Skip to main content

5 ரூபாய்க்கு வேலைக்கு வந்தவர் ஆற்காட்டை கைப்பற்றியது எப்படி? - சுதந்திரப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை விளக்கும் ரத்னகுமார்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

writer rathnakumar

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ராபர்ட் க்ளைவ் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”நான் ராபர்ட் க்ளைவின் மிகப்பெரிய ரசிகன். அலெக்சாண்டர், நெப்போலியன் போல ராபர்ட் க்ளைவும் வரலாற்று நாயகன். அடிதடி, வெட்டுக்குத்து எதற்கும் அஞ்சாதவன் ராபர்ட் க்ளைவ். ஹைதர் அலி வேகமாக முன்னேறுவதில் வல்லவர். மருதநாயகம் வியூகம் வகுப்பதில் வல்லவர். இந்த இரண்டையும் ஒருசேரப் பெற்றவர் ராபர்ட் க்ளைவ். வெறும் 500 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஆற்காட்டைப் பிடித்துக்காட்டியவர். 

 

இந்தியா பற்றிய அறிவை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில்தான் நான் கற்றுக்கொண்டேன் என்று  ராபர்ட் க்ளைவ் பதிவு செய்துள்ளார். அவர் இந்தியாவிற்கு வந்தபோது அவருடைய வயது 19. கிளர்க் வேலைக்காக வந்தவருக்கு 5 ரூபாய் சம்பளம். பின், சில காலம் குடோனில் கணக்குவழக்கு எழுதியுள்ளார். அதன் பிறகு ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் இருந்த நூலகத்தில் புத்தகத்தைத் துடைத்து வைக்கும் வேலை பார்த்திருக்கிறார். 

 

அந்த நூலகத்தில் வெள்ளைக்காரர்கள் எழுதிய புத்தகம்தான் இருக்கும். கடுக்காய் மையைப் பயன்படுத்தித்தான்  வரலாற்றைப் புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். அதை விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை படித்துத்தான் இந்தியர்களை அடையாளம் கண்டதாக  ராபர்ட் க்ளைவ் பதிவுசெய்துள்ளார். வெறும் கிளர்க்காக பணியில் சேர்ந்த  ராபர்ட் க்ளைவ், ஆறு வருடங்களிலேயே லாரன்ஸ் ஸ்டிங்கர் மூலமாக ஆர்மி கேப்டனாகிவிடுகிறார்.  

 

திருச்சியில் ஆற்காடு நவாப் முகமது அலி சண்டை செய்துகொண்டு இருக்கிறார். அவருக்குப் பிரிட்டிஷ் ஆதரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரெஞ்சு படைகள் சந்தா சாஹேப்பிற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு இருந்தன. அந்த சமயத்தில் பிரெஞ்சு படைகளை ஒப்பிடும்போது பிரிட்டிஷ் படைகள் சற்று பலவீனமாக இருந்தன. இந்த திருச்சி முற்றுகையில் சந்தா சாஹேப் தோல்வியடைகிறார். அதற்கு முக்கிய காரணம் ராபர்ட் க்ளைவ் வகுத்த நேர்த்தியான போர் வியூகம்தான். 

 

இந்தச் சண்டையின்போது பிரெஞ்சு படைகள் வலுவுடன் இருந்ததால் சந்தா சாஹேப்பை தாக்க வேண்டுமா என்று பிரிட்டிஷுக்கு யோசனை இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்தான், சந்தா சாஹேப்பை வீழ்த்த இங்குதான் அடிக்க வேண்டும் என்றில்லை; ஆற்காட்டிலும் அடிக்கலாம் என்று யோசனை கூறுகிறார். ஆற்காட்டுக் கோட்டையில் சந்தா சாஹேப்பின் மொத்த குடும்பமும் இருந்தது. அப்போது ராபர்ட் க்ளைவ்வுக்கு 30 வயதுக்குள்தான் இருக்கும். பிரிட்டிஷ் உயரதிகாரிகள் அந்த யோசனையை ஏற்கவில்லை. நான் செய்துகாட்டுகிறேன், எனக்கு ஒருநாள் அவகாசமும் 500 பேரும் கொடுங்கள் என ராபர்ட் க்ளைவ் கேட்டுள்ளார். தான் சொன்னது போலவே 500 பேரோடு சென்று ஒரு குண்டைக்கூட வெடிக்கச் செய்யாமல் ஆற்காட்டைக் கைப்பற்றிக்காட்டினார் ராபர்ட் க்ளைவ்”.