படகோட்டிய மோடி!
குஜராத்தில் தேர்தல் வருகிறது, தேதியை அறிவிக்காமல், 'எதற்காகவோ' தள்ளித் தள்ளிப் போட்ட தேர்தல் ஆணையம், இறுதியாக டிசம்பர் 9, 14 தேதிகளில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவித்துள்ளது. அதற்குள், என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்து விட்டது பா.ஜ.க. மூன்று முறை தொடர்ந்து வென்று, உருவாக்கியுள்ள 'குஜராத் மாடல்' பிம்பம் உடைந்தால், அது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதைத் தவிர்க்க, சர்தார் சரோவர் அணை, புல்லட் ரயில், என பிரம்மாண்ட திட்டங்களின் வரிசையில் நாட்டிலேயே முதல் முறையாக ஃபெர்ரி போட் எனப்படும் படகுச் சேவையை துவக்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி. நோக்கமெல்லாம் இருக்கட்டும். இந்த பயணப் படகு சேவையில் என்ன ஸ்பெஷல்?

ஃபெர்ரி (Ferry) மனிதர்கள் பயணிக்கப் பயன்படும் படகைக் குறிக்கும் சொல் . 'ரோ ரோ' என்பது ரோல்-ஆன்(Roll on) ரோல்-ஆஃப் (Roll off) என்பதன் சுருக்கம். கார் போன்ற வாகனங்களை வெளியிலும், படகின் மேலும் செலுத்த முடியும். வாகனங்களைக் கொண்டு செல்ல முடியும்.
1) இத்திட்டம் தெற்கு ஆசியா கண்டத்தின் முதல் உலகத் தரம் வாய்ந்த 'ரோ ரோ ஃபெர்ரி' சேவை ஆகும்.
2) இச்சேவை தென் குஜராத்தில் உள்ள 'தாஹிஜ்' எனும் ஊரில் இருந்து சவுராஷ்டிராவில் உள்ள 'கோஹா' வரை கடல் வழியே செயல்படுகிறது. இதனால் அவ்வூர் மக்களின் பயணநேரம், எரிபொருள் மிச்சமாகும்.
3) 8 மணி நேரம் செல்ல வேண்டிய இடத்திற்கு இந்தப் படகின் மூலம் 1 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். அதாவது சாலை வழியாக சென்றால் 350 கி.மீ தொலைவு செல்லும் இந்த பயணம் கடல் வழியாக சென்றால் 31 கி.மீ ஆக குறைக்கப்படும்.
.jpg)
4) இத்திட்டத்தை உருவாக்கி அதன் கட்டமைப்பை செய்தது 'எஸ்ஸார் குரூப்' எனும் நிறுவனம் ஆகும்.
5) இந்த படகு சேவையின் மொத்த செலவு ரூ 613 கோடி ஆகும்.
6) சாலை மற்றும் ரயில் வழி போக்குவரத்தை விட இந்த கடல் வழி போக்குவரத்து மிகவும் மலிவானதாக இருக்குமாம்.
7) இந்த திட்டம் 1960 ல் யோசனையாக ஆரம்பித்து, பிறகு 2012 ஜனவரியில் அப்போதைய முதல்வர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் பிரமதராகி அவராலயே இச்சேவை தொடங்கப்படுகிறது.

8) இப்படகில் 500 பயணிகள் அல்லது 100 வாகனங்கள் (கார்,லாரி,இரண்டு சக்கரவாகனம்) செல்ல முடியும். ஆனால் தற்போது பயணிகள் சேவை மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.
9) காம்பட் வளைகுடாவில் இச்சேவை கொண்டு வந்தது போல் கட்ச் வளைகுடாவிலும் இது போன்று கொண்டு வர திட்டம் இருக்கிறதாம்.
10) இதே போன்று மும்பையையும் தென் மாநிலங்களையும் கடல் வழியாக இணைப்பதே எங்களின் கனவு திட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பாஜக கப்பல் கவிழ்வதைத் தவிர்க்க இந்தப் படகு உதவுமா என்று பார்ப்போம்...
சந்தோஷ்