அறிவாலயத்தில் 17ம் தேதி தொடங்கிய விருப்ப மனு வாங்கும் நிகழ்வின் முதல் 4 நாட்களிலேயே 4,200-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கும் மேற்பட்டோர் அந்தந்த நாட்களிலேயே பூர்த்திசெய்து ஒப்படைத்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் சீட் கேட்கும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விருப்பமனு தருவதற்கு பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பலரும் தங்களுக்காக பணம் கட்டுவதுடன் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி பெயரிலும் பணம் கட்டுகின்றனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சீட் கேட்கும் ஆர்வமும் எண்ணிக்கையும் இந்தமுறை அதிகரித்திருக்கிறது. தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், எட்டாவது முறையாக மீண்டும் காட்பாடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அவரது வயதைக் குறிக்கும் வகையில் 83 பேர் அவருக்காக மனு போட தயாராகியுள்ளனர்.
அதே நேரத்தில், 83 வயதாகும் அவர் இந்தமுறை போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என மாவட்ட தி.மு.க.வினர் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தனர். அத்துடன் 25 இளைஞர்கள் காட்பாடி சீட் கேட்டு விண்ணப்பித்திருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்த துரைமுருகன் தரப்பு, இளைஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளது.
அதேபோல, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகரும் கட்சியின் மூத்த தலைவருமான ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், தி.மு.க.வின் இளம் தொழிலதிபரான அஜய்படையப்ப சேதுபதியும் குறிவைத்திருப்பதை ஐ-பேக் மட்டுமின்றி, மாநில உளவுத்துறையும் கவனித்திருந்தது. இந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், ஆயிரம் விளக்கில் உதயநிதியும் போட்டியிட வேண்டும் என பணம் கட்டியுள்ள அஜய்சேதுபதி, அம்பாசமுத்திரத்திற்காக மனு கொடுத்திருக்கிறார். இது, ஆவுடையப்பனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கவலையைக் கொடுத்துள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு 98 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் இன்பதுரையிடம் தோல்வியடைந்த தி.மு.க.வின் அப்பாவு, இன்பதுரைக்கு எதிராக போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட அப்பாவு திட்டமிட்டிருந்தாலும், கடந்த 6 மாதமாக ராதாபுரம் தொகுதியை வலம் வந்து, மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீனஸ் வீர அரசும் காய்களை நகர்த்தி, விருப்ப மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.
கோவையின் சூலூர் தொகுதிவாசியான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. புதியவர்களும் இளைஞர்களும் சூலூரைக் குறிவைப்பதால், இடம் மாறி சிங்காநல்லூரைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், சிங்காநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான இளைஞர் கார்த்திக்கு மக்களிடம் நல்ல பெயர். இவரிடமிருந்து தொகுதியைக் கைப்பற்ற பழனிச்சாமியால் முடியாது என்கின்றனர் அறிவாலயத் தரப்பினர்.
அதேபோல, பொள்ளாச்சியைப் பிடிக்க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தொகுதியில் இரண்டுமுறை வேட்பாளராகி தோற்றுப்போன தமிழ்மணி, நகரப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், வடக்கு ஒ.செ. மருதவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஆகியோரிடையே பந்தயம் விறுவிறுப்பாகியிருக்கிறது. தமிழ்மணி இரண்டுமுறையும், அவரது தந்தை ராஜு மூன்றுமுறையும் என இத்தொகுதியில் ஒரே குடும்பத்துக்கு 5 முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் தமிழ்மணிக்கு வாய்ப்பு எனில் கட்சியில் அதிருப்தி அதிகமாகும் என்கிறார்கள்.
தென்றல் செல்வராஜுக்கு ஆதரவு இருக்கும் அளவிற்கு, எதிர்ப்பும் இருக்கிறது. டாக்டர் வரதராஜனுக்கு, சாதி, வசதி வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், தென்றல் செல்வராஜின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு அதிகம். சீனியர்களைப் புறந்தள்ளி உதயநிதி மூலம் தொகுதியைக் கைப்பற்றும் பகீரத முயற்சியில் இருக்கிறார் சபரிகார்த்திகேயன். ஆனால், அவரது தாத்தா நெகமம் கந்தசாமி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு கொடுத்த நெருக்கடிகள் இவருக்கு எதிரான சலசலப்பை உண்டாக்குகின்றன.
வடக்கு ஒன்றியச் செயலாளர் மருதவேல், அறிவாலயத்தில் கோலோச்சும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சிலரின் தயவால் தொகுதியில் வாய்ப்பு பெற முயற்சித்துள்ளார். ஆனால், கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளைக் கொட்டச் செய்ததில் அவரது பெயர் மக்களிடம் எதிர்மறையாக உள்ளது. இளைஞரான மன்றாம்பாளையம் மகேந்திரன் சீட் கேட்பது சீனியர்களை அதிர வைக்கிறது.
இப்படி தமிழகம் முழுவதும் சீனியர்களை எதிர்க்கும் இளைஞர்கள், சீட் கேட்டு விருப்ப மனுக்கள் மூலமாக அறிவாலயத்தின் கதவுகளைத் தட்டி வருகிறார்கள்.