சாத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ராஜபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள கோபாலபுரம், மேலராஜகுலராமன், வடகரை, தென்கரை உள்ளிட்ட கிராமங்களில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வாக்காளர்களை எச்சரிக்கும் தொனியில் பிரச்சாரம் செய்தார்.
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் அந்த ‘வாய்ஸ்’ இதோ- “நீங்க எங்களுக்கு ஓட்டு போடலைன்னா உங்களுக்கு யாரு என்ன செய்வா? சமுதாய கட்சி சொல்லிட்டு போவாங்க. ஜாதி கட்சி சொல்லிட்டு போவாங்க. இளைஞர்களுக்கு இதைத் தெரியப்படுத்தணும். இந்த உள்ளாட்சி தேர்தல்ல இந்த ஊரு ஒட்டுமொத்தமா ஒரு முடிவெடுத்து, ஜாதிக்கட்சிக்கு ஓட்டு போட்டோம்.. நீங்க சொன்னவங்களுக்கு ஓட்டு போட்டோம். ஊரை ஏதாச்சும் டெவலப் பண்ணிருக்கீங்களா? இல்ல, ஊருக்கு போராடி எதையாச்சும் வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? சொல்லுங்க, அவங்ககிட்ட இதைக் கேளுங்க. ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வந்தால் தான் செய்ய முடியும் இந்தத் தெருவுக்கு.
இந்தத் தெருவெல்லாம் பார்த்தால் ரொம்ப கேவலமாக இருக்கு. 95 பெர்சன்ட் ஓட்டு அதிமுகவுக்கு போடுங்க. நான் செஞ்சு கொடுப்பேன். அப்படி பண்ணாம இந்த ஊருக்குள்ளயே வண்டியை கொண்டுவர மாட்டேன். இப்பவே எழுதி வச்சிக்கங்க. ஆனா.. ஓட்டு போடலைன்னா ஒண்ணும் பண்ண மாட்டேன். நீங்க என்னமும் செஞ்சிட்டு போங்க என்னை. அதுக்கு மேல பொய்யெல்லாம் சொல்லிட்டு போக முடியாது. உங்க கால்ல விழுந்து கும்பிடறேன். ஓட்டு போட்டா உங்களுக்கு செருப்பா இருப்பேன். ஓட்டு போடலைன்னா.. உங்க பக்கத்துலயே வரமாட்டேன். இதுதான் மேட்டர். உண்மையான மேட்டர். நீங்க ஓட்டு போடுங்க. செய்யலைன்னா.. என் சட்டைய பிடிங்க. நான் மற்ற சட்டமன்ற உறுப்பினர் மாதிரி கிடையாது. உங்களுக்கு அனைத்து நிதிகளையும்.. எங்கேயாச்சும்.. எப்படியாச்சும். அதிகாரிகள் காலைக் கைய பிடிச்சு உங்களுக்கு நான் செஞ்சு கொடுத்திருவேன்.” என்றார்.
சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் ஜாதிக்கட்சி என்று தனது பிரச்சாரத்தில் குறிப்பிடுவது டிடிவி தினகரனின் அமமுக-வையாம். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அரசியல் கண்டுபிடிப்பு அல்லவா? அவரை மாதிரியே பேசுகிறார்.