2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிமுகப்படுத்துவதற்காக, அவரைச் சுற்றிலும் கட்டி எழுப்பப்பட்ட மாயப் பிம்பங்களை கணக்கிடவே முடியாது.
அவருடைய தோற்றத்திலிருந்து, குஜராத் முதல்வராக அவருடைய செயல்பாடுகள் வரை பார்த்துப்பார்த்து அந்த பிம்பங்களை உருவாக்கினார்கள். இந்திய தேர்தல்களில் முதல்முறையாக சமூகவலைத்தளங்களில் மோடியைப் பற்றிய பொய்ப் பிம்பங்களை உண்மையைப் போல பரப்பினார்கள். இத்தகைய பிரச்சாரத்துக்கு தயாராகாத காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அந்தப் பொய்களை அம்பலப்படுத்த தவறிவிட்டன.
உலகின் மிகச்சிறந்த கட்டுமானங்கள் அனைத்தையும் குஜராத்தில் முதல்வர் மோடி உருவாக்கியதாக இணையத்தில் உலவவிட்டனர். அதைப்பார்த்து மயங்க புதிய வாக்காளர்கள் இருந்தனர். அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பலமான அணியை அமைப்பதில் தவறிவிட்டன. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குரிய சீட்டுகளில் பிடிவாதம் பிடித்து, பாஜகவுக்கு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டன.
69 சதவீத எதிர்க்கட்சிகள் வாக்கு சிதறியதால், வெறும் 31 சதவீத வாக்குகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தனக்கு பிரதமராக வாய்ப்பை உருவாக்கிய கார்பரேட்டுகளின் நலனுக்காக நாடு நாடாக பறந்துபறந்து உழைத்தார் மோடி.
இந்திய மக்களின் வரிப்பணத்தை 4 ஆயிரம் கோடிக்குமேல் செலவழித்து உலகம் சுற்றிய மோடி, அந்தப் பயணங்களால் இந்தியாவுக்காக ஈட்டிய லாபம் ஒன்றுமில்லை. அப்படி ஒன்றை ஈட்டியதாக இன்றுவரை அவரும் சரி, அவருடைய அரசும் சரி சொல்லவே இல்லை.
அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதானிக்கும், அனில் அம்பானிக்கும், அமித் ஷாவுக்கும், நீரவ் மோடிக்கும் கிஃப்ட்டுகளை வாரிக்கொடுத்தார்.
அனில் அம்பானிக்கு மட்டும் மோடி அள்ளிக் கொடுத்த கிஃப்ட்டுகளைப் பட்டியல் போடலாம்…
2015 ஜூன் மாதம் வங்கதேசத்துடன் மின் திட்டத்திற்காக ரூ.6,500 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில், பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துடன் ரூ.30 ஆயிரம் கோடிக்கு ரஃபேல் விமான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம்.
2018 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.3,647 கோடியில் தமிழ்நாடு அனல் மின்திட்ட ஒப்பந்தம்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.1081 கோடியில் கூடங்குளம் அணு மின் திட்ட ஒப்பந்தம்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ.1584 கோடியில் மும்பை பெருநகர மெட்ரோ லைன்-4 திட்ட ஒப்பந்தம்.
2018 மே மாதம் ரூ.6994 கோடியில் வெர்ஸோவா-பந்த்ரா கடல்வழி தொடர்புப் பாலம் ஒப்பந்தம்.
2018 ஜூலையில் ரூ.15 ஆயிரம் கோடியில் போர்க்கப்பல்களை சீரமைக்க அமெரிக்க கடற்படையுடன் ஒப்பந்தம்.
2018 ஜூலையில் ரூ.21,002 கோடியில் இந்திய கடற்படைக்காக ரஷ்யாவுடன் போர்க்கப்பல் ஒப்பந்தம்.
2018 ஆகஸ்ட் மாதம் ரூ.1907 கோடியில் நாக்பூர் டூ மும்பை இ-வே பேக்கேஜ்-7 ஒப்பந்தம்.
2019 மார்ச் மாதம் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலைய ஒப்பந்தம்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மோடியின் ஆட்சி முடியப்போகிறது என்று அறிந்த பிறகு, 2018 ஆம் ஆண்டில்தான் அனில் அம்பானிக்கு ஏகப்பட்ட அன்பளிப்புகளை வாரி வழங்கியிருக்கிறார் மோடி.