக்கு சென்று விட்டேன். அதனால் எனக்கு தெரியவில்லை என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்பு சீனிவாஸும், கீர்த்தியும் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ரஞ்சிதாவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

இது பற்றி போலீஸார் முதலில் கீர்த்தியிடம் விசாரித்துள்ளனர். அப்போது எனது அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எனது அம்மாவை அடித்து துன்புறுத்துவார். அதனால் அவர் கொலை செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன் பின்பு சீனிவாஸிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் நான் நான்கு நாட்கள் வேலைக்கு சென்றுவிட்டேன், வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார். அதன் பின்பு ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தின் அருகில் அழுகிய நிலையில் ஓர் பெண் சடலம் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த உடலை கைப்பற்றிய போலீஸாருக்கு அது ரஞ்சிதாவின் உடல் என்று உறுதியானது. இதற்கு பிறகு கீர்த்தி மீது போலீஸாருக்கு அதிக சந்தேகம் வந்துள்ளது.

பின்பு கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் கீர்த்தி தனது வீட்டருகே சசி எனும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். தினமும் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். இதை கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கீர்த்தி தனது காதலன் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு ரொம்ப லேட்டாக வந்துள்ளார். இதனால் கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா இனிமேல் இப்படி வந்தால் உனது அப்பாவிடம் கூறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு தான் தனது அம்மாவை கொலை செய்ய கீர்த்தி திட்டம் தீட்டியுள்ளார் அதற்கு காதலனும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், ரஞ்சிதா இரவில் தூங்கும் போது தனது காதலன் சசியை வீட்டிற்கு வரவழைத்து ரஞ்சிதாவின் கை, கால்களை இறுக்க பிடிக்க சசியிடம் கூறியுள்ளார். அதன் பின்பு தனது தாயின் கழுத்தை நெரித்து கீர்த்தி கொன்றுள்ளார். கொலை செய்து விட்டு ரஞ்சிதாவின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார் கீர்த்தி. பிறகு உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து ரஞ்சிதாவின் உடலை காதலனோடு சேர்ந்து ரயில் தண்டாவாளத்தில் போட்டு விட்டு வந்துள்ளார். காதலுக்காக பெற்ற மகளே தனது தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.