நீதிமன்றங்களின் தொடர்ச்சியான கேள்விகளாலும் கண்டனங்களாலும் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் மாதத்திற்குள் நடத்த தயாராகிறது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலுடன் நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களையும் சேர்த்து நடத்தலாமா என்பது பற்றி மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளும், தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து அரசின் யோசனையையும் கேட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் உள்பட பேரூராட்சி, நகர மற்றும் கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இவற்றிற்கான வார்டு வரையறையுடன் தாழ்த்தப்பட்டவர்கள் பொது, தாழ்த்தப்பட்டவர்கள் பெண்கள், பழங்குடியினர் பொது, பழங்குடியினர் பெண்கள், பெண்கள், பொது என 6 வகையாக இடஒதுக்கீட்டின்படி வார்டு பதவிகள் பிரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பொது எனவும், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி தாழ்த்தப்பட்டவருக்கு எனவும் வகைப்படுத்தப்பட்டு அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். தூத்துக்குடியை பொது மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர் நாடார் சமுதாய அமைப்பினர்.
நம்மிடம் பேசிய தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், பொதுப்பிரிவில் இருந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியையும், தூத்துக்குடி ஒன்றிய தலைவர் பதவியும் தலித் சமுகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தலித் சமூகத்தினர் 10 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். சென்னை, சேலம், தஞ்சை மாநகராட்சிகளில் தலித்துகள் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒன்றை தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யாமல் தூத்துக்குடியை ஒதுக்கியது அநீதியானது''‘என போர்க்கொடி உயர்த்துகிறார். இந்த நிலையில்தான், உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலினை களமிறக்க தி.மு.க. தலைமை முடிவு செய்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு தகவல் கிடைக்கவே, கடந்த வாரம் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை தனது வீட்டில் நடத்தினார். அமைச்சருக்கு நெருக்கமான அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு பல யோசனைகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை நாங்குநேரி அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் களமிறக்குவது பற்றிய யோசனை கட்சி மேலிடத்திடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவை இரண்டும் சாதி வாக்குகளின் அடிப்படையில் வெற்றியை நிர்ணயிக்கும் தொகுதிகள் என்பதால், சென்னை மேயர் பதவிக்கு நிறுத்தலாமா என ஆரம்பகட்ட ஆலோசனை நடந்துள்ளது. இவையெல்லாம் அமைச்சர் வேலுமணி வீட்டு ஆலோசனையில் எதிரொலிக்க, "உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை தருவதில்தான் உங்களின் வியூகம் இருக்கிறது. சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. வசம் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது' என யோசனை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தூத்துக்குடியை தலித்களுக்கு ஒதுக்கியதில் நாடார் சமூகம் அதிருப்தியில் இருப்பதால் அந்த மாநகராட்சியை பொது பிரிவுக்கும், பொதுப் பிரிவிலுள்ள சென்னை மாநகராட்சியை தலித் பிரிவுக்கும் மாற்றினால் போதும். உதயநிதி போட்டியிடுவதை தடுத்து ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சியை கொடுப்பதோடு நாடார் சமூகத்தின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு அதிகரிக்கும் என சொல்லப்பட, இதனை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் வேலுமணி. வெளிநாடு செல்வதற்கு முன்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டவிருக்கும் எடப்பாடி, அதில் இப்பிரச்சனையை விவாதிப்பார்'' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.