Skip to main content

பணக்கார நிர்வாகிகளால் புலம்பும் மக்கள் நீதி மய்யம்! கமலின் தேர்தல் திட்டம்! 

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

"தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும் சுயநலம்மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்தும் நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரிகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கள் நீதி மய்யம் கட்சி. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, கட்சிக்கு ஆறு பொதுச்செயலாளர்களை அறிவித்தபோது, ம.நீ.ம.வின் தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையின் ஆரம்ப வரிகள்தான் மேலே உள்ளவை.

 

mnm



பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு -ஆ.அருணாசலம், பொதுச்செயலாளர், அமைப்பு (வடக்கு, கிழக்கு) -ஏ.ஜி.மௌரியா ஐ.பி.எஸ். (ஓய்வு), பொதுச்செயலாளர், கொள்கை பரப்பு -ஆர்.ரங்கராஜன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), பொதுச்செய லாளர், சார்பு அணிகள் -வி.உமாதேவி, பொதுச் செயலாளர், தலைவர் அலுவலகம் -பஷீர்அகமது ஐ.ஏ.எஸ். (ஓய்வு), பொதுச்செயலாளர், அமைப்பு (தெற்கு, மேற்கு) தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில். இதுதான் கமல் அறிவித்த புதிய பொறுப்புகள்.

கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் மகேந்திரன் அதே பொறுப்பில் தொடர்வார், பொருளாளராக ஏ.சந்திரசேகர் நியமிக்கப்படுகிறார். தமிழகத்தை 8 மண்டலங்களாகப் பிரித்து 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதையும் அறிவித்துள்ளார் கமல். கமலின் இந்த அறிவிப்பிற்குப் பின்னால் மெகா திட்டம் ஒன்று உள்ளதாம். அது என்ன திட்டம் என்பதை நம்மிடம் விரிவாக சொன்னார், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ம.நீ.ம.வின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர்.
 

mnm



"தேர்தல் வியூகம் வகுத்துத் தரும் “பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’கார்ப்பரேட் கம்பெனி தான் இப்போது எங்களது கட்சித் தலைவரின் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக ஐ-பேக் கம்பெனியைச் சேர்ந்த 150 பேர் கொண்ட டீம், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கள மிறங்கியிருக்கிறது. (இதற்காக 30 கோடி ரூபாய் அட்வான்ஸாக வாங்கியிருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர்). ஒன்றிய, நகர, அளவில் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள், சமூக சேவையில் ஈடுபாடு உள்ளவர்களை கணக்கெடுக்கிறார்கள். எங்களைப் போன்ற மாவட்டப் பொறுப்பாளர்களிடமும் அவர்களைப் பற்றி கிராஸ்செக் பண்ணுகிறார்கள்.


அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளில், கட்சிக்காக உழைத்தும், மக்களிடம் செல்வாக்கு பெற்றும், இப்போது எந்தப் பதவியிலும் இல்லாமல் இருப்பவர்களிடமும் சகஜமாக பழகி, தங்களின் வளையத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். மக்கள் செல்வாக்கு இருந்தாலும் பொருளாதார செல்வாக்கு உள்ளவர்களைத்தான் முக்கால்வாசி தங்களது செலக்ஷன் லிஸ்டில் சேர்க்கிறார்கள்.

அந்த வகையில் பொருளாதாரத்தில் செம ஸ்ட்ராங்காக இருப்பவர்தான் இப்போது பொ.செ.வாக நியமிக்கப்பட்டுள்ள வி.உமாதேவி. இவர் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் -ராமலிங்கா மில்ஸ் குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சுப்புராஜின் மூத்த மருமகள். அதேபோல் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.சந்திரசேகர், திருப்பூரைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர். மற்ற பொ.செ.க்களான அருணாசலம், ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது போன்றோரும் வசதி படைத்தவர்கள்தான். இப்படிப்பட்ட பணக்காரர்களின் உதவியுடன், எங்களைப் போன்ற பண வசதி இல்லாத பழைய நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் மூலம் கிராம லெவலிலும் கட்சியைக் கொண்டு போய்ச் சேர்க்கும் திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறார் எங்கள் தலைவர்''’என்றார்.

  mnm



தென்மாவட்ட பொறுப்பாளர் ஒருவரின் கருத்தோ வேறுவிதமாக உள்ளது. ""பணம் இருப்பவர்கள் கட்சிக்குத் தேவைதான். ஆனால் அவர்களை அணுகுவது அவ்வளவு எளிதில்லையே. இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகள் கூட, உறுப்பினர்கள் சேர்க்கைப் பட்டியலை மா.செ.க்கள், கட்சித் தலைமையிடம் கொடுக்கும்போது ஒரு உறுப்பினருக்கு 25 ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால் எங்கள் கட்சியிலோ மாவட்டப் பொறுப்பாளர்கள், சென்னை போன்ற மாநகரங்களில் இருக்கும் பகுதிப் பொறுப்பாளர்கள், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்த்து பட்டியலைக் கொடுக்கும்போது தலைமையிடம், ஒரு உறுப்பினருக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்பதுதான் சிரமமாக உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட பணக்காரர்களுக்கென்று ஒரு கோஷ்டி உருவாகி, பழைய நிர்வாகிகளை சங்கடப்படுத்துகிறது.


இதுக்கு உதாரணம், சில மாதங்களுக்கு முன்புவரை, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் சவுரிராஜன். கடந்த ஜூலை 26-ஆம் தேதி சென்னை ராஜ் பார்க் ஹோட்டலில் நடந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கூட, சவுரிராஜனை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என தீர்மானம் போட்டோம், ஆனால் அது நடக்கவில்லை. இதெல்லாம் எங்கள் தலைவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?''’என்றார். அடுத்த தேர்தலுக்கு முன், தன் கட்சி பலத்தை உயர்த்த மெகா திட்டத்துடன் நகர்கிறார் "பிக்பாஸ்' கமல்.