2004 ஆண்டு, அதுதான் கர்நாடகாவிற்கு ஆரம்பித்தது. அன்று தொடங்கியது, இடையில் சித்தராமையாவால் நின்று பின் இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. ஆம் அதுதான் நிரந்தர ஆட்சி முக்கியமாக 2004 லிருந்து கர்நாடகாவை ஒருநபர் ஐந்தாண்டுகள் ஆண்டதாக வரலாறு இல்லை 2013வரை. இன்று மீண்டும் அதே நிலை ஏற்படுமோ என்ற குழப்பத்தில் கர்நாடக மக்கள் இருக்கின்றனர்.
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதுவரை இல்லாத விதமாக பா.ஜ.க. 79, காங்கிரஸ் 65, மதச்சார்பற்ற ஜனதா தளம் 58 இடங்களையும் பெற்றது. காங்கிரஸும், ம.ஜ.த.வும் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தரம் சிங்கும், துணை முதல்வராக சித்தராமையாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆட்சி 2006 வரையிலும்தான் நீடித்தது. தேவகௌடாவின் மகன் குமாரசாமி 46 எம்.எல்.ஏ.களுடன் பா.ஜ.க.வுடன் இணைந்தார். இதனால் 2006ன் தொடக்க காலத்தில் குமாரசாமி முதல்வராகவும், எடியூரப்பா துணைமுதல்வராகவும் ஆட்சியில் அமர்ந்தனர். இவர்களுக்குள் 20 மாதங்கள் நான், 20 மாதங்கள் நீங்கள் என்ற உடன்படிக்கை இருந்தது. முதல் இருபது மாதங்கள் குமாரசாமி ஆட்சி புரிந்தார். 2007 அக்டோபரில் மீண்டும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது. 2006ல் போட்ட உடன்படிக்கையை குமாரசாமி மீறினார். அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா முதலமைச்சராக ஆட்சிபுரிய குமாரசாமி அனுமதிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின் 2008ல் தேர்தல் நடைபெற்றது.
2008 தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றது 110 இடங்களை கைப்பற்றியது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தென்னிந்தியாவில் பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சியமைத்தது அப்போதுதான். ஆனால் அந்த ஆட்சிக்காலம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. எடியூரப்பா நிறைய கலகங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் முக்கியமானது ரெட்டி சகோதரர்களின் பெல்லாரி சுரங்க ஊழல் மற்றும் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குகள். எடியூரப்பா வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து சதானந்த கௌடா பதவியேற்றார். விரைவிலேயே கௌடாவிற்கும், எடியூரப்பாவிற்கும் சண்டை தொடங்கியது. அது கிளர்ச்சிவரை சென்றது. கௌடாவை பதவியிலிருந்து நீக்காவிட்டால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார், இதனால் கட்சி மேலிடம் அவரை விடுவித்தது. அவரைத்தொடர்ந்து மற்றொரு லிங்காயத் தலைவரான (பா.ஜ.க.வில்) ஜெகதீஷ் ஷெட்டர் பதவியேற்றார். அந்த ஐந்து ஆண்டுகளிலேயே மூன்று முதலமைச்சர்கள் பதவியேற்றனர்.
அதன்பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. பெரும்பான்மையான இடங்களைப்பெற்று பா.ஜ.க.வை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது. உடுப்பி சிம்மகளூரில் நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது.
2012ம் ஆண்டு எடியூரப்பா பா.ஜ.க.விலிருந்து விலகி கர்நாடகா ஜனதா பக்ஷா என்ற புதுக்கட்சியைத் தொடங்கினார். அதற்குமுன் 2011ம் ஆண்டு ஸ்ரீராமலு பா.ஜ.க.விலிருந்து விலகி பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த பிரிவுகளெல்லாம் பா.ஜ.க.வை பலவீனப்படுத்தியது.
அடுத்து 2013 தேர்தல் 122 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலத்திற்கு பின்பு நிலையான ஆட்சியை வழங்கியவர் இவர்தான். தற்போது 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலும் இழுபறியிலேயே முடிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், இந்தமுறை நிலையான ஆட்சி நடக்குமா என்று… இதே மனநிலையில்தான் கர்நாடக மக்களும் இருக்கின்றனர்.