Skip to main content

பாரத் பெயர் மாற்ற பல்லாயிரம் கோடி; பகீர் கிளப்பும் மோடி திட்டம் - விளக்குகிறார் பால்கி 

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Balki  interview

 

மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நம்மோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் பால்கி உரையாடுகிறார்

 

இந்தியா என்கிற பெயரை பாரத் என மாற்றப்போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜி20 நிகழ்வுக்கான அழைப்பிதழில் தன்னிச்சையாக 'President of Bharat' என குறிப்பிட்டது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் முதலமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாரத் என மாற்றியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியாவின் பெயரை மாற்றுவதால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும். 

 

தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக யாரையும் கலந்தாலோசிக்காமல் இவ்வாறு நடந்துகொள்வது தவறானது. பெயரை மாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்தியாவின் பெயரை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கூட்டியுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று சொல்கிறார்கள். முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடைமுறை இது. 

 

இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், இவர்களுடைய செயல்பாடுகள் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளுடனும் விவாதிக்கப்பட்டதா? இந்திய அரசுக்கு இது சரியான நடைமுறை தானா? பொது சிவில் சட்டம் மூலம் மதச்சார்பின்மையை சிதைக்க இந்த அரசு நினைக்கிறது. இந்த இரண்டு அஜெண்டாக்களையும் வைத்துக்கொண்டு தான் இந்த சிறப்பு கூட்டத்தை இவர்கள் கூட்டுகிறார்கள். 

 

அதிபர் முறைக்கு வழிவகுக்கும் வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். அதானியின் பினாமிகளின் மூலம் வெளிநாட்டில் பல நூறு கோடிகள் முதலீடு செய்யப்படுகின்றன. அந்த ஊழலுக்கு இந்த அரசு துணைபோகிறது. கற்பனை மூலதனம் மூலமாக முதலீடு செய்து, வரைமுறையற்ற உயரிய லாபம் பெறும் வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதானிக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது இந்த அரசு. அதானிக்கு துணையாக இருப்பவர்களுக்கு உயர்ந்த அரசுப் பதவிகளை வழங்குகிறது.