உலகம் போற்றிடும் இசை மாமேதைகளில் ஒருவர், பலருடைய துயரை தனிமையை மறக்கடிப்பவர், லுட்விக் வான் பீத்தோவன் என்ற பெயரைகொண்ட மேஸ்ட்ரோ. கடந்த 1770ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்போது ஜெர்மனியாக இருக்கும் பகுதியில் பிறந்தவர். இவர் பிறந்த தேதி அறியப்படவில்லை. ஆனால், ஞானஸ்நானம் தரவுகளின்படி டிசம்பர் 16ஆம் தேதி என்று சொல்லப்படுகிறது.
இசை குடும்பத்தில் பிறந்த பீத்தோவனின் இசை திறமை என்ன என்பது அவருடைய தந்தைக்கும் தாத்தாவுக்கு சிறு வயதிலேயே புரிந்திருக்கிறது. அவருடைய நான்கு வயதிலிருந்தே மியூசிக் கீபோர்ட் வாசிக்க தொடங்கிவிட்டார். தரையில் இரண்டடிக்கு டேபிள் வைத்து அதில் மேல் ஏறி நின்றால்தான் அப்போது அவரால் கீயை தொட்டு வாசிக்கவே முடியும். வயலின் வயலோ எனப்படும் இசைக்கருவிகளையும் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
பீத்தோவன் சிறுவயதில் இசை பயிற்சி எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது கண்டிப்பான தந்தைதான். ரொம்பவே அழுத்தம் கொடுத்து கண்டிப்புடன் இசையை பீத்தோவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். லுட்விக் பள்ளி படிப்பை அவரது குடும்பத்தினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இசைத் துறையில் பீத்தோவன் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் பெருக்கல் வகுத்தல்கூட தெரியாமல் போனது. தனது 7வது வயதில் மேடையில் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இந்த குட்டி ஜீனியஸை இசை ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வளர்த்தனர். 12வது வயதில் அனைவராலும் கவனம்பெற்ற இசைக்கலைஞராகினார். சிறு வயது முதலே கல்லீரல் நோய், பெருங்குடல் அழற்சி, வாதநோய், தோல் நோய்கள், கண், இதய பாதிப்பு, என பலவற்றால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அவரது இசைப் பயணம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.
பீத்தோவனுக்கு 16 வயது இருக்கும்போது மேற்கத்திய இசையில் சிறப்பாக விளங்கிய ஆஸ்திரியாவின் தலைநகராக வியன்னாவுக்கு சென்றுவிட்டார். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை கற்றார். இதுமட்டுமல்லாமல் அங்கு மோசார்ட் என்னும் மற்றொரு இசை மேதையிடம் பீத்தோவன் பணியாற்றியதாகவும் பேச்சுகள் உண்டு. பீத்தோவன் இசைத்துறையில் ஒரு நாள் ஜொலிப்பார்’ என்று மோசார்ட் தனது நண்பர்களிடம் சொன்னதாகவும் சில தகவல்கள் சொல்கின்றன.
ஆனால், இது உண்மையானது. பீத்தோவனின் 45 வருட இசை வாழ்க்கையில் 700க்கும் மேலான இசை குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் ஒன்பது சிம்பொனி, 32 பியானோ சோனாடோஸ் மற்றும் ஒரு ஒபேரா உள்ளிட்டவை அடங்கும். அவருடைய முப்பது வயதிற்குள் செவிதிறன் குறைந்துவிட்டபோதிலும் இசையமைத்துகொண்டே இருந்தார். அவருடைய காதினுள் ஒலித்துகொண்டிருக்கும் அந்த ஒலியை கேட்காமல் தவிர்ப்பதற்காக பெரும்பாலும் பஞ்சு வைத்து அடைத்திருக்கிறார், பொதுவெளிக்கே வராமல் வீட்டிலேயே அடைபட்டிருந்திருக்கிறார். அவருடைய நாற்பத்தி ஐந்தாவது வயதில் முற்றிலுமாக செவிதிறனை இழந்துவிட்டார் பீத்தோவன். ஆனால் அதுவும் அவருடைய இசை உருவாக்கத்திற்கு தடையாக இல்லை. மனதிலேயே இசையமைத்து அதை இசைக்குறிப்பாக எழுதிவைத்துள்ளார். பயன்படுத்தும் பியானோவால் தரையில் உருவாகும் அதிர்வுகளை உணர்ந்து இசையை கேட்டு க்ளாஸிக் இசைகளை உருவாக்கினார் பீத்தோவன்.
பீத்தோவனின் ஒன்பதாவதும் இறுதி சிம்பொனியுமான ‘ஓடே டு ஜாய்’ என்னும் இசையை அவர் மேடையில் அரங்கேற்றியபோது, அதை ரசித்து கொண்டாடிய மக்களின் கைதட்டல் ஓசையை பீத்தோவனால் கொஞ்சம் கூட அவரால் கேட்கமுடியவில்லை. அதை பீத்தோவனால் பார்க்கதான் முடிந்தது. அவருடைய இறுதிகட்டத்தில் செவிதிறன் முற்றிலுமாக குறைந்துவிட்டதால் தனது ரசிகர்களிடம் நோட்டு புத்தக்கத்தில் எழுதிதான் உரையாடியுள்ளார் இசைமேதை பீத்தோவன். இதுபோல அவருடைய ரசிகர்களிடம் உரையாடிய 400 டைரிகளை சேகரித்து வைத்துள்ளார். இப்படிப்பட்ட மனிதன் பிறந்து 250 ஆண்டுகளாகிவிட்டன.
பீத்தோவனை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள், அதுகூட அவசியமில்லை, அவரது இசையை கேட்க தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் எத்தனை துயர் இருந்தாலும் எவ்வளவு வெறுமை உங்களை ஆட்கொண்டாலும் அதிலிருந்து விலகி மன அமைதி கிடைக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டச் செய்வார் பீத்தோவன்.